`தனி நபர்களின் சுதந்திரம் பாதிக்கப்படுகிறது!'‍- `பிராங் சோ'வுக்கு தடை விதித்த நீதிபதிகள் | madurai high court bans prank shows

வெளியிடப்பட்ட நேரம்: 16:28 (03/04/2019)

கடைசி தொடர்பு:16:28 (03/04/2019)

`தனி நபர்களின் சுதந்திரம் பாதிக்கப்படுகிறது!'‍- `பிராங் சோ'வுக்கு தடை விதித்த நீதிபதிகள்

`பிராங் சோ' எடுப்பதற்கும், அதை தொலைக்காட்சிகளில் வெளியிடவும் தடை விதித்து உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
 

உயர் நீதிமன்ற மதுரை கிளை

`பிராங் சோ' என்ற பெயரில் பொதுமக்களை எல்லை மீறி கேலி, கிண்டல் செய்யும் வீடியோக்கள், சமூக வலைதளங்களில் வைரலாகின்றன. இதனால், பலரின் மனநிலை மாற்றப்படுகிறது என பல குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்நிலையில், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில், முத்துக்குமார் என்பவர் தாக்கல்செய்த மனுவில், " டிக் டாக் 'ஆப்'பால் பல தவறுகள் நடைபெறுகின்றன. இந்தோனேசியாவில் டிக் டாக் ஆப் தடை செய்யப்பட்டுள்ளது. ஆகவே, இளைஞர்களின் நலன் கருதி 'டிக் டாக்'ஆப்'பை தடைசெய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனக்  கூறிருந்தார். இந்த வழக்கு, இன்று நீதிபதிகள் கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது," டிக் டாக் செயலியைத் தடைசெய்ய எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை குறித்து மத்திய அரசு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.

இதையடுத்து வழக்கறிஞர்கள் தரப்பில், `பிராங் சோ' என்று சொல்லக்கூடிய  வீடியோ எடுப்பதற்கான செயல்களால் தனி நபர்களின் சுதந்திரம் பாதிக்கப்படுகிறது. ஒரு சிலர் இந்தச் செயலால் அதிர்ச்சிக்குள்ளாகி உயிரிழக்கும் சம்பவங்களும் நிகழ்ந்துள்ளன. ஆகையால், அதற்கும் தடை விதிக்க வேண்டும் எனக் கூறினார். இதையடுத்து நீதிபதிகள், பிராங் சோ எடுப்பதற்கும், அதைத் தொலைக்காட்சிகளில் வெளியிடவும் தடை விதித்து உத்தரவிட்டதோடு, மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை செயலர், மத்திய தொலைத்தொடர்புத் துறை செயலர் உள்ளிட்டோர் பதிலளிக்க ஆணை பிறப்பித்து, விசாரணையை ஏப்ரல் 16-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.