`அமைச்சர் வீரமணி மீண்டும் பிரச்னை செய்கிறார்!'- நில விவகாரத்தில் ரியல் எஸ்டேட் அதிபர் புகார் | Real estate agent get threatens in land issue from minister side

வெளியிடப்பட்ட நேரம்: 14:10 (03/04/2019)

கடைசி தொடர்பு:11:23 (04/04/2019)

`அமைச்சர் வீரமணி மீண்டும் பிரச்னை செய்கிறார்!'- நில விவகாரத்தில் ரியல் எஸ்டேட் அதிபர் புகார்

வேலூரில் பிரச்னைக்குரிய நில விவகாரத்தில் இன்று காலை அமைச்சர் வீரமணியின் ஆட்கள் தகராறு செய்தனர். அமைச்சர் மீது வழக்கு தொடர்ந்த ரியல் எஸ்டேட் அதிபரை மிரட்டி நிலத்திலிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

வீரமணி

வேலூர் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள ரூ.300 கோடி மதிப்பிலான ‘சாய் சிட்டி சென்டர்’ நில விவகாரம் தொடர்பாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று நடந்துவருகிறது. இந்த நிலம் கைமாறியதில் ``ஒப்பந்தப்படி பணம் கொடுக்காமல் அமைச்சர் கே.சி.வீரமணியை வைத்து துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் நண்பரும் தொழிலதிபருமான சேகர்ரெட்டி மிரட்டுகிறார்’’ என்று உயர் நீதிமன்றத்தில் காட்பாடியைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர்கள் ராமமூர்த்தி, ஜெயப்பிரகாஷ் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில், ‘‘நில விவகாரத்துக்கும் எனக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. அமைச்சர் பதவியைத் தவறாகப் பயன்படுத்திக் கட்டப்பஞ்சாயத்தும் செய்யவில்லை’’ என்று உயர் நீதிமன்றத்தில் வீரமணி உறுதிமொழிப் பத்திரம் தாக்கல் செய்திருக்கிறார். 

ரியல் எஸ்டேட் அதிபரிடம் வாக்குவாதம் செய்யும் போலீஸார்.

அத்துடன் பிரச்னை ஓய்ந்துவிட்டது என்று நினைத்திருந்த நிலையில், நில விவகாரம் தொடர்பாக ஜோலார்பேட்டையில் உள்ள அமைச்சர் வீரமணிக்கு நெருக்கமானவர்களின் வீடுகள், திருமண மண்டபங்களில் வருமானவரித் துறையினர் சமீபத்தில் சோதனையில் ஈடுபட்டனர். அமைச்சர் வீரமணியின் நண்பர்களான ஆந்திர பால் நிறுவன உரிமையாளர்கள் மற்றும் எதிர் தரப்பைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர்களுக்குச் சொந்தமான இடங்களிலும் வருமானவரித் துறை தீவிர சோதனை நடத்தியது. ஆனால், நிலத்தை முழுமையாக உரிமை கொண்டாடுபவரும், வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருப்பவருமான தொழிலதிபர் சேகர்ரெட்டி, காட்பாடியை அடுத்த மகாதேவமலை கோயிலை நிர்வகிக்கும் ஸ்ரீலஸ்ரீ மகானந்த சித்தர் என்ற சாமியார் உள்ளிட்டோரிடம், வருமானவரித் துறை சோதனையோ, விசாரணையோ நடத்தவில்லை. 

வேலூரில் பிரச்னைக்குரிய நிலம்

மகாதேவமலை சாமியார்தான் நிலத்தை வாங்குவதற்காக முதலில், ரூ.225 கோடிக்குப் பேரம் பேசியதாகக் கூறப்படுகிறது. நிலம் கைம்மாறும் நேரத்தில், சேகர் ரெட்டிக்கு ஆதரவாக அமைச்சர் வீரமணி தலையிட்டதால், சாமியார் விலகிக்கொண்டார். இந்த நிலையில், பிரச்னைக்குரிய அந்த நில விவகாரத்தில் அமைச்சர் வீரமணி மீண்டும் தலையிடுவதாக புகார் எழுந்திருக்கிறது. வழக்கு தொடர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர்களில் ஒருவரான ஜெயப்பிரகாஷ் இன்று காலை, அந்த நிலத்துக்குள் சென்றார். தகவலறிந்ததும், அமைச்சரின் ஆதரவாளர்கள் அங்கு திரண்டனர். போலீஸாரும் குவிக்கப்பட்டனர். நிலத்துக்குள் சென்ற ரியல் எஸ்டேட் அதிபரை மிரட்டி வலுக்கட்டாயமாக வெளியேற்றினர். ‘‘இந்த நில விவகாரத்தில் தலையிடவில்லை என்று உறுதிமொழி பத்திரம் தாக்கல்செய்த அமைச்சர் வீரமணி, நேரடியாக மீண்டும் தலையிட்டு பிரச்னை செய்கிறார். பொய்யான உறுதிமொழிப் பத்திரம் தாக்கல் செய்து, நீதிமன்றத்தை அவமதித்திருக்கும் அமைச்சர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க போலீஸார் தயக்கம் காட்டுகிறார்கள்’’ என்று ரியல் எஸ்டேட் அதிபர் ஜெயப்பிரகாஷ் குற்றம்சாட்டிருக்கிறார்.