`ஆறுதலாகப் பேசினார், நம்பி ஆட்டோவில் ஏறினேன்!'- பாதிக்கப்பட்ட 16 வயது சிறுமி வாக்குமூலம் | child abuse by an auto driver

வெளியிடப்பட்ட நேரம்: 12:25 (03/04/2019)

கடைசி தொடர்பு:12:25 (03/04/2019)

`ஆறுதலாகப் பேசினார், நம்பி ஆட்டோவில் ஏறினேன்!'- பாதிக்கப்பட்ட 16 வயது சிறுமி வாக்குமூலம்

பாலியல் வன்கொடுமை

காஞ்சிபுரத்தில் கோயிலுக்குச் சென்ற 16 வயது சிறுமியிடம் அன்பாகப் பேசிய ஆட்டோ டிரைவர் நண்பர்களுடன் சேர்ந்து அவரை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தமிழகத்தில் பெண் குழந்தைகளுக்கு எதிராக பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் தொடர்ந்து நடந்துவருகின்றன. துடியலூரில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். அதுதொடர்பாக போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு, கொலை வழக்கு பதிவு செய்த போலீஸார், சந்தோஷ்குமார் என்பவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டியில் தாயின் அனுமதியோடு 3 வயது பெண் குழந்தை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இந்த வழக்கில் குழந்தையின் தாய் மற்றும் அவரின் நண்பர்களை போலீஸார் கைது செய்துள்ளனர். தற்போது, காஞ்சிபுரத்தில் கோயிலுக்குச் சென்ற 16 வயது சிறுமியைக் கடத்திய டிரைவர்கள் கூட்டாகச் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இரண்டு ஆட்டோ டிரைவர்களை போலீஸார் கைது செய்துள்ளனர். மேலும் ஒருவரை போலீஸார் தேடிவருகின்றனர். 

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``காஞ்சிபுரம் மாவட்டம், விஷ்ணு காஞ்சி காவல் நிலையத்துக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்தவர் 16 வயது சிறுமி. இவரைக் காணவில்லை என்று விஷ்ணு காஞ்சி காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. வழக்கு பதிவு செய்த போலீஸார் சிறுமியைத் தேடிவந்தனர். 

இந்த நிலையில், 16 வயது சிறுமி ஒருவர் மயங்கிய நிலையில் சாலையின் ஓரத்தில் கிடப்பதாக எங்களுக்குத் தகவல் கிடைத்தது. அங்கு சென்று பார்த்தபோது சிறுமியின் உடைகள் அலங்கோலமாக காட்சியளித்தது. உடலிலும் காயங்கள் இருந்தன. இதையடுத்து, அவரை அரசு மருத்துவமனையில் அனுமதித்தோம். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. சிறுமியிடம் விசாரித்தபோது வீட்டில் ஏற்பட்ட தகராறால் அங்கிருந்து வெளியேறி கோயிலுக்குச் செல்ல முடிவு செய்தேன். அப்போது அவ்வழியாக வந்த ஆட்டோ டிரைவர் என்னிடம் பேசினார். அவரிடம் நடந்த விவரத்தைக் கூறினேன். அவரும் ஆறுதலாக என்னிடம் பேசினார். கோயிலுக்கு அழைத்துச் செல்வதாகக் கூறினார். இதையடுத்து அவரை நம்பி ஆட்டோவில் ஏறினேன். 


டிரைவர் அதன்பிறகு எனக்கு குளிர்பானம் வாங்கி கொடுத்தார். அதன்பிறகு என்ன நடந்தது என்று தெரியவில்லை என்று சிறுமி எங்களிடம் தெரிவித்தார். இதனால் ஆட்டோ டிரைவர் சிறுமிக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது. சிறுமி கொடுத்த தகவலின்படி ஆட்டோ டிரைவர் யார் என்று விசாரித்தோம். எங்களின் விசாரணையில் சிறுமிக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து கூட்டாகச் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்தது ஆட்டோ டிரைவர்கள் தேவா, ராஜா, தினேஷ் ஆகியோர் என தெரியவந்தது. ராஜா, தேவாவை கைது செய்துள்ளோம். அவர்களிடம் விசாரித்தபோது சிறுமியை காஞ்சிபுரம் ராஜாஜி மார்க்கெட் பின்புறம் உள்ள காலியிடத்துக்கு அழைத்துச் சென்றதை அவர்கள் ஒப்புக்கொண்டனர். கைதானவர்கள் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளோம். இந்த வழக்கில் தலைமறைவாக இருக்கும் ஆட்டோ டிரைவர் தினேஷை தேடிவருகிறோம்" என்றனர். 

 போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறுகையில், ``சிறுமியை பரிசோதித்த டாக்டர்கள் அவர் கூட்டாக பாலியல் வன்கொமை செய்யப்பட்டதை உறுதி செய்தனர். இதனால் அவரிடம் விசாரித்தபோது ஆட்டோ டிரைவர்கள் குறித்த தகவலைத் தெரிவித்தார். இதனால் சம்பவ இடத்தில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து ஆட்டோ டிரைவர்களைப் பிடித்தோம். பாதிக்கப்பட்ட சிறுமி, மனநலம் பாதிக்கப்பட்டவர் என்ற தகவல் வெளியாகியுள்ளது" என்றார். 

காஞ்சிபுரத்தில் சிறுமிக்கு நடந்த துயரச் சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட ஆட்டோ டிரைவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் வைத்துள்ளனர்.