மோதலுக்குத் தயாரான தொண்டர்கள்! - பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைத்த வசந்தகுமார், பொன்னார் | fight between bjp and congress cadres at kanyakumari

வெளியிடப்பட்ட நேரம்: 15:37 (03/04/2019)

கடைசி தொடர்பு:11:26 (04/04/2019)

மோதலுக்குத் தயாரான தொண்டர்கள்! - பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைத்த வசந்தகுமார், பொன்னார்

மறியல்

அ.தி.மு.க, பா.ஜ.க கொடிகளை அகற்றாத தேர்தல் அதிகாரிகளைக் கண்டித்து, காங்கிரஸ் தொண்டர்கள் மறியலில் ஈடுபட்டனர். காங்கிரஸ் வேட்பாளர் ஹெச்.வசந்தகுமாரிடம் பா.ஜ.க வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன்  பேசி சமாதானப்படுத்தியதால் பதற்றம் தணிந்தது.

மறியல்

கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதி பா.ஜ.க வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணனை ஆதரித்து, தமிழக  முதல்வர்  எடப்பாடி பழனிசாமி இன்று மாலை பிரசாரம்செய்கிறார். அதற்காக, வடசேரி அண்ணா சிலை முன்பாக தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளின் கொடிகள் கட்டப்பட்டுள்ளன. இந்த நிலையில், இன்று காங்கிரஸ் வேட்பாளர் ஹெச்.வசந்தகுமார், வடசேரி பகுதி வழியாக தேர்தல் பிரசாரம் செய்தார். அப்போது அவருடன் வந்த காங்கிரஸ் தொண்டர்கள், அண்ணா சிலை பகுதியைச் சுற்றி கொடிகளைக் கட்ட தேர்தல் அதிகாரிகள் எப்படி அனுமதி அளித்தார்கள்? காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நாகர்கோவில் வந்தபோது கட்டப்பட்டிருந்த கொடிகள் அகற்றப்பட்டன. அதுபோல அ.தி.மு.க, பா.ஜ.க கொடிகளையும் அகற்ற வேண்டும் எனக் கோரி மறியலில் ஈடுபட்டனர். 

போராட்டம்

இதனால் பரபரப்பு ஏற்பட்டது. அந்தச் சமயத்தில், பா.ஜ.க வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன்  திறந்த வாகனத்தில் பிரசாரம்செய்ய வந்தார். அவரது வாகனத்திற்கு முன்னால் வந்த பா.ஜ.க, அ.தி.மு.க தொண்டர்கள், அண்ணாசிலை அருகே வந்ததும் கொடிகளை அகற்றக் கூடாது என காங்கிரஸ் தொண்டர்களுக்கு எதிராக கோஷம் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். இரண்டு தரப்பினரும் ஒரே இடத்தில் கோஷம் எழுப்பியதால் பரபரப்பு அதிகரித்தது. அப்போது பொன்.ராதாகிருஷ்ணன், காரில் இருந்து இறங்கி, ஹெச்.வசந்தகுமாரை நோக்கி சென்றார். அவர் பின்னால் பா.ஜ.க தொண்டர்களும் சென்றனர். இதனால் காங்கிரஸ், பா.ஜ.க தொண்டர்கள் முட்டிக்கொள்ளும் நிலை ஏற்பட்டது. காவல் துறையினர் அங்கு சென்று, இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தினர். ஹெச்.வசந்தகுமாரை சந்தித்த பொன்.ராதாகிருஷ்ணன் பிரச்னையை சுமுகமாக முடிக்கும்படி வேண்டுகோள் விடுத்தார்.

வசந்தகுமாரிடம் பேசும் பொன்னார்

இதைத் தொடர்ந்து, வசந்தகுமார் காங்கிரஸ் தொண்டர்களை அழைத்துக்கொண்டு அங்கிருந்துசென்றார். பின்னர், பொன்.ராதாகிருஷ்ணன் தொண்டர்கள் மத்தியில் பேசும்போது, "கொடிகளைக் கண்டு மக்கள் ஓட்டு போட மாட்டார்கள். சீப்பை மறைத்துவைத்தால் திருமணம் நின்றுவிடாது. தேர்தல் ஆணையத்தின் விதிகளுக்கு நாம் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்" என்றார். முதல்வர் பிரசாரம் செய்யும் 200 மீட்டர் தூரத்தில் கொடிகள் கட்ட அனுமதி அளிக்கப்பட்டுள்ளதன் அடிப்படையிலேயே கொடிகள் கட்டப்பட்டுள்ளதாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர். நாகர்கோவிலில் காங்கிரஸ், பா.ஜ.க தொண்டர்கள் முட்டிக்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.