``ஜோதிமணி கிட்ட ஒரு வாக்குறுதியை வாங்கிக்குங்க!' - கரூர் தேர்தல் பிரசாரத்தில் கே.எஸ் அழகிரி | k.s azhagiri election campaign at karur

வெளியிடப்பட்ட நேரம்: 08:50 (04/04/2019)

கடைசி தொடர்பு:11:30 (04/04/2019)

``ஜோதிமணி கிட்ட ஒரு வாக்குறுதியை வாங்கிக்குங்க!' - கரூர் தேர்தல் பிரசாரத்தில் கே.எஸ் அழகிரி

கரூர் நாடாளுமன்றத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக ஜோதிமணி களத்தில் இருக்கிறார். இவருக்கு வாக்கு சேகரிப்பதற்காக தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் அழகிரி கரூர் தொகுதியில் சுற்றுப்பயணம் செய்தார். அதன் ஒரு பகுதியாக திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வேடசந்தூர் தொகுதியில் பிரசார பொதுக்கூட்டம் நடந்தது.

ஜோதிமணி

குஜியம்பாறையில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அழகிரி, காங்கிரஸின் தேர்தல் அறிக்கை, உள்ளிட்ட பல்வேறு விஷயங்களைப் பேசி ஓட்டுக் கேட்டார். தொடர்ந்து பேசியவர், ``சமீபத்தில் அமித் ஷா தூத்துக்குடி வந்தார். அப்போது பேசிய தமிழிசை தாமரை கடலில் கூட மலரும் என்று சொன்னார். தாமரை சேற்றில்தான் மலரும். உப்புத் தண்ணீரில் மலராது. அதுவும் நல்ல தாமரைதான் சேற்றில் மலரும். தமிழிசை போன்றவர்களிடையே உள்ள தாமரை சாக்கடையில் மலருமே ஒழிய.. சேற்றில் மலராது. தேனியில் பன்னீர் செல்வம் மகன் போட்டியிடுகிறார். ஆரத்தி எடுப்பவர்களுக்கு 500 ரூபாய் கொடுக்கிறார்கள். அதனால் வரிசை வரிசையாக நின்று ஆரத்தி எடுக்கிறார்கள். ஆனால், எந்த நடவடிக்கையும் இல்லை.

தேர்தல் ஆணையத்துக்கு தேனிக்கு வழி தெரியவில்லையா? தேர்தல் ஆணையம் ஆளும்கட்சிக்கு ஒரு பணிவும், எதிர்க்கட்சிக்கு ஒரு பாகுபாடும் காட்டுகிறது. இது தொடர்ந்தால் இதற்கான தண்டனையை நீங்கள் அனுபவிக்க நேரிடும் என எச்சரிக்கிறேன். தமிழகத்திலேயே எளிமையான, ஏழ்மையான வேட்பாளர் ஜோதிமணிதான். மிகவும் வலிமை வாய்ந்த, செல்வம் வாய்ந்த ஒரு வேட்பாளரை எதிர்த்து நிற்கிறார்'' என்றார். இறுதியாகப் பேசியவர், ``நீங்கள் ஓட்டுப் போட்டு ஜோதிமணியை நாடாளுமன்றத்துக்கு அனுப்புங்கள். அப்ப ஜோதிமணி கிட்ட ஒரு வாக்குறுதியை வாங்கிக்குங்க. நாங்க எம்.பியாக்கிடுறோம். நீங்க விரைவில் திருமணம் செஞ்சிகிட்டு திருமதியாகிடணும்’’னு உறுதிமொழி வாங்கிக்குங்க’’ என்றார். கூட்டத்தில் திண்டுக்கல் தி.மு.க மேற்கு மாவட்டச் செயலாளர் சக்கரபாணி மற்றும் முன்னாள் எம்.பி.கார்வேந்தன் கரூர் மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினர் பலரும் கலந்துகொண்டனர். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க