சிறுமுகையில் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த யானை... - ஆபத்துக்குள்ளாகும் பேருயிர்கள்! | Elephant dead in an electrocution near sirumugai

வெளியிடப்பட்ட நேரம்: 20:35 (03/04/2019)

கடைசி தொடர்பு:20:35 (03/04/2019)

சிறுமுகையில் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த யானை... - ஆபத்துக்குள்ளாகும் பேருயிர்கள்!

மின்சாரம் பாய்ந்து யானைகள் இறப்பது தொடர்ச்சியாக அதிகரித்துக்கொண்டேவருகிறது. 2009 முதல் தற்போதுவரை, நாட்டின் பல்வேறு பகுதிகளில் அகால மரணமடைந்த யானைகளின் எண்ணிக்கை 928. அதில் 565 மரணம் மின்சாரம் பாய்ந்ததால் மட்டுமே நிகழ்ந்துள்ளது. மின்சார வேலிகளால் அதிக மரணங்கள் நிகழ்வதாக ஆய்வறிக்கைகள் வந்துள்ள நிலையில், தற்போது மீண்டுமொரு யானையின் மரணமும் அதே காரணத்தால் நிகழ்ந்துள்ளது.

கோவை மேட்டுப்பாளையத்தை அடுத்த சிறுமுகை என்ற பகுதியில், வாழைத்தோட்டத்தில் வைத்திருந்த மின் வேலியில் சிக்கியதால், 10 வயதே நிரம்பிய இளம் யானை ஒன்று பலியாகியுள்ளது. சிறுமுகை வனச்சரகத்திற்கு உட்பட்ட, விஸ்கோஸ் ஆலையின் பின் பகுதியில் ஓடும் பவானி ஆற்றின் தெற்குக் கரையையொட்டி பவானி சாகர் அணைக்குச் சொந்தமான இடம் இருக்கிறது. நாசர் அலி என்பவர், அந்த இடத்தை ஆக்கிரமித்து வாழை பயிரிட்டு, தோட்டத்தைச் சுற்றி மின்கம்பிகளால் வேலி அமைத்துள்ளார்.

உயிரிழந்த யானை

நேற்றிரவு, இந்த மின்கம்பியில் பாய்ந்த மின்சாரம் தாக்கி, ஓர் ஆண் யானை இறந்துள்ளது. தகவல் அறிந்து இன்று காலை அங்கு சென்ற வனப் பணியாளர்கள், இறந்த யானையைப் பிரேதப் பரிசோதனை செய்ய ஏற்பாடுசெய்ததோடு, நாசர் அலியைப் பிடித்து விசாரணைசெய்து வருகின்றனர். தற்போது, யானையின் சடலம் இரண்டு தன்னார்வ அமைப்புகளின் முன்னிலையில், இரண்டு கால்நடை மருத்துவர்களால் பிரேதப் பரிசோதனை செய்யப்பட உள்ளது.

இதுதொடர்பாக கோவை மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷிடம் பேசுகையில், "அந்தப் பகுதியைச் சுற்றி வேறு ஏதேனும் தகவல்கள் கிடைக்கிறதா என்பதைத் தேடிக்கொண்டிருக்கிறோம். மருத்துவர்கள் பிரேதப் பரிசோதனை செய்யப்போகிறார்கள். அந்த முடிவுகள் வந்த பிறகுதான் மற்ற விவரங்கள் தெரியவரும்" என்று கூறினார்.

ஆய்வாளர் சந்துரு

மின்வேலிகளுக்கென்று சூரிய மின்சக்தித் தகடுகளோ பேட்டரிக்களோ அமைப்பதில்லை. நேரடியாக மின்சாரத்தைப் பாய்ச்சுவது தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. அளவுக்கு அதிகமான மின்சாரம் வேலிகளில் பாய்வதால், அது யானைகளை எச்சரிப்பதையும் தாண்டி அதிகமான மரணங்களுக்கு வழிவகுக்கிறது. இதுதொடர்பாக, காட்டுயிர் ஆய்வாளரும் சூழலியல் ஆர்வலருமான சந்துருவைத் தொடர்புகொண்டு பேசியபோது, "கடந்த ஆண்டும் இதேபோல, இதே வயதுடைய ஆண் யானை ஒன்று இறந்தது. இங்கு மட்டுமில்லை, நெல்லித்துறையில் கடந்த ஆண்டு இரண்டு ஆண் யானைகள் அடுத்தடுத்த நாள்களில் இறந்தன. இப்படி இளம் ஆண் யானைகளாக மரணிப்பது அவற்றின் இனப்பெருக்கத்தில் பெரிய விளைவை ஏற்படுத்தும். விஸ்கோஸ் நிறுவனம் இப்போது செயற்பாட்டில் இல்லை. பொதுப்பணித் துறைக்குச் சொந்தமான அந்த நிலத்தை யாரும் பயன்படுத்தக் கூடாதென்று தடை விதிக்க வேண்டும். அதை சம்பந்தப்பட்ட அதிகாரிகள்தான் செய்ய வேண்டும். அப்போதுதான், இதுமாதிரியான மரணங்கள் நிகழாமல் தடுக்கமுடியும்" என்று கூறினார்.