``நீங்க கடையில டீ குடிக்கிறீங்க... ஆனா நாங்க டீக்கடையே நடத்தியிருக்கோம்!”- டயலாக்கை மாற்றாத ஓ.பி.எஸ் | Ops campaign in covai

வெளியிடப்பட்ட நேரம்: 09:35 (03/04/2019)

கடைசி தொடர்பு:10:45 (03/04/2019)

``நீங்க கடையில டீ குடிக்கிறீங்க... ஆனா நாங்க டீக்கடையே நடத்தியிருக்கோம்!”- டயலாக்கை மாற்றாத ஓ.பி.எஸ்

``கலர் கலராக சட்டை போட்டார்.  ஆட்டோவில் போனார், சைக்கிளில் சுற்றினார், கரும்புத் தோட்டத்தில் ரோடு போட்டு நடந்தார்.  கடைசியில்  டீக்கடையில்  டீ குடித்தார். ஆனால், நாங்க டீக்கடையே நடத்தியிருக்கோம். எங்களிடம் ஸ்டாலின் பாச்சா பலிக்காது. அ.தி.மு.க-வின் பேஸ்மட்டமும் ஸ்ட்ராங்... பில்டிங்கும் ஸ்ட்ராங்.. ஆனால், ஸ்டாலினுக்கு பேஸ்மட்டமும் வீக். பில்டிங்கும் வீக்.!” என்று கோவை பிரசாரத்தில் ஸ்டாலினை ஏகத்துக்கும் ஏகிறி அடித்தார் ஓ.பி.எஸ்.

ஓ.பி.எஸ் கோவை சி.பி.ராதாகிருஷ்ணன்

கோவை நாடாளுமன்றத் தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சார்பாக பி.ஜே.பி வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து துணை முதல்வர் ஓ.பி.எஸ் கோவை ராமநாதபுரம் பகுதியில் நேற்று (2.4.2019) பிரசாரம் மேற்கொண்டார். காலை 10.30 மணிக்கு பிரசார இடத்துக்கு ஓ.பி.எஸ் வந்துவிடுவார் என்று சொல்லப்பட்டது. 9 மணி முதலே கூட்டம் கூடத் தொடங்கியது. ராமநாதபுரம் பகுதியிலிருந்து அவ்வளவாக கூட்டம் சேராது என்பதால், கோவையில் பல்வேறு பகுதிகளிலிருந்து வேன் மூலம் ஆட்களை  ‘அள்ளி’ கொண்டு வந்திருந்தன அ.தி.மு.கவும் பி.ஜே.பியும். காலையிலேயே வெயில் தன் உச்சத்தைக் காட்டத் தொடங்கியதால் பெண்களும் வயதானவர்களும் வெயில் தாங்க முடியாமல் வெம்பினார்கள். இதோ வருகிறார்..  வந்துவிட்டார்... என்று ஒரு மணி நேரத்துக்கும் மைக்கில் சொல்லிக்கொண்டிருந்தவருக்கு வாய் வலி வந்ததே தவிர ஓ.பி.எஸ் வரவில்லை. ஒருவழியாக 11.30 மணிக்கு வந்து சேர்ந்தார்  ஓ.பி.எஸ்.

ஓ.பி.எஸ் கோவை சி.பி.ராதாகிருஷ்ணன்

அப்போது பேசிய அவர்,  ``சி.பி.ராதாகிருஷ்ணன் எம்.பியாக தேர்வு செய்யப்பட்ட பிறகு,  இந்தத் தொகுதியின் தேவைகளை அறிந்து அவற்றை நிறைவேற்றி வைப்பார். அடிப்படை பிரச்னைகளை தீர்த்து வைப்பார். மத்திய, மாநில அரசின் திட்டங்களைக் கொண்டு வந்து சேர்ப்பதிலும் தலைசிறந்த நாடாளுமன்ற உறுப்பினராக செயல்படுவார். நாங்கள் அமைத்துள்ளது மிகப்பெரிய கூட்டணி. கடந்த காலங்களில் தி.மு.க-வும் ஆண்டுள்ளது. யாருடைய ஆட்சியில் பல நல்ல திட்டங்கள் நிறைவேற்றப்பட்டது என்பதை நீங்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும். ஜீவாதார உரிமைகளுக்கு பிரச்னை வரும்போது அதைப் பாதுகாக்கும் பொறுப்பில் இருந்துகொண்டு, அதைச் செய்யத் தவறியவர்கள் யார் என்பதை நீங்கள் எண்ணிப்பார்த்து, நீங்கள் எஜமானர்களாக இந்தத் தேர்தலில் வாக்களிக்க வேண்டும். 

தி.மு.க-வின் ஆட்சியை முடிவுக்கு கொண்டுவர கோவையில் முதல் கூட்டத்தை நடத்தினார் ஜெயலலிதா. முதன் முதலில் ஜனநாயகம் இங்குதான் வேரூன்றியது. கோவை மக்கள் கொடுத்த ஆதரவு திருச்சி, மதுரை கடந்து சுனாமியாக மாறி, தி.மு.க-வை கடலில் மூழ்கடித்துவிட்டது. தொடர் தோல்விகளைச் சந்தித்துக் கொண்டிருக்கும் தி.மு.கவால் கடலிலிருந்து எழுந்திருக்க முடியவில்லை. மாநிலத்தில் ஆண்டபோதும் சரி, மத்திய அரசில் அங்கம் வகித்தபோதும் சரி, தி.மு.க  மக்களுக்கு நல்ல திட்டங்களைக் கொண்டுவரவில்லை. தி.மு.க அறிவித்த, ‘சேதுசமுத்திர திட்டம்’ தோல்வித் திட்டம் என்று ஜெயலலிதா சொன்னார். என்ன நடந்தது... 40 ஆயிரம் கோடி ரூபாயைக் கடலில் கொண்டுபோய் போட்டார்களோ... யாரிடம் போட்டார்களோ தெரியவில்லை.

ஓ.பி.எஸ் கோவை சி.பி.ராதாகிருஷ்ணன்

 கருணாநிதி முதல்வராக இருந்த காலத்தில் காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை மத்திய அரசின் அரசாணையில் இடம்பெறச் செய்யக்கோரி  பலமுறை ஜெயலலிதா வலியுறுத்தினார். ஆனால், அது செவிடன் காதில் ஊதிய சங்காக மாறிப்போனது. அப்போது பிரதமராக இருந்த மன்மோகன்சிங்’கிற்கும் காது கேட்கவில்லை. 13 ஆண்டுகளுக்குப் பிறகு, காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பை போராடி மத்திய அரசிதழில் வெளியிடச் செய்தார் ஜெயலலிதா. அதற்காக தஞ்சையில் டெல்டா விவசாயிகள் நடத்திய நன்றி தெரிவிப்புக் கூட்டத்தில், எனது 33 ஆண்டுகால அரசியல் வாழ்வில் இதற்காக நான் பெருமைப்படுகிறேன்’ என நெகிழ்ந்தார் ஜெயலலிதா. அவர், ஆரம்பித்த 2023 தொலைநோக்குத் திட்டத்தின் பலனை இப்போது பெற்றுக்கொண்டிருக்கிறோம். 2023-க்குள் தமிழகம் குடிசைகளே இல்லாத மாநிலமாக மாற்றப்படும். தமிழகத்தில் சாதிச் சண்டையும் இல்லை; மதச் சண்டையும் இல்லை. சிறுபான்மையினருக்கு இந்த ஆட்சி அரணாக இருக்கிறது. மத்தியில் கடந்த ஐந்து ஆண்டுகளாக பிரதமரும் சிறப்பான ஆட்சியைத் தந்துகொண்டிருக்கிறார். இந்தியாவின் எந்தப் பகுதியிலும் சாதி, மதக் கலவரங்கள் இல்லை. 

ஜல்லிக்கட்டு பிரச்னைக்கு காரணமே தி.மு.கவும், காங்கிரஸும்தான் அவர்கள் கூட்டணி ஆட்சியில் காளையை வனவிலங்குப் பட்டியலில் சேர்த்ததால்தான் ஜல்லிக்கட்டுக்குச் சிக்கல் உண்டானது. நான் முதலமைச்சராக இருந்தபோது, இந்தப் பிரச்னை பற்றி பிரதமர் மோடியைச்  சந்தித்து எடுத்துச் சொன்னதும், ஒரே நாளில் 5 துறைகளில் அனுமதி பெற்றுத் தந்தார். இப்போது தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டு ஜல்..ஜல்’னு நடக்கிறது. என்னை எல்லோரும் ஜல்லிக்கட்டு நாயகன் என்கிறார்கள். யாரும் அப்படிச் சொல்ல வேண்டாம். எங்கேயாவது ஜல்லிக்கட்டில் இறக்கிவிட்டு காளையை அடக்கச் சொல்லிவிடப் போகிறார்கள்'' என்று வெயிலில் காய்ந்து கொண்டிருந்தவர்களைச் சிரிக்க வைக்க முயற்சி செய்தார்.

ஓ.பி.எஸ் கோவை சி.பி.ராதாகிருஷ்ணன்

தொடர்ந்து பேசிய ஓ.பி.எஸ், ``கேரளாவில் ராகுல் காந்தி போட்டியிடுகிறார். அங்கே கம்யூனிஸ்ட் ஆட்சி நடக்கிறது. ஆனால், இங்கே கூட்டணி வைத்திருக்கிறார்கள். கம்யூனிஸ்டும், காங்கிரஸும் மாநிலத்துக்கு ஒரு கொள்கை வைத்துள்ளார்கள். அடிக்கிற வெயிலில் ஸ்டாலினுக்கு என்ன ஆனது என்று தெரியவில்லை. அவராகப் பேசுகிறார். அவராக சிரிக்கிறார். அவர் பேச்சைக் கேட்டு மற்றவர்கள் யாருக்கும் சிரிப்பு வரவில்லை. இந்தத் தேர்தலோடு அ.தி.மு.க அழிந்துவிடும் என்று சொல்கிறார் ஸ்டாலின். அது.. உங்கள் தந்தையாலேயே முடியவில்லை; உங்களால் முடியாது ஸ்டாலின். எந்தக் கொம்பனாலும் அசைக்க முடியாத எஃகு கோட்டையாக அ.தி.மு.கவை ஜெயலலிதா கட்டமைத்து வைத்துள்ளார். ஒன்றரை கோடி தொண்டர்கள் இருக்கும் வரை யாராலும் அ.தி.மு.கவை எதுவும் செய்ய முடியாது. இன்னொன்றும் சொல்கிறார் ஸ்டாலின்... ஓ.பி.எஸ்ஸும். ஈ.பி.எஸ்ஸும் சேர்ந்து தமிழகத்தை எரிக்கிறார்கள் என்கிறார், நாங்கள் என்ன தீப்பந்தத்துடனா அலைந்துகொண்டிருக்கிறோம். நீங்கள்தான் உங்கள் மாமன் மச்சான் சண்டையில் மதுரையில் பத்திரிகை அலுவலகத்துக்கு தீ வைத்து எரித்து, மூன்றுபேரைக் கொன்றீர்கள். 

2016-ல் வெற்றி பெற்றுவிட வேண்டும் என்று யாரோ ஜோசியக்காரன் பேச்சைக் கேட்டு.. கலர் கலராக சட்டைப் போட்டார்.  ஆட்டோவில் போனார், சைக்கிளில் சுற்றினார். கரும்புத் தோட்டத்தில் ரோடு போட்டு நடந்தார். கடைசியில்  டீக்கடையில் டீ குடித்தார். ஆனால், நாங்க டீக்கடையே நடத்தியிருக்கோம். எங்களிடம் ஸ்டாலின் பாச்சா பலிக்காது. நாங்கள் தொண்டர்களிடமிருந்து வந்தவர்கள். அ.தி.மு.க-வின் பேஸ்மட்டமும் ஸ்ட்ராங்... பில்டிங்கும் ஸ்ட்ராங்.. ஆனால், ஸ்டாலினுக்கு பேஸ்மட்டமும் வீக். பில்டிங்கும் வீக். எந்த ஆட்சி சிறந்தது என எடைபோட்டு வாக்களியுங்கள். சி.பி.ராதாகிருஷ்ணனை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறச் செய்யுங்கள்'' என்றவர் இறுதியாக  `நீதிமன்றத் தடையை உடைத்து ஏழைகளுக்கு இரண்டாயிரம் ரூபாய் வழங்குவோம்' தூண்டிலைப் போட்டு முடித்தார். 

கடந்த தேர்தலின்போது திமுக தலைவர் ஸ்டாலின் நமக்கு நாமே பயணம் மேற்கொண்ட போதிலிருந்தே துணை முதல்வர் பன்னீர் செல்வம், `டீக்கடையில் டீ குடிக்கிறீங்க.. நாங்க டீக்கடையே நடத்தியிருக்கோம்” என ஸ்டாலினை விமர்சித்து வருகிறார். தற்போதும் அதே விமர்சனத்தை  பெரும்பாலான பிரசார கூட்டங்களில் பேசி வருகிறார்

நீங்க எப்படி பீல் பண்றீங்க