`விளக்குகள் அணைந்தன, ஒலிபெருக்கி சத்தம் ஓய்ந்தது!- முதல்வர் வரும் நேரத்தில் பதறிய அ.தி.மு.க-வினர் | Power cut during CM campaign

வெளியிடப்பட்ட நேரம்: 13:55 (03/04/2019)

கடைசி தொடர்பு:11:23 (04/04/2019)

`விளக்குகள் அணைந்தன, ஒலிபெருக்கி சத்தம் ஓய்ந்தது!- முதல்வர் வரும் நேரத்தில் பதறிய அ.தி.மு.க-வினர்

ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடியில் பா.ஜ.க வேட்பாளரை ஆதரித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாக்கு சேகரிக்க வந்தபோது, கரண்ட் கட்டானது. இதனால் கருப்பட்டியுடன் வரவேற்பு அளிக்கக் காத்திருந்த தொண்டர்கள் அப்செட் ஆகினர்.

முதல்வர் ஈ.பி.எஸ்-ஐ வரவேற்க கருப்பட்டியுடன் காத்திருந்த அ.தி.மு.க-வினர்

ராமநாதபுரம் தொகுதியில் பா.ஜ.க வேட்பாளராகப் போட்டியிடுகிறார் நயினார் நாகேந்திரன். இவரை ஆதரித்து சாயல்குடி, கீழக்கரை, ராமநாதபுரம், பரமக்குடி பகுதிகளில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று மாலை பிரசாரம் மேற்கொண்டார். தூத்துக்குடியில் நடந்த பா.ஜ.க பிரசாரக் கூட்டத்தில் அமித்ஷாவுடன் பங்கேற்ற முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூட்டம் முடிந்து அங்கேயே ஓய்வு எடுத்துவிட்டு மாலையில் சாயல்குடி நோக்கி பிரசார வாகனத்தில் பயணித்தார்.

முதல்வர் ஈ.பி.எஸ் பிரசாரம்
 

மாவட்டத்தின் நுழைவுப் பகுதியான சாயல்குடியில் முக்கு ரோட்டில் முதல்வர் எடப்பாடி பேசுவதற்காக ஏராளமான விளக்குகளுடன் ஒலிபெருக்கிகளும் அமைக்கப்பட்டிருந்தன. கமுதி, முதுகுளத்தூர், கடலாடி பகுதிகளிலிருந்து ஏராளமான மக்கள் வாகனங்களில் அழைத்து வரப்பட்டு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தனர். சாயல்குடி பகுதி கருப்பட்டி பேமஸ் என்பதால், அதை முதல்வருக்குக் கொடுப்பதற்காக பார்சல் செய்த கருப்பட்டியுடன் முக்கிய நிர்வாகிகள் காத்திருந்தனர். இவர்களுடன் முன்னாள் எம்.பி., ஜே.கே. ரித்தீஷும் சேர்ந்து நின்றார். மாலை 6 மணிக்கு முதல்வர் பிரசாரம் தொடங்குவதாக அறிவிக்கப்பட்டதால் 5 மணி முதலே தொண்டர்களும், அழைத்து வரப்பட்ட பொதுமக்களும் நெரிசல் மிகுந்த சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தனர். தொண்டர்களை உற்சாகப்படுத்த அ.தி.மு.க பாடல்கள் ஒலிபரப்பாகிக் கொண்டிருந்தன.

`இன்னும் 10 நிமிடங்களில் முதல்வர் வந்துவிடுவார்' என அறிவிக்கப்பட்ட நிலையில் ஜெனரேட்டர் மூலம் ஏற்பாடு செய்திருந்த விளக்குகள் அணைந்து போயின. ஒலிபெருக்கி சத்தமும் ஓய்ந்து போனது. முதல்வர் வரும் நேரத்தில் விளக்குகளும், மைக்குகளும் அணைந்து போனதால் அ.தி.மு.க நிர்வாகிகள் பதற்றமடைந்து அதைச் சரி செய்யும் முயற்சியில் ஈடுபட்டிருந்தனர்.

கருப்பட்டி கொடுக்க காத்திருந்த தொண்டர்
 

இதனிடையே எடப்பாடியின் பிரசார வேன் வந்துவிட்டது. வேறு வழியில்லாமல் ஏற்கெனவே ஏற்பாடு செய்திருந்த இடத்துக்கு சில அடி தூரம் முன்னதாக பிரசார வாகனம் நிறுத்தப்பட்டது. அந்த இடத்தில் நின்ற மக்களிடையே தனது வேனில் இருந்த ஒலிபெருக்கி மூலம் முதல்வர் உரையாற்றினார். இதனால் முக்கு ரோட்டில் கூடியிருந்த தொண்டர்கள் முதல்வரின் வேனை நோக்கி ஓடினர். இந்த சலசலப்புக்கு இடையே ஒரு வழியாகப் பிரசாரத்தை முடித்த எடப்பாடி அங்கிருந்து கிளம்ப முயன்றார். இதற்குள் அங்கு வந்த முதல்வரை நோக்கி அ.தி.மு.க நிர்வாகிகள் சால்வைகளுடன், கருப்பட்டி பார்சலையும் நீட்டினர். ஆனால், முதல்வரோ அவற்றைத் தனது கைகளால் தொட்டுக் கொடுத்துவிட்டு வாங்காமலேயே கிளம்பினார். இதனால் கருப்பட்டியுடன் காத்திருந்த நிர்வாகிகள் கவலை அடைந்தனர்.