சரக்கு வாகனம் மீது அரசு பஸ் மோதல், 5 பெண்கள் படுகாயம்!- அமித் ஷா கூட்டத்துக்குப் பின் நடந்த சோகம் | The accident occurred after attending bjp general meeting

வெளியிடப்பட்ட நேரம்: 13:10 (03/04/2019)

கடைசி தொடர்பு:13:10 (03/04/2019)

சரக்கு வாகனம் மீது அரசு பஸ் மோதல், 5 பெண்கள் படுகாயம்!- அமித் ஷா கூட்டத்துக்குப் பின் நடந்த சோகம்

பா.ஜ.க தேசியத் தலைவர் அமித் ஷா கலந்துகொண்ட பொதுக்கூட்டம் புதுக்கோட்டை லேணா விளக்குப் பகுதியில் நடைபெற்றது. கூட்டத்தில் கலந்துகொண்ட பெண்களை வீட்டுக்கு ஏற்றிச்சென்ற சரக்கு வாகனம் மீது அரசுப் பேருந்து மோதியதில், ஈச்சம்பட்டியைச் சேர்ந்த பெண்கள் 5-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

அமித் ஷா கூட்டத்துக்கு சென்ற பெண்கள்

சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதி பா.ஜ.க வேட்பாளர் ஹெச்.ராஜாவை ஆதரித்து புதுக்கோட்டை அருகே லேணா விளக்குப் பகுதியில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. பொதுக்கூட்டத்தில், பா.ஜ.க தேசிய தலைவர் அமித் ஷா கலந்துகொண்டு வாக்கு சேகரித்தார். தமிழக அமைச்சர்கள் விஜயபாஸ்கர், பாஸ்கரன் உள்ளிட்டோர் இதில் கலந்துகொண்டனர். கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக, அ.தி.மு.க சார்பில் திருமயம் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள மக்களை அந்தந்தப் பகுதி அ.தி.மு.க-வினர் மூலம் சரக்கு வாகனத்தில் வரவழைத்தனர். உச்சி வெயிலில் நீண்ட நேரம் காத்திருந்தனர். இதனால், பெண்கள் கடும் அவதியடைந்தனர்.. இந்த நிலையில்தான் அமித் ஷா வருவதற்கு முன்னதாகவே பெண்கள் கூட்டத்தை விட்டுக் கலைந்துசென்றனர்.

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே ஈச்சம்பட்டியைச் சேர்ந்த பெண்கள் பொதுக்கூட்டத்தை முடித்துக்கொண்டு சரக்கு வாகனத்தில் ஊர் திரும்பினர். அப்போது, நகரப்பட்டி அருகில் ஈச்சம்பட்டி செல்லும் வழியில் உள்ள சுந்தர சோழபுரம், கீழப்பட்டி வளைவில் வந்தபோது எதிரே வந்த அரசுப் பேருந்து மோதியதில் சரக்கு வாகனத்தில் இருந்த பெண்கள் 5-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இதில், படுகாயமடைந்த ஈச்சம்பட்டியைச் சேர்ந்த வெ.மஞ்சுளா (27), ரா.மஞ்சுளா (33), ராஜேஸ்வரி (34) ஆகியோர் பொன்னமராவதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். ஈச்சம்பட்டியைச் சேர்ந்த மகேஸ்வரி (27), சங்கம்பட்டியைச் சேர்ந்த ராஜாமணி (29) ஆகியோர் பொன்னமராவதி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் மகேஸ்வரி, ராஜாமணி, வெ.மஞ்சுளா ஆகியோரின் நிலை கவலைக்கிடமாகவே, மேல் சிகிச்சைக்காக, புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மூவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து பொன்னமராவதி போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

சரக்கு வாகனங்களில் அளவுக்கு அதிகமாக மக்களை ஏற்றிச்செல்லக்கூடாது என்று விதி இருந்தும் மீறி அரசியல் கட்சிப் பிரமுகர்கள் பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ள அழைத்து வருகின்றனர். இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபடும் அரசியல் கட்சியினர் மீது போலீஸார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.