`எல்லாத்துலையும் புதுசு தேடுறீங்க; அரசியல்ல மட்டும் பழசு எதற்கு?" - திண்டுக்கலில் சீமான் பேச்சு | seeman election campaign at dindigul

வெளியிடப்பட்ட நேரம்: 08:30 (04/04/2019)

கடைசி தொடர்பு:11:31 (04/04/2019)

`எல்லாத்துலையும் புதுசு தேடுறீங்க; அரசியல்ல மட்டும் பழசு எதற்கு?" - திண்டுக்கலில் சீமான் பேச்சு

நாம் தமிழர் கட்சி சார்பில் திண்டுக்கல் நாடாளுமன்றத் தொகுதியில் நடிகர் மன்சூன் அலிகான் போட்டியிடுகிறார். நிலக்கோட்டை சட்டமன்ற இடைத்தேர்தலில் சங்கிலி பாண்டியன் போட்டியிடுகிறார். இவர்களுக்காக வாக்கு சேகரிப்பதற்கான பொதுக்கூட்டம் திண்டுக்கல்லில் நடைபெற்றது. மணிக்கூண்டில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய சீமான், `` பணம் வாங்கிக்கொண்டு ஒட்டு போடுவதை நிறுத்துங்கள், அது மானத்தை விற்பதற்குச் சமம். எல்லாவற்றிலும் புதிதாக தேடுகிறீர்கள். ஆடையில் புதியது, சினிமாவில் புதியது என அனைத்திலும் புதிதாகத் தேடுகிறீர்கள். ஆனால், அரசியலில் மட்டும் ஏன் பழையதையே தொங்கிக்கொண்டு இருக்கிறீர்கள். அதிலும் புதிதாகத் தேடுங்கள். தரமானதைத் தேர்ந்தெடுங்கள்.

சீமான் 

இத்தனை ஆண்டுக்காலம் ஆண்ட காங்கிரஸ், இப்போது ஆளும் பி.ஜே.பி, தி.மு.க., அ.தி.மு.க என இந்தக் கட்சிகள் எல்லாம் ஆண்டு பார்த்து விட்டீர்கள். அவை என்ன செய்திருக்கின்றன…எதுவும் இல்லை. பிறகு எதற்காக அவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு கொடுக்க வேண்டும். புதிய சமுதாயத்தை படைக்கக் களம் இறங்கியிருக்கிறது நாம் தமிழர். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் விவசாயத்தை அரசு தொழிலாக்குவோம். ஐம்பத்தெட்டு வயது நிறைவடைந்த விவசாயிகளுக்கு ஓய்வூதியம் அளிப்போம். உலகத் தரமான கல்வி இலவசமாகக் கொடுப்போம். அரசுக் கல்வி நிலையங்கள், அரசு மருத்துவமனைகளில் எந்த அமைச்சர் குழந்தைகளாவது பயன்பெறுகிறார்களா? இல்லை. காரணம் அவை தரமாக இல்லை.

சீமான்

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் தரமான மருத்துவத்தை இலவசமாக்குவோம். அரசு ஊழியர்கள் அவர்கள் குடும்பத்தினர் அரசு மருத்துவமனைகளில்தான் சிகிச்சை பெற வேண்டும் என்பதைக் கட்டாயமாக்குவோம். எதற்கும் பயப்படாத அண்ணன் மன்சூர் அலிகானை நாடாளுமன்றத்துக்கு அனுப்புங்கள். இவர் ஒருவர் போதும் அங்கிருப்பவர்களை விரட்டுவதற்கு. புதிய சமுதாயம் அமைய நாம் தமிழர் வேட்பாளர்களுக்கு வாக்களியுங்கள். கேரளாவில் ஓட்டுக்குக் காசு கொடுத்தால் அடிக்கிறார்கள். இங்கே காசு கொடுக்கவில்லை என்றால் அடிக்கிறார்கள். இந்த நிலை மாற வேண்டும். கஜா புயல், துப்பாக்கிச்சூடு இறந்தவர்களுக்கு வராத ராகுல், மோடிக்கு எதற்கு வாக்கு போடுகிறீர்கள். தேர்தல் என்பது வாக்கை விற்பனை செய்யும் சந்தை இல்லை. எதிர்கால வாழ்க்கையைத் தீர்மானிக்கிற சிந்தை’’என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க