`வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறினால், பதவியை ராஜினாமா செய்வேன்!' - மக்கள் நீதி மய்ய வேட்பாளர் உறுதி | If I can not full fill demands of the people, I will resign as Member of Parliament post says makkal needhi maiam candidate

வெளியிடப்பட்ட நேரம்: 09:20 (04/04/2019)

கடைசி தொடர்பு:11:31 (04/04/2019)

`வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறினால், பதவியை ராஜினாமா செய்வேன்!' - மக்கள் நீதி மய்ய வேட்பாளர் உறுதி

``மக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய முடியாமல் போனால் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வேன்" என்றுமக்கள் நீதி மய்யத்தின் மயிலாடுதுறை தொகுதி வேட்பாளர்  ரிபாயுதீன் தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்.

மக்கள் நீதி மய்யம்

மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் மயிலாடுதுறை நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் ரிபாயுதீன், இன்று கும்பகோணம், தாராசுரம், திருவலஞ்சுழி, சுவாமிமலை, திருமண்டங்குடி உள்ளிட்ட பல்வேறு நகர்ப்புற, கிராமப்புறப் பகுதிகளுக்குச் சென்று விவசாயிகள், பெட்டிக் கடைக்காரர்கள், வணிகர்கள் என அனைவரையும் நேரில் சென்று வாக்கு சேகரித்தார். 

அப்போது வேட்பாளர் ரிபாயுதீன் பேசும்போது, ``வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் மாற்றம் வரவேண்டும் என மக்கள் காத்துக்கொண்டிருக்கின்றனர். எந்தக் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் என்ற குழப்பம் மக்களிடம் ஏற்பட்டுள்ளது. எனவே, அனைத்து வகையிலும் மக்களுக்கு  வெளிச்சத்தை தரும் டார்ச் லைட்டுக்கு வாக்களிக்க வேண்டும் என மக்கள் முடிவு செய்துவிட்டனர். மக்கள் நீதி மய்யத்தின் கொள்கைகளான தரமான சாலை, குடிசை இல்லா வீடு, நல்ல கல்வி, சிறந்த அடிப்படை வசதி, வறுமை ஒழிப்பு, பொது சுகாதாரம் என அனைத்தும் 100 சதவிகிதம் எல்லா தரப்பினருக்கும் கிடைக்கப்  பாடுபடுவேன். 

தமிழகத்தில் 35 வருடங்களாக நற்பணி சேவையில் ஈடுபட்டு வரும் கமல்ஹாசன் 16 கோடி ரூபாய் செலவில் எய்ட்ஸ் விழிப்புணர்வுக்காகவும், கஜா புயலின்போது மக்களின் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்கவும் உதவினார். எனவே, தமிழகத்தில் ஜனநாயக உரிமையை நிலைநாட்ட மக்கள் நீதி மய்யம் வேட்பாளாரான என்னை ஆதரித்து பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும். 

மயிலாடுதுறை தொகுதியில் 50,000  ஓட்டு வித்தியாசத்தில் வெற்றிபெற வேண்டும் கமல்ஹாசன் என்று கூறியிருக்கிறார். ஆனால், மக்களின் பேராதரவோடு ஒரு லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என உறுதியளிக்கிறேன். வெற்றி பெற்றவுடன் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கிராமப்புறப் பகுதிகளில் சென்று வருகைப் பதிவேடு செய்வேன். மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியாமல் போனால் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வேன்".என்று கூறினார்.