பொள்ளாச்சி விவகாரம்: கொங்கு ஈஸ்வரன் சவாலுக்கு பல்டி அடித்த அமைச்சர்! | Pollachi issue: Minister answered the challenge of Kongu Eswaran

வெளியிடப்பட்ட நேரம்: 14:54 (03/04/2019)

கடைசி தொடர்பு:15:04 (03/04/2019)

பொள்ளாச்சி விவகாரம்: கொங்கு ஈஸ்வரன் சவாலுக்கு பல்டி அடித்த அமைச்சர்!

ராசிபுரம் கொங்கு மண்டப அறக்கட்டளை உறுப்பினர் பழனிசாமியை அவரது இல்லத்தில் அமைச்சர்கள் தங்கமணி, சரோஜா நேரில் சந்தித்ததன் பின்னணி என்ன எனக் கேள்வி எழுப்பிய ஈஸ்வரன், அது தொடர்பான புகைப்படத்தையும் வெளியிட்டார்.

பொள்ளாச்சி விவகாரம்: கொங்கு ஈஸ்வரன் சவாலுக்கு பல்டி அடித்த அமைச்சர்!

தோல்வி பயத்தில் ஆதாரமில்லாமல் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி பொதுச் செயலாளர் ஈஸ்வரன் பேசுவதாகத் தமிழக மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் தங்கமணி குற்றம்சாட்டியுள்ளார்.

நாமக்கல் நாடாளுமன்றத் தொகுதி கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி வேட்பாளர் சின்ராசு, கொங்கு பெயரில் உள்ள கல்யாண மண்டபத்தில் பல கோடி ரூபாய் ஊழல் செய்ததாக அமைச்சர் தங்கமணி கூறிய நிலையில், "கொங்கு மண்டப அறக்கட்டளை உறுப்பினர்கள் முன்னிலையில் இதை விவாதிக்க நாங்கள் தயார். பொள்ளாச்சி பாலியல் பிரச்னை தொடர்பாக அமைச்சர் விவாதிக்கத் தயாரா?" என கொ.ம.தே.க பொதுச் செயலாளர் ஈஸ்வரன் கேள்வி எழுப்பி இருந்தார். இதற்குப் பதிலளித்த அமைச்சர் தங்கமணி, "பொதுமக்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் முன்னிலையில் இரவு 10 மணிக்கு மேல் விவாதிக்கத் தயார். அறக்கட்டளை உறுப்பினர் முன்னிலையில் விவாதித்தால் பிரச்னைகள் எழும்" என்றார். 

கொங்கு ஈஸ்வரன்

நேற்று இதைப் பற்றிப் பேச செய்தியாளர்களைச் சந்தித்தார் ஈஸ்வரன். அப்போது பேசிய அவர், "பொள்ளாச்சி பாலியல் பிரச்னை, வேட்பாளர் குறித்து அமைச்சர் தெரிவித்த பொய்யான குற்றச்சாட்டு குறித்து வருகிற 6-ம் தேதி நேருக்குநேர் விவாதிக்கத் தயார்" என்றார். மேலும், ராசிபுரம் கொங்கு மண்டப அறக்கட்டளை உறுப்பினர் பழனிச்சாமியை அவரது இல்லத்தில் அமைச்சர்கள் தங்கமணி, சரோஜா நேரில் சந்தித்ததன் பின்னணி என்ன எனக் கேள்வி எழுப்பிய ஈஸ்வரன், அது தொடர்பான புகைப்படத்தையும் வெளியிட்டார்.

"பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் தொடர்ந்து பொதுமக்கள் காவல் துறையிடம் புகார் மனு அளித்துள்ளனர். தற்போது அந்தச் சம்பவத்தில் எஸ்.பி, டி.எஸ்.பி-யைப் பணியிடை மாற்றம் செய்துள்ளனர். பணியிடை மாற்றத்துக்குக் காலதாமதம் ஏன் எனவும் கேள்வி எழுப்பினார். பொள்ளாச்சி ஜெயராமன், கோயம்புத்தூர் பகுதியில் பிரசாரத்துக்கு வருவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா? இந்த விவகாரம் குறித்து அமைச்சர் விவாதிக்க வருவது நல்ல விஷயம். இதுகுறித்து தனியாக விவாதிக்கவும் தயார். வருகிற 6-ம் தேதி இரவு 9 அல்லது 10 மணிக்கு மேல் நாமக்கல்லில் விவாதிக்கத் தயாராக இருக்கிறோம். பி.ஜே.பி கட்சி எப்படியாவது ஆட்சியைப் பிடிக்க வேண்டும் எனத் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. பி.ஜே.பி தலைமையில் 10 பேரை மிரட்டி கூட்டணி வைத்துள்ளனர். கருத்துக்கணிப்பில் பி.ஜே.பி வெற்றி பெற முடியாது என்பதால் சி.பி.ஐ, வருமானவரித் துறை கொண்டு சோதனை நடத்தி வருகின்றனர். அமைச்சர் தங்கமணியை அனைத்து தாசில்தார்களும் தினமும் காலை அவரது இல்லத்தில் சந்தித்து வருகின்றனர். இது தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு எதிரானது. அவரது வீட்டை தலைமைச் செயலகம்போல் பயன்படுத்தி வருகிறார். இதுகுறித்து தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்க உள்ளோம்" என்றார்.

தங்கமணி

இந்நிலையில் நாமக்கல்  நாடாளுமன்ற அ.தி.மு.க அலுவலகத்தில் மின்துறை அமைச்சர் தங்கமணி செய்தியாளர்களிடம் பேட்டி அளித்தார். அப்போது அவர், "ஆதாரமில்லாமல் புகார் தெரிவிக்கும் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி பொதுச் செயலாளர் ஈஸ்வரனிடம் விவாதிக்கத் தயாரில்லை. தேர்தல் நடத்தை விதிமுறை அமலுக்கு வந்த பிறகு, எந்த ஓர் அரசு அதிகாரியும் என்னைச்  சந்திக்கவில்லை. கொச்சைப்படுத்தும் விதமாக ஆதாரமில்லாமல் தோல்வி பயத்தில் ஈஸ்வரன் பேசுகிறார். பொள்ளாச்சி விவகாரம் நீதிமன்றத்தில் உள்ளதால் அதுபற்றி விவாதிக்க முடியாது. ஆதாரமில்லாமல் பொய்யான குற்றச்சாட்டுக்கு விவாதம் தேவையில்லை. இத்துடன் இந்த விவகாரத்தை முடிக்கிறேன்" என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்