அரூரில் அரசுப் பேருந்தில் சிக்கிய ரூ 3.47 கோடி; உரிமை கோராத பயணிகள் - தேர்தல் அதிகாரிகள் விசாரணை | 3.47 crore money seized by election squad from government bus

வெளியிடப்பட்ட நேரம்: 09:45 (04/04/2019)

கடைசி தொடர்பு:11:32 (04/04/2019)

அரூரில் அரசுப் பேருந்தில் சிக்கிய ரூ 3.47 கோடி; உரிமை கோராத பயணிகள் - தேர்தல் அதிகாரிகள் விசாரணை

தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்துள்ள பையர்நாயக்கன்பட்டியில் தேர்தல் அதிகாரி சண்முகம் தலைமையிலான குழு வாகன சோதனையில் ஈடுபட்டபோது, திருவண்ணாமலையிலிருந்து அரூர் வந்துகொண்டிருந்த அரசுப் பேருந்தை நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அப்போது அரசுப் பேருந்தின் இருக்கைகளுக்கு அடியிலிருந்த 7 பைகளைக் கைப்பற்றி பரிசோதனை செய்ததில், கட்டுக் கட்டாகச் சுற்றப்பட்ட 200 ரூபாய், 500 ரூபாய், 2,000 ரூபாய் நோட்டுகள் பிடிபட்டுள்ளது. அதில் மொத்தம் ரூ.3 கோடியே 47 லட்சம் பணத்தைக் கைப்பற்றியுள்ளனர். இந்தப் பணத்தைப் பேருந்தில் பயணம் செய்த யாரும் உரிமை கோராததால் பறக்கும் படை அதிகாரிகள், கைப்பற்றிய பணத்தை அரூர் வருவாய்க் கோட்டாட்சியர் அலுவலகத்துக்கு எடுத்துச் சென்று கணக்குக் காட்டிய பிறகு, அரசுக் கருவூலத்தில் ஒப்படைத்தனர். 

தேர்தல் அதிகாரிகள் கைப்பற்றிய பணம்

பேருந்தில் பயணம் செய்த செல்வராஜ் என்பவரைச் சந்தேகத்தின் பேரில் விசாரணை செய்தபோது, அந்தப் பணத்துக்கும், தனக்கும் எந்தவிதமான சம்பந்தமில்லை என்று தெரிவித்ததால், கடிதம் பெற்றுக்கொண்டு விடுவித்தனர். பணப் பையிலிருந்த பாரத ஸ்டேட் வங்கிக் கணக்குப் புத்தகத்தில் ரமேஷ் என்பவர் பெயர் இருந்துள்ளது. அந்தத் தரவுகளை வைத்துக்கொண்டு அடுத்தகட்ட விசாரணையைக் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

இது தொடர்பாக விசாரணை அதிகாரிகளிடம் பேசினோம், குறிப்பிட்ட ஒரு அரசியல் கட்சி எப்போதுமே தேர்தல் சமயத்திலும், திருவண்ணாமலை மாவட்டத்திலிருந்துதான் பணத்தைத் தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டத்துக்கு அனுப்பி வைப்பார்கள். இந்த முறையும் தொழிற்சங்க நிர்வாகிகள் மூலம் பணத்தை அனுப்பி வைத்துள்ளதாக ரகசியத் தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில், சோதனை மேற்கொண்டபோது, அரசுப் பேருந்தில் அனுப்பப்பட்ட பணத்தைக் கைப்பற்றியதாகத் தெரிவித்தனர். சம்பந்தப்பட்ட கட்சி நிர்வாகிகள் தரப்பிலோ... மொத்தம் 4 கோடி அனுப்பப்பட்டதாகத் தானே கணக்கு, பிறகு எப்படி 53 லட்சம் ரூபாய் குறைந்தது. பணத்தைக் கைப்பற்றி அதிகாரிகள் எடுத்துக் கொண்டார்களா..  இல்லை எடுத்துக்கொண்டுதான் பணத்தை அனுப்பினார்களா... என கட்சி நிர்வாகிகள் கிசுகிசுத்து வருகிறார்களாம்.  

இடைத்தேர்தல் நடைபெற இருக்கும் அரூர் சட்டமன்றத் தொகுதியில், அரசுப் பேருந்தில் 3.47 கோடி கைப்பற்றப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.