`பெண்கள் பாதுகாப்பைப் பற்றி தி.மு.க பேசலாமா?' - தூத்துக்குடியில் எடப்பாடி ஆவேசம் | edappadi palanisamy slams dmk in tuticorin campaign

வெளியிடப்பட்ட நேரம்: 21:00 (03/04/2019)

கடைசி தொடர்பு:11:28 (04/04/2019)

`பெண்கள் பாதுகாப்பைப் பற்றி தி.மு.க பேசலாமா?' - தூத்துக்குடியில் எடப்பாடி ஆவேசம்

”அழகு நிலையத்திற்குள் புகுந்து பெண்கள்மீது தாக்குதலில் ஈடுபடும் தி.மு.க-வினர் பெண்களின் பாதுகாப்பைப் பற்றி பேசலாமா?” என முதல்வர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதி பா.ஜ.க வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜனை ஆதரித்து, முதல்வர் எடப்பாடி பழனிசாமி கோவில்பட்டியில் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது, ”ஸ்டாலின், தமிழகத்தில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை என கொடநாட்டில் நேற்று ஒரு கதை சொல்லியுள்ளார்.  சட்டம் ஒழுங்கைப் பேணிக்காக்கும் காவல் துறை. இந்தியாவிலேயே முதன்மைக் காவல்துறை என்று பெயர்பெற்ற மாநிலம், தமிழகம். ஆனால், மக்கள் நிம்மதியாக இருக்க முடியாதது என்றால் அது தி.மு.க-வினரால்தான். அழகு நிலையத்திற்குள் புகுந்து பெண்களை அடிக்கின்றனர். பிரியாணி கடையில் நன்றாகச் சாப்பிட்டுவிட்டு பணம் கொடுக்க மறுத்து, உரிமையாளரைத் தாக்குகின்றனர்.

மறுநாளே அந்தக் கடைக்கு ஸ்டாலின் கட்டப் பஞ்சாயத்துசெய்யப் போகிறார். அவருடைய கட்சி செய்த தவற்றை மறைப்பதற்கு, கட்டப் பஞ்சாயத்து செய்யப் போகிறார். தி.மு.க-வின் நிலை அப்படி உள்ளது. எதிர்க்கட்சியாக இருக்கும்போதே இப்படி என்றால், ஆளும்கட்சியாக வந்துவிட்டால் என்ன ஆகும். நாட்டு மக்களை நிம்மதியாக வாழ விடுவார்களா? 1990-ல், ஜெயலலிதா சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவராக இருந்தார். அப்போது, நானும் ஸ்டாலினும் எம்.எல்.ஏ-க்களாக இருந்தோம். சட்டமன்றத்தில் ஜெயலலிதா எழுந்து பேச முற்பட்டபோது, அவர்மீது தி.மு.க எம்.எல்.ஏ-க்கள், அமைச்சர்கள் பேப்பர் வெயிட்டால் அடித்தனர். இதில் ஜெயலலிதா காயமடைந்தார்.

இவர்களுக்கு பெண்களைப் பற்றிப் பேச என்ன அருகதை உள்ளது. எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது, ஜெயலலிதாவுக்கே இந்த நிலை என்றால், சாதாரண மக்களுக்கு எப்படிப்பட்ட நிலை என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும். கடந்த 5 நாள்களுக்கு முன், ரயிலில் செல்லும்போது, தி.மு.க செயற்குழு உறுப்பினர்  தன்னை பலாத்காரம் செய்ய முயன்றார் என கர்ப்பிணி ஒருவர் புகார் அளித்து, வழக்குப்பதிவுசெய்து, அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். பெண்கள் பாதுகாப்பைப் பற்றி தி.மு.க பேசலாமா?

சாதிக் பாட்ஷா வழக்கில் ஸ்டாலினுக்கு சம்பந்தம் இருக்கிறது. சாதிக் பாட்ஷா என்பவர் ஸ்டாலின்,  ராஜாவுக்கு நெருக்கமானவர். சிபிஐ வழக்குப் போட்டு விசாரணை நடந்தபோது, மர்மமான முறையில் சாதிக் பாட்ஷா இறந்துவிட்டார். அவர் இறந்ததையும் தி.மு.க ஆட்சியில் இருந்தபோது வழக்குப் போட்டு முடித்துவைத்துவிட்டனர். சாதிக் பாட்ஷா மனைவி ரேணுகா பானு, புகார் அளித்துள்ளார்.  இவர், கடந்த 15 நாள்களுக்கு முன் பத்திரிகையில் தனது கணவர் இறந்ததற்கு அஞ்சலி செலுத்துவதற்காக விளம்பரம் கொடுத்திருந்தார். அதில், 'கூடா நட்பு கேடாய் முடியும்' எனக் கொடுத்திருந்தார். அதற்கு அடுத்த நாளே, ரேணுகா பானு சென்ற காரை அடித்து நொறுக்கிவிட்டார்கள். அவரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சைபெற்றார்.

ரேணுகா பானு, தனது கணவருக்கு யார் யாரால் ஆபத்து ஏற்பட்டது எனக் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அவரது மரணம் மர்மமான மரணம் இல்லை. கொலை செய்யப்பட்டார் என்று அவர் புகார் அளித்துள்ளார். இந்தப் புகாரை சிபிஐ மூலம் சட்டரீதியாக அ.தி.மு.க அரசு விசாரிக்கும். காஞ்சிபுரத்தில், தி.மு.க-வில் கட்சிப் பொறுப்பில் இருந்த பால்மலர் என்ற பெண்ணும் மர்மமான முறையில் இறந்துவிட்டார். அண்ணா நகர் ரமேஷ் மர்மமாக இறந்தார். இவை அனைத்தையும் அ.தி.மு.க அரசு  தோண்டி எடுத்து, உண்மை நிலையை நாட்டு மக்களுக்குத் தெரிவிப்போம். உண்மைக் குற்றவாளியைக் கூண்டில் ஏற்றி தண்டனையைப் பெற்றுத்தருவோம்” என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க