`ஒரே பெயர்தான், அவருக்கு 11 வாக்காளர் அட்டைகள்!'- கள ஆய்வில் பதறிய ஈரோடு காங்கிரஸ் நிர்வாகி | one person name was mentioned in 11 places in the voters list in erode

வெளியிடப்பட்ட நேரம்: 11:50 (03/04/2019)

கடைசி தொடர்பு:11:50 (03/04/2019)

`ஒரே பெயர்தான், அவருக்கு 11 வாக்காளர் அட்டைகள்!'- கள ஆய்வில் பதறிய ஈரோடு காங்கிரஸ் நிர்வாகி

ஈரோட்டில் வாக்காளர் பட்டியல் சரிபார்க்கும் பணியின்போது, ஒரே நபருக்கு 11 வாக்காளர் அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

ஒரே பெயரில் உள்ள 11 வாக்காளர் அடையாள அட்டை

தமிழகத்தில் வரும் 18-ம் தேதி நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகள் கணஜோராக நடைபெற்றுவருகின்றன. அரசியல் கட்சியினரின் அனல் பறக்கும் பிரசாரம் ஒருபுறம் நடைபெற்று வந்தாலும், வாக்காளர்களை வளைப்பதற்காக வாக்காளர் பட்டியலை கையில் வைத்துக்கொண்டு அரசியல் கட்சியினர் வீடு வீடாகச் சென்று ஓட்டுக் கேட்டு கவனித்து வருகின்றனர்.

அந்தவகையில், ஈரோடு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சிறுபான்மைப் பிரிவு துணைத்தலைவரான கே.என்.பாட்ஷா என்பவர், கட்சி நிர்வாகிகள் மற்றும் அவருக்குக் கொடுக்கப்பட்டுள்ள பகுதிகளில் உள்ளவர்களின் பெயர்கள் எல்லாம் வாக்காளர் பட்டியலில் விடுபடாமல் இடம்பெற்றிருக்கிறதா எனச் சரிபார்த்திருக்கிறார். அப்போது ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட முனியப்ப கோயில் வீதி பகுதியைச் சேர்ந்த 55 வயதான ரகுபதி என்பவரது பெயர் ஒரே பக்கத்தில் வரிசையாக 11 இடங்களில் இருப்பதைக் கண்டு அதிர்ந்து போயிருக்கிறார். உடனே மாநிலத் தேர்தல் அதிகாரி மற்றும் மாவட்டத் தேர்தல் அதிகாரிக்கும் தபால் மூலமாகப் புகார் அனுப்பியிருக்கிறார். அதில், ‘ஒரே பெயர், புகைப்படம், விலாசத்துடன், வேறுவேறு அடையாள அட்டை எண்களுடன் ரகுபதி என்பவருக்கு எப்படி 11 அடையாள அட்டைகளை வழங்கியிருக்கிறீர்கள்? இந்தத் தவற்றை உடனே சரிசெய்ய நடவடிக்கை எடுங்கள்’ என வலியுறுத்தியுள்ளார்.

ஒரே நபருக்கு 11 வாக்காளர் அடையாள அட்டைகள் கொடுத்திருப்பதாக பதிவாகியிருப்பது எதிர்பாராத தவறினால் நடந்ததா அல்லது திட்டமிட்டு சேர்க்கப்பட்டதா என அரசியல் கட்சியினர் பலரும் சந்தேகத்தை எழுப்பியிருக்கின்றனர். மேலும், வாக்காளர் பட்டியலில் இதுபோன்று வேறு எங்காவது தவறுகள் இருக்கின்றனவா என்றும் சரிபார்த்து வருகின்றனர்.