`ஆட்டத்தை ஸ்டார்ட் பண்ணுங்கோ!' - கூட்டம் கலையாமல் இருக்க அமைச்சர் செய்த ஏற்பாடு | Cm edappadi palanisamy campaign for h raja ata sivagangai

வெளியிடப்பட்ட நேரம்: 16:00 (03/04/2019)

கடைசி தொடர்பு:11:24 (04/04/2019)

`ஆட்டத்தை ஸ்டார்ட் பண்ணுங்கோ!' - கூட்டம் கலையாமல் இருக்க அமைச்சர் செய்த ஏற்பாடு

சிவகங்கையில் அ.தி.மு.க சார்பில் கூட்டணிக்கட்சி வேட்பாளர் ஹெச்.ராஜாவை ஆதரித்து பிரசாரத்துக்கு வரும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்குக் கூட்டம் சேர்ப்பதற்காகக் குத்தாட்டம் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தார் அமைச்சர் பாஸ்கரன். தொண்டர்களும்  பொதுமக்களும் கொளுத்தும் வெயிலில் கூட்டத்திலிருந்து கலைந்து சென்றுவிடாமல் இருக்க குத்தாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 

எடப்பாடி பழனிச்சாமி

சிவகங்கையில் பா.ஜ.க வேட்பாளர் ஹெச்.ராஜாவை ஆதரித்து இரண்டாவது நாளாகப் பிரசாரம் மேற்கொண்டார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. முதல்வர் செல்லும் இடங்களில் எல்லாம் கூட்டம் கூடுவதில்லை என்று தி.மு.க தலைவர் ஸ்டாலின் குற்றம் சாட்டுவதை முறியடிப்பதற்காக அ.தி.மு.கவினர் இதுபோன்ற குத்தாட்டம் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து வருகின்றனர். கிராமப்புறங்களிலிருந்து பொதுமக்கள் டாடா ஏஸ் வாகனங்களில் அழைத்து வரப்பட்டிருந்தார்கள்.

பொதுமக்கள் மத்தியில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ``நிதியமைச்சராக இருந்த ப.சிதம்பரம் இந்தத் தொகுதிக்கு எந்த நிதியையும் கொண்டு வரவில்லை. அவரது மகன் மட்டும் எப்படி நிதியைக் கொண்டு வருவார். இந்தத் தொகுதிக்கு எந்தத் தொழிற்சாலையும் கொண்டுவரவில்லை. தொகுதியும் வளர்ச்சியடையவில்லை. 100 யூனிட் இலவச மின்சாரம், தமிழகம் முழுவதும் தரமான சாலைகள், பொங்கல் பரிசு ஏழைக் குடும்பங்களுக்கு 2000 எனக் கொடுத்திருக்கிறோம். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருக்கிறது. 304 தொழிற்சாலைகள் தமிழகத்திற்கு வரவிருக்கிறது. நேரடியாகவும் மறைமுகமாகவும் 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்க இருக்கிறது. கோதாவரி- காவிரி ஆறுகளிலிருந்து வெளியாகும் உபரி நீரையும் வைகை குண்டாறு நதி இணைப்பைச் செயல்படுத்தி இப்பகுதிகளில் இருக்கும் தண்ணீர்ப் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்'' என்றார்.

பிரசாரத்தை முடித்துக்கொண்டு முதல்வர் சென்றபின் அ.தி.மு.க நிர்வாகிகள், தொண்டர்களைப் பார்த்து கூப்பிடுங்கப்பா… குத்தாட்டத்தை ஸ்டார்ட் பண்ணுங்கோனு சொல்லி ஸ்டார்ட் பண்ணிவிட்டார்கள். கலையாமல் அப்படியே நின்றிருந்த கூட்டத்தை போலீஸார் கலைந்து போகச் செய்தனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க