காங்கிரஸ் தேர்தல் அறிக்கை செல்லாத நோட்டு - ஜி.கே.வாசன் கிண்டல்! | gk vasan Tease congress manifesto

வெளியிடப்பட்ட நேரம்: 22:30 (03/04/2019)

கடைசி தொடர்பு:11:29 (04/04/2019)

காங்கிரஸ் தேர்தல் அறிக்கை செல்லாத நோட்டு - ஜி.கே.வாசன் கிண்டல்!

காங்கிரஸ் கட்சியினுடைய தேர்தல் அறிக்கை என்பது காலம் போன ஒன்று. காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை மக்கள் செல்லா நோட்டாக நினைக்கிறார்கள் என த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.

வாசன்


கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணனை ஆதரித்து த.மா.கா தலைவர் ஜி.கே.வாசன் இன்று பிரசாரம் செய்தார். முன்னதாக அவர் கருங்கல் பகுதியில் செய்தியாளர்களிடம் பேசுகையில், ``கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதியில் அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனின் வெற்றி உறுதி செய்யப்பட்டுவிட்டது. முன்னேற்றப் பாதையில் குமரி என்ற பெயரிலே அவர்கள் இந்தத் தொகுதியில் ஐந்து வருடத்தில் செய்திருக்கின்ற சாதனைகளை, கடந்த 50 வருட காலத்தில் எந்த நாடாளுமன்ற உறுப்பினரும் செய்தது இல்லை. ஆணித்தனமாக தன்னுடைய பணிகளை பொன்.ராதாகிருஷ்ணன் பதிவு செய்திருக்கிறார். 

வாசன்


எனவே, இந்தத் தொகுதி மக்களை சாதி, மதம், மொழி, இனம், பிராந்தியத்திற்கெல்லாம் அப்பாற்பட்டு, தொகுதிக்காகத் தன்னை முழுமையாக அர்ப்பணித்து வளர்ச்சியைப் பாதுகாக்கின்ற வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டும். பொன்.ராதாகிருஷ்ணன் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு மட்டுமல்ல தமிழர்களுக்குக் கிடைத்த ஒரே அமைச்சர் என்ற நிலையிலும் சளைக்காமல் பணிசெய்தவர். தன்னுடைய தொகுதியில் தனிக் கவனம் செலுத்தினாலும் கூட மீதி 38 தொகுதிகளில் உள்ள பணிகளையும் அங்கே உள்ள குறைகளையும் தீர்க்கக் கூடிய நிலையில் பணியாற்றினார். தமிழகத்திலேயே அதிகவாக்குகள் வித்தியாசத்தில் பொன்.ராதாகிருஷ்ணனை வெற்றிபெற வைக்க வேண்டும். இந்த வெற்றி என்பது வெறும் கன்னியாகுமரிக்கு மட்டுமல்ல, தமிழகத்துக்கும் இந்தியாவுக்கும் சேரும்.  பொன்.ராதாகிருஷ்ணனின் மக்கள் பணி வரும் நாள்களில் மேன்மேலும் உயரும். இந்தத் தொகுதி இளைஞர்களுக்கு நூறு சதவிகிதம் வேலை வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்பதால் வர்த்தகத் துறைமுகம் திட்டத்தைக் கொண்டுவந்தார். 

வாசன்

 

காங்கிரஸ் கட்சியினுடைய தேர்தல் அறிக்கை என்பது காலம் போன ஒன்று. எனவே, அதை நம்ப இந்திய மக்களும் தமிழக மக்களும் தயாராக இல்லை. காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை மக்கள் செல்லா நோட்டாக நினைக்கிறார்கள்" என்றார்.