``3 கேட்ச்: நிறைய தவறுகள்.. மீண்டு வருவோம்" - கோலி நம்பிக்கை | We made a lot of mistakes in the match - Kohli

வெளியிடப்பட்ட நேரம்: 13:40 (03/04/2019)

கடைசி தொடர்பு:13:40 (03/04/2019)

``3 கேட்ச்: நிறைய தவறுகள்.. மீண்டு வருவோம்" - கோலி நம்பிக்கை

விராட் கோலி


அதிரடிக்குப் பெயர் போன கோலி, டி-வில்லியர்ஸ் என 2 பேட்ஸ்மேன்கள் இருந்தும் தொடர்ந்து ரன் குவிப்பில் தடுமாறி வருகிறது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி. சாஹல் சுழற்பந்துவீச்சு மூலம் நெருக்கடி கொடுத்தாலும் போதிய ரன்கள் இல்லாததால் வெற்றி என்பது கைக்கு எட்டாமலே இருக்கிறது கோலிக்கு.

சாஹல்

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக நேற்று நடைபெற்ற போட்டியில் பெங்களூரு அணியில் பார்த்தீவ் படேல் - கோலி தொடக்க ஆட்டக்காரர்களாகக் களமிறங்கினர். சிறப்பாக விளையாடிக்கொண்டிருந்த நிலையில், 23 ரன்களுக்கு விக்கெட்டை தாரை வார்த்தார் கோலி. சுழற்பந்து வீச்சில் ஸ்டெம்பை பறிகொடுத்தார். டி-வில்லியர்ஸும் 13 ரன்களில் ஏமாற்றம் அளித்தார். ஹெட்மயர் படுமோசமாக 9 பந்துகளில் 1 ரன்கள் எடுத்து நடையைக்கட்டினார். பார்த்தீவ் படேல் - ஸ்டோனிஸ் புண்ணியத்தால் அந்த அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 158 ரன்கள் எடுத்தது. பார்த்தீவ் படேல் அதிகபட்சமாக 67 ரன்களை எடுத்தார்.

மொயின் அலி

ராஜஸ்தான் அணியில் ரஹானேவும் - பட்லரும் ஓப்பனர்களாக களமிறங்கினார்கள். இந்த இணை முதல் விக்கெட்டுக்கு 60 ரன்களைச் சேர்த்தது. 1 ரன்களில் ரஹானே கொடுத்த கேட்ச் வாய்ப்பைக் கோலி வீணடித்தார். அந்தக் கண்டத்திலிருந்து தப்பியவர் 22 ரன்கள் சேர்த்து அணிக்கு நல்ல தொடக்கம் ஏற்படுத்திக்கொடுத்தார். பட்லர் அவுட்டான சிறிது நேரத்தில் ஸ்மித் கொடுத்த கேட்சையும் விட்டனர். டெத் ஓவர்களில் த்ரிபாதி கொடுத்த கேட்சை கோட்ட விட்ட பெங்களூரு வீரர்கள் ஸ்மித் கொடுத்த கேட்சைப் பிடித்து பரிகாரம் தேடிக்கொண்டனர். இறுதியில் சிக்ஸர் விளாசி ராஜஸ்தான் அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார் த்ரிபாதி.

ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர்


போட்டிக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கோலி, ``நாங்கள் இந்தப் போட்டியில் 15- 20 ரன்கள் குறைவாகவே எடுத்திருந்தோம். மார்கஸ் ஸ்டோன்ஸ் - மொயின் அலி ஆட்டத்தால் ஒரு நல்ல ரன்கள் கிடைத்தது. இன்னும் 15 ரன்கள் எடுத்திருந்தால் இந்தப்போட்டி சற்று கடினமானதாக இருந்திருக்கும். நாங்கள் சில தவறுகளை செய்திருந்தோம் அது ஆட்டத்தின் போக்கை மாற்றிவிட்டது. ஐ.பி.எல் போன்ற போட்டிகளில் ஒரு அணி பெரிய தொடக்கத்தை ஏற்படுத்தவில்லை என்றால் கொஞ்சம் பதற்றமாகத்தான் இருக்கும். இதுவரை விளையாடிய நான்கு போட்டிகளில் ஒன்று அல்லது இரண்டு போட்டிகளில் எங்கள் ஸ்டைலில் விளையாட வேண்டும் என விரும்பினோம். இன்னும் 10 போட்டிகள் இருக்கிறது  அதில் சிறப்பாக செயல்படுவோம். மும்பை அணிக்கு எதிரான போட்டியில் நாங்கள் சிறப்பாகவே விளையாடினோம். இந்தத் தொடர் நீண்ட நாள்களுக்குச் செல்லப்போவதில்லை அதற்குள் ஒரு முன்னேறிச் செல்ல வேண்டும். சில புதிய வீரர்கள் அணிக்கு வரவுள்ளனர். அவர்கள் வெற்றிக்கு உறுதுணையாக இருப்பார்கள் என நம்புகிறேன்” என்றார்.