தொடர் சிகிச்சையில் பேரறிவாளன் - ஆளுநர் விரைந்து முடிவெடுக்க கோரிக்கை! | Perarivalan's health in question, does the governor decides upon the release authorization soon?

வெளியிடப்பட்ட நேரம்: 12:39 (03/04/2019)

கடைசி தொடர்பு:13:38 (03/04/2019)

தொடர் சிகிச்சையில் பேரறிவாளன் - ஆளுநர் விரைந்து முடிவெடுக்க கோரிக்கை!

``பேரறிவாளனின் உடல்நிலைச் சீராகவே இருக்கிறது. அச்சப்படுவதற்கு ஒன்றுமில்லை'' என்று சென்னை ஸ்டான்லி மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவித்தனர்.

பேரறிவாளன்

ராஜீவ் காந்தி கொலைவழக்கில் குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டவர்களில் ஒருவரான பேரறிவாளன் கடந்த வாரம் திடீர் நெஞ்சுவலி காரணமாக சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 47 வயதாகும் பேரறிவாளன் 28 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருக்கிறார். ராஜீவ் காந்தி கொலைவழக்கில் கைதுசெய்யப்பட்ட ஏழு பேர் விடுதலை தொடர்பாக ஆளுநர் முடிவெடுக்காமல் காலம் தாழ்த்திவரும் நிலையில், பேரறிவாளனுக்கு சிறையில் திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டது. மருத்துவப் பரிசோதனைகளுக்குப் பிறகு மீண்டும் சிறைக்கு அனுப்பி வைக்கப்பட்ட பேரறிவாளன் தற்போது மீண்டும் இதய சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவரது உடல்நிலைக் குறித்து அறிய சென்னை ஸ்டான்லி மருத்துவமனையைத் தொடர்புகொண்டு பேசினோம். மருத்துவர்கள் கூறுகையில், ``பேரறிவாளனுக்குச் சிறுநீர்ப் பாதைத் தொற்றுநோய் உண்டு. அதற்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு அடிக்கடி சிகிச்சைக்காக வருவார். ஆனால், கடந்த வாரம் திடீர் நெஞ்சுவலி காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.  அவருக்கு ட்ரெட்மில், ஈ.சி.ஜி உள்ளிட்ட அத்தனை பரிசோதனைகளும் மேற்கொண்டோம். அவரது உடல்நிலைச் சீராகவே இருக்கிறது. அச்சப்படுவதற்கு ஒன்றுமில்லை. வாராந்திர பரிசோதனைக்காக அவரை வரச் சொல்லியிருந்தோம். அதனால் இன்று மீண்டும் பரிசோதனைக்காக வந்துள்ளார். பேரறிவாளன் நலமாக உள்ளார்!” என்றனர்.

இது தொடர்பாக பேரறிவாளன் தரப்பில் பேசியபோது, கடந்த வாரம் அவருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டது. அதன்பின்னர் தற்போது வரை அவர் தொடர் சிகிச்சையில் உள்ளார் என்றனர். 

ஆயுள் தண்டனைக்கும் அதிகமான சிறைக்காலத்தை அனுபவித்து வரும் பேரறிவாளன் இப்படியான தொடர் மருத்துவச் சிக்கல்களைச் சந்தித்துவரும் நிலையில், அவரது உடல்நிலையைக் கருத்தில் கொண்டு ஆளுநர் விரைந்து முடிவெடுக்க வேண்டும் என பேரறிவாளனின் நண்பர்களும் உறவினர்களும் வலியுறுத்தி வருகின்றனர். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க