பண்டல் பண்டலாக இரட்டை இலைச் சின்னம் பதித்த சேலைகள் - தேனியில் பறிமுதல்! | sarees with admk logo seized in theni

வெளியிடப்பட்ட நேரம்: 06:30 (04/04/2019)

கடைசி தொடர்பு:11:29 (04/04/2019)

பண்டல் பண்டலாக இரட்டை இலைச் சின்னம் பதித்த சேலைகள் - தேனியில் பறிமுதல்!

அ.தி.மு.க-வின் சின்னமான இரட்டை இலைச் சின்னம் பதித்த பச்சை வண்ணச் சேலைகள், பண்டல் பண்டலாக தேனியில் கைப்பற்றப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இரட்டை இலை

தேனி மாவட்டம் கம்பத்தில் உள்ளது சுபா டிராவல்ஸ். இங்கு, இரட்டை இலைச் சின்னம் பதித்த சேலைகள், பண்டல் பண்டலாகக் கிடப்பதாகத் தேர்தல் பறக்கும்படைக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பறக்கும்படை அதிகாரி ஶ்ரீமன் தலைமையிலான குழுவினர் மற்றும் போலீஸார், இரட்டை இலை பதித்த சேலைகள் தொடர்பாக விசாரணை நடத்தினர். டிராவல்ஸ் பணியாளர்கள் முன்னுக்குப் பின் முரணாகப் பதில் கொடுத்ததால் சந்தேகம் அடைந்தவர்கள், சேலைகள் அடங்கிய பண்டல்களைப் பறிமுதல்செய்து, உத்தமபாளையம் வட்டாட்சியர் சத்தியபாமாவிடம் ஒப்படைத்தனர்.

அவர், இது தொடர்பாக விசாரணை நடத்திவருகிறார். இச்சம்பவம், தேனியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக சத்தியபாமாவிடம் பேசியபோது, "திருப்பூரில் இருந்து ஆம்னி பஸ் மூலமாக சேலைகள் வந்துள்ளன. ஆயிரம் சேலைகளில் இரட்டை இலை பிரின்ட் செய்யப்பட்டுள்ளது. யார் அனுப்பியது... யார் இவற்றைப் பெற்றுக்கொள்ள இருந்தது என விசாரணை நடந்துவருகிறது" என்றார்.