`காக்காவைப் போல சுட சொன்ன அ.தி.மு.க கூட்டணியா ஆட்சிக்கு வரணும்' - கனிமொழிக்கு ஆதரவு திரட்டிய உதயநிதி! | The AIADMK, who shot 13 people, will come to power with the coalition says udhaya nithi

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (04/04/2019)

கடைசி தொடர்பு:11:29 (04/04/2019)

`காக்காவைப் போல சுட சொன்ன அ.தி.மு.க கூட்டணியா ஆட்சிக்கு வரணும்' - கனிமொழிக்கு ஆதரவு திரட்டிய உதயநிதி!

``இதே தூத்துக்குடியில் துப்பாக்கிச்சூடு நடத்தி 13 அப்பாவிகளைப் படுகொலை செய்த அ.தி.மு.க.,வும், பா.ஜ.க.,வும் மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டுமா? வரும் ஏப்ரல் 18, மோடிக்கு கெட் அவுட்” எனத் தூத்துக்குடியில் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதி தி.மு.க., வேட்பாளர் கனிமொழியை ஆதரித்து நடிகர் உதயநிதி ஸ்டாலின் தூத்துக்குடியில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், ``இதே தூத்துக்குடி மண்ணிலிருந்து ஸ்டெர்லைட் ஆலையை அகற்றிட வேண்டும் என அந்த ஆலையைச் சுற்றியுள்ள மக்கள் 100 நாள்களாகப் போராட்டம் நடத்தி வந்தனர். ஒருநாள் கூட இந்த அரசோ, அமைச்சர்களோ, ஆட்சியாளர்களோ கண்டுகொள்ளவில்லை.

100-வது நாளில், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கிப் பேரணியாகச் சென்ற மக்கள் மீது இந்த எடப்பாடி அரசு துப்பாக்கிச்சூடு நடத்தியது. மக்கள் போராட்டத்தில் அப்பாவி மக்களில் 13 பேரை பட்டப் பகலில் காக்கா, குருவியைச் சுட்டுக் கொல்வது போல சுட்டுக் கொன்றார்கள். இந்தக் கொடுமைகளுக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டாமா? மக்கள் போராட்டத்தில் திட்டமிட்டே கொலை செய்திருக்கிறது இரக்கமற்ற எடப்பாடி அரசு.

துப்பாக்கிச்சூடு குறித்து மீடியாக்களின் கேள்விக்கு, ``ஆயிரம் பேரைக் கலைப்பதற்கு 13 பேரைச் சுட்டால் தவறில்லை. எங்கள் ஆட்சியில்தான் 35 ஆயிரம் போராட்டங்கள் நடந்துள்ளன. வேறு ஆட்சியில் இப்படிக் கிடையாது என்கிறார் இது ஒரு சாதனையா?” இப்படி, மனசாட்சி இல்லாமல் பதில் கூறியுள்ள எடப்பாடி பழனிசாமி  ஒரு முதல்வரா? ஜி.எஸ்.டி., வரி அமலாக்கம், நீட் தேர்வு, பணமதிப்பிழப்பு ஆகியவைதான் முந்தைய பா.ஜ.க., ஆட்சியின் சாதனை. மோடியின் இந்தச் சாதனைகளைச் சொல்லி பா.ஜ.க., வேட்பாளரான தமிழிசை மக்களிடம் ஓட்டு கேட்கமுடியுமா? கனிமொழியை எதிர்த்துப் போட்டியிடும் தமிழிசை டெபாசிட் இழக்க வேண்டும். வரும் ஏப்ரல் 18, மோடிக்கு கெட் அவுட்” என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க