`பக்கத்துக் கடைக்காரர் சொன்னார், மடக்கிப் பிடித்தோம்!'- வி.சி.க பிரமுகர் ரூ.2.10 கோடியுடன் சிக்கிய பின்னணி | How the money caught from VCK member car

வெளியிடப்பட்ட நேரம்: 11:54 (04/04/2019)

கடைசி தொடர்பு:12:08 (04/04/2019)

`பக்கத்துக் கடைக்காரர் சொன்னார், மடக்கிப் பிடித்தோம்!'- வி.சி.க பிரமுகர் ரூ.2.10 கோடியுடன் சிக்கிய பின்னணி

விடுதலைச் சிறுத்தைகள் கட்சிப் பிரமுகர் காரின் கதவில் ஒளித்து வைத்து எடுத்துச் சென்ற 2 கோடியே 10 லட்சம் ரூபாய் பணத்தைத் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இப்பணம் எங்கிருந்து வருகிறது என்பது தேர்தல் பறக்கும் படையினருக்கு எப்படித் தெரிந்தது உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் தற்போது வெளிவரத்தொடங்கியுள்ளன

பறிமுதல் செய்யப்பட்ட பணம்


தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 நாடாளுமன்றத் தொகுதிகள், தமிழகத்தில் காலியாக உள்ள 18 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் ஏப்ரல் 18-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில், தமிழகம் முழுவதும் வாக்காளர்களுக்குப் பணம் பட்டுவாடா செய்யும் நோக்கில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள பணம் மற்றும் பொருள்கள் தேர்தல் ஆணையம் மற்றும் அதிகாரிகள், கண்கொத்திப் பாம்பாகப் பறிமுதல் செய்து வருகின்றனர். இந்த நிலையில், சிதம்பரம் தொகுதிக்குக் கொண்டும் செல்லும் பணத்தைத் தேர்தல் அதிகாரிகள் பிடித்துள்ள சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 பணத்தை பையில் எடுக்கும் போலீஸார்

கடந்த 2 -ம் தேதி மாலை பெரம்பலூர் டு அரியலூர் சாலையில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியே வந்த வி.சி.க பிரமுகரின் காரை நிறுத்தி சோதனை செய்தபோது எதுவும் இல்லாமல் சாதாரணமாக இருந்துள்ளது. பின்பு காரின் கதவை மூடியபோது சரியாக மூடவில்லை. திடீரென சந்தேகமடைந்த தேர்தல் அதிகாரிகள் காரின் கதவு வித்தியாசமாக இருப்பதை தெரிந்துகொண்டதும், அதைத் திறந்து பார்த்துள்ளனர். அப்போது காரின் கதவு உட்புறம் தகடுகளை வைத்துப் பற்ற வைத்துள்ளதைக் கண்ட அதிகாரிகள் எல்லாவற்றையும் பிரித்துப் பார்த்துள்ளனர். அதில் 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகளை மறைத்து வைத்துள்ளது தெரியவந்துள்ளது. இதையடுத்து, பணத்தைப் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். இந்தப் பணத்தை எடுத்து வந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிர்வாகி தங்கதுரை, பிரபாகரன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். பணத்துக்கான ஆவணங்கள் இல்லாத நிலையில், இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

விசிக பிரமுகரிடம் சிக்கிய பணம்

என்ன நடந்தது என்று சில போலீஸாரிடம் பேசினோம். ``சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் போட்டியிடுகிறார். வாக்கு சேகரிக்க வரும் தொண்டர்களுக்குச் சாப்பாடு மற்றும் பெட்ரோல் போடுவதற்குக் கூட திருமாவளவன் பணம் கொடுப்பதில்லை என்ற குற்றச்சாட்டுகள் நிலவி வருகிறது. இந்த நிலையில், அவரிடம் சுத்தமாகப் பணம் இல்லாத காரணத்தால் திருச்சியில் உள்ள ஒரு பைனான்சியரிடம் கைமாற்றாக இரண்டு கோடி ரூபாய் பணம் கேட்டிருக்கிறார். அவரும் தருவதாக ஒத்துக்கொண்டு பணத்தைக் கொடுத்துள்ளார். பணத்தை வாங்கியவர்கள் இப்பணத்தை எப்படிக் கொண்டு செல்வது என்று தெரியாமல் திருச்சியில் உள்ள ஒரு வெல்டிங் ஷாப்பில் காரின் கதவில் பிரித்து அதில் தகடு வைத்து அதில் பணத்தை அடுக்கி வைத்துள்ளனர். அப்போது அந்த வெல்டிங் ஷாப்பின் பக்கத்துக் கடைக்காரர் பறக்கும் படை அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்துள்ளார். அதன் பேரில் திருச்சியிலிருந்து இந்தக் காரை டிராக் செய்து மடக்கிப் பிடித்துள்ளோம். பணத்தை எடுத்துவந்த இருவர்களிடம் விசாரித்துக்கொண்டிருக்கிறோம் பிறகு பேசுவதாக போனை துண்டித்தார்கள்.

வன்னியரசு

இதுகுறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் செய்தி தொடர்பாளர் வன்னியரசுவிடம் பேசினோம். ``இது முழுக்க முழுக்க தி.மு.க.வையும் அதன் கூட்டணியிலுள்ள கட்சிகளைப் பழிவாங்க வேண்டும் என்ற எண்ணத்தில் அ.தி.மு.க, மோடி அரசு தேர்தல் ஆணையத்தை கையில் வைத்துக்கொண்டு கங்கணம் கட்டிக்கொண்டு இறங்கியுள்ளது. இதன் முன்னோட்டமாகதான் துரைமுருகன் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினார்கள். அடுத்ததாக எங்களை இப்படி வைத்துள்ளார்கள். நாங்கள் பணம் கொடுக்க வேண்டிய அவசியம் என்ன இருக்கிறது. நாங்கள் தேர்தல் ஆரம்பிக்கும் முன்பே தேர்தல் நிதியை அக்கவுன்ட்டில் போடச்சொல்லி நிர்வாகிகளிடம் கொடுத்துள்ளோம். அவர்களும் பணத்தை செலுத்திக்கொண்டிருக்கிறார்கள். நாங்கள் இந்த அளவுக்கு வெளிப்படைத் தன்மையுடன் நடந்துகொண்டிருக்கிறோம். ஆனால், எங்கள் மீது உள்ள பயத்தால் வேண்டுமென்றே சூழ்ச்சி செய்கிறது ஆளும்கட்சி. சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள பூத்களில் ஆயிரம் நோட்டீஸ்கள் இருந்தால் அதிகாரிகள் சூழ்ந்துகொண்டு இதற்கு கணக்கு கேட்கிறார்கள். அதேபோல் எங்க நிர்வாகிகளின் வாகனத்தை மறித்து சோதனை செய்வது என பல அட்ராசிட்டி வேலையில் இறங்கியிருக்கிறார்கள்.

ஒரு இடத்தில் பணத்தைப் பிடித்தால் அந்த இடத்தில் முழுமையாக பரிசோதனை செய்த பிறகுதான் சம்பந்தப்பட்ட ஆட்சியர் அலுவலகத்துக்குக் கொண்டு செல்வது வழக்கம். ஆனால். இங்கு பிடித்த காரை ஆர்.டி.ஓ அலுவலகத்துக்குக் கொண்டுசென்று பிரிக்க என்ன காரணம். இவர்களுக்கு யார் அழுத்தம் கொடுத்தது என்று எங்களுக்குத் தெரியும். இது முழுக்க முழுக்க எங்களைத் தோற்கடிக்க வேண்டும் என்று எண்ணி எதிர்க்கட்சிகள் பின்னிய வலை. இதற்கு நாங்கள் ஒருபோதும் அஞ்ச மாட்டோம்" என்று முடித்துக்கொண்டார்.