தமிழகத்தில் 30... மொத்தத்தில் 300... கோவையில் அமித் ஷா சொன்ன வெற்றிக் கணக்கு! | Amith sha campaign in covai

வெளியிடப்பட்ட நேரம்: 08:50 (03/04/2019)

கடைசி தொடர்பு:10:41 (03/04/2019)

தமிழகத்தில் 30... மொத்தத்தில் 300... கோவையில் அமித் ஷா சொன்ன வெற்றிக் கணக்கு!

``தேசிய ஜனநாயகக் கூட்டணி 300-க்கும் அதிகமான தொகுதிகளைக் கைப்பற்றி மீண்டும் பி.ஜே.பி ஆட்சி அமைக்கும்" என்று கோவையில் நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் அமித் ஷா தெரிவித்தார். 

அமித்ஷா கோவை வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன்

தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் கோவை சிவானந்தா காலனியில் நடைபெற்றது. பி.ஜே.பி  தேசியத் தலைவர் அமித் ஷா, அ.தி.மு.க அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். அமித் ஷா, புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு வணக்கும் செலுத்தி பேச ஆரம்பித்தார், ``பாகிஸ்தானில் இந்தியாவின் பெருமையை நிலைநாட்டிய அபிநந்தன் பிறந்த மண்ணில் பேசுவதில் நான் மிகவும் பெருமை கொள்கிறேன். எம்.ஜி.ஆருக்கும், ஜெயலலிதாவுக்கும் எனது வணக்கங்கள். இந்தத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி தமிழகத்தில் 30-க்கும் அதிகமான இடங்களைக் கைப்பற்றும் எனத் தகவல் கிடைத்திருக்கிறது.

அமித் ஷா கோவை சி.பி.ராதாகிருஷ்ணன்

தி.மு.க-காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் இருந்தபோது, 13-வது நிதிக் குழுவில் தமிழகத்துக்கு 94,540 கோடி ரூபாய் மட்டுமே கொடுத்துள்ளனர். ஆனால், பி.ஜே.பி அ.தி.மு.க-வுடன் கூட்டணியில் இல்லாதபோதும்கூட தமிழகத்துக்கு 5 லட்சத்து 42 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கியிருக்கிறது. ஸ்மார்ட் சிட்டி, தேங்காய் ஏற்றுமதி அதிகரிக்க திட்டம், திருப்பூரில் சுத்திகரிப்பு நிலையம், கோவையில் ராணுவத் தளவாட தொழிற்சாலை கொண்டுவந்தது சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு எம்.ஜி.ஆர் பெயர் சூட்டியது எனப் பல்வேறு நலத்திட்டங்களை பி.ஜே.பி தமிழகத்துக்கு வழங்கியுள்ளது.

காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது, பாகிஸ்தான்காரர்கள் நமது ராணுவ வீரர்களின் தலையை வெட்டிச் சென்றபோது பதிலடி கொடுக்காமல் இருந்தார்கள். ஆனால், பி.ஜே.பி ஆட்சியில் புல்வாமா தாக்குதல் நடந்த 12 நாள்களில் மோடி பதிலடி கொடுத்தார். பப்பு ராகுல் காந்தியும், ஸ்டாலினும் பாகிஸ்தான் மீது தாக்குதல் வேண்டாம், பேச்சுவார்த்தை  நடத்த வேண்டும் எனச் சொல்கிறார்கள். கோவை மக்களே… உங்களைப் பார்த்துக் கேட்கிறேன். சொல்லுங்கள், நம்முடைய 40 ராணுவ வீரர்களைக் கொன்றவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டுமா அல்லது பதிலடி தர வேண்டுமா?” எனக் கேள்வி எழுப்பினார். 

அமித் ஷா கோவை பி.ஜே.பி வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன்

நரேந்திர மோடியைத் தவிர வேறு யாரும் நாட்டுக்குப் பாதுகாப்புத் தர முடியாது எனக் கூறிய அவர், இந்தியாவுக்கு ஒரு பிரதமர் வேண்டும், காஷ்மீருக்கு ஒரு பிரதமர் வேண்டும் என உமர் அப்துல்லா சொல்கிறார், இதை ராகுல் ஏற்கிறாரா எனக் கேள்வி எழுப்பினார். மேலும் பா.ஜ.க இருக்கும் வரை காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதியாக இருக்கும் என உறுதி அளித்தார்.

ஈ.பி.எஸ், ஓ.பி.எஸ் தலைமையில் வலுவான கூட்டணி அமைத்துள்ளோம், இந்திய அளவில் நம் கூட்டணி 300-க்கும் அதிகமான தொகுதிகளைக் கைப்பற்றி மீண்டும் ஆட்சி அமைக்கும். இதோடு முடிந்துபோகும் கூட்டணி அல்ல இது. சட்டமன்றத் தேர்தலிலும் இந்தக் கூட்டணி தொடரும். காங்கிரஸ் மற்றும் தி.மு.க வேட்பாளர் பட்டியலைப் பார்த்தேன். கனிமொழி மற்றும் ராசா மீது ஊழல் வழக்கு உள்ளது கார்த்தி சிதம்பரம் தற்போது பெயிலில்தான் வெளியில் இருக்கிறார். இவர்களையெல்லாம் வேட்பாளர்களாக அறிவித்துள்ளார்கள் என்றவர் இறுதியாக கோவை தொகுதிக்கு சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்து மத்தியில் மோடி ஆட்சி அமைய ஒத்துழையுங்கள்"என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க