`திருப்பூரில் நடந்த அ.தி.மு.க தேர்தல் பிரசாரத்தில் விதிமுறை மீறலா?' - சர்ச்சையில் ஓ.பி.எஸ் கூட்டம்! | Ops election campaign program at tirupur

வெளியிடப்பட்ட நேரம்: 08:55 (04/04/2019)

கடைசி தொடர்பு:11:31 (04/04/2019)

`திருப்பூரில் நடந்த அ.தி.மு.க தேர்தல் பிரசாரத்தில் விதிமுறை மீறலா?' - சர்ச்சையில் ஓ.பி.எஸ் கூட்டம்!

திருப்பூரில் துணை முதல்வர் ஓ.பி.எஸ் கலந்துகொண்ட பிரசாரத்தில் தேர்தல் விதிமுறைகள் அப்பட்டமாக மீறப்பட்டது பெரும் சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது.

தேர்தல் பிரசாரம்

திருப்பூர் நாடாளுமன்றத் தொகுதி அ.தி.மு.க வேட்பாளர் எம்.எஸ்.எம் ஆனந்தனை ஆதரித்து அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், தமிழகத்தின் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் நேற்று தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். திருப்பூர் மாஸ்கோ நகர் பகுதியில் நடைபெற்ற பரப்புரையின்போது பேசிய ஓ.பி.எஸ், ``கடந்த காலங்களில் மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சிபுரிந்த காங்கிரஸ் - தி.மு.க கூட்டணி மக்களுக்கு எந்தவித நன்மைகளையும் செய்யவில்லை. இப்போது தி.மு.க-வினர் எதிர்க்கட்சியாக இருக்கும்போது பிரியாணிக்கும், புரோட்டாவுக்கும் தகராறு செய்துகொண்டு இருக்கிறார்கள். அ.தி.மு.க என்ற ஆலமரத்தில் ஒன்றறைக் கோடி தொண்டர்கள் என்ற விழுதுகள் இருக்கின்றன. இந்த ஆலமரத்தை வீழ்த்த கருணாநிதியாலேயே முடியவில்லை. ஸ்டாலினால் மட்டும் முடியுமா என்ன. வரும் 2023-ம் ஆண்டுக்குள் தமிழகம் குடிசைகள் இல்லாத மாநிலமாக மாறும்'' என்று பேசினார்.

ஓபிஎஸ் 

முன்னதாக ஓ.பி.எஸ் வந்ததும், அப்பகுதி அ.தி.மு.க நிர்வாகிகள் அவரை விழா மேடையில் ஏற்றி, ஒவ்வொருவராகச் சென்று அவருடன் கை குலுக்கினார்கள். அச்சமயம் தொண்டர் ஒருவரும் ஓ.பி.எஸ்ஸுடன் கைகுலுக்க முயன்றார். அப்போது அந்தத் தொண்டரைப் பிடித்து இழுத்த அ.தி.மு.க வேட்பாளர் எம்.எஸ்.எம் ஆனந்தன், அந்தத் தொண்டரை அங்கிருந்தே விரட்டியடித்தார். இதுவொருபுறமிருக்க, தேர்தல் விதிமுறைகள் தற்போது அமலில் இருக்கும் நிலையில், அதில் 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர் சிறுமிகளை தேர்தல் பிரசாரத்துக்குப் பயன்படுத்தக்கூடாது என்ற தேர்தல் நடத்தை விதியும் இருக்கிறது.

இந்த நிலையில் நேற்றைய தினம் மாலை 6 மணிக்குத் தொடங்கவிருந்த ஓ.பி.எஸ்ஸின் பிரசாரப் பரப்புரை சில மணி நேரங்கள் காலதாமதமானதால், அங்கு கூடியிருந்த மக்கள் கூட்டம் கலையாமல் இருப்பதற்காக தேர்தல் விதிமுறையையும் மீறி, அப்பகுதியைச் சேர்ந்த சிறுவர் சிறுமிகளை மேடையேற்றி குத்தாட்டம் போட வைத்தனர் அ.தி.மு.க-வினர். அந்தச் சிறுவர்களோடு சேர்ந்து அ.தி.மு.க-வினரும் ஆட்டம் போட்டது பார்வையாளர்கள் மத்தியில் பெரும் சர்ச்சையைக் கிளப்பிவிட்டது. துணை முதல்வர் கலந்துகொண்ட நிகழ்ச்சியிலேயே இப்படித் தேர்தல் விதிமுறைகள் மீறப்படலாமா என்ற கேள்வியும் பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.