`அதிகாரம் ஓர் இடத்தில் மட்டுமே இருக்காது!” - தேர்தல் அதிகாரிகளை எச்சரிக்கும் கே.எஸ். அழகிரி | k.s.alagiri warns election officers

வெளியிடப்பட்ட நேரம்: 10:10 (04/04/2019)

கடைசி தொடர்பு:11:32 (04/04/2019)

`அதிகாரம் ஓர் இடத்தில் மட்டுமே இருக்காது!” - தேர்தல் அதிகாரிகளை எச்சரிக்கும் கே.எஸ். அழகிரி

``துரைமுருகன் வீட்டில் சோதனை நடத்தியதைப் போன்று அ.தி.மு.க அமைச்சர்களின் வீடுகளில் ஏன் சோதனை நடத்தப்படவில்லை'' என கேள்வி எழுப்புகிறார் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி.

கே.எஸ்.அழகிரி

நாடாளுமன்றத் தேர்தல் நடக்க உள்ளதை அடுத்து தமிழகம் முழுவதும் தேர்தல் பிரசாரக் கூட்டங்கள், தேர்தல் வாக்கு சேகரிப்பு மிகவும் தீவிரம் அடைந்துள்ளன. இந்த நிலையில், திருச்சி நாடாளுமன்றத் தொகுதியில், தி.மு.க கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் திருநாவுக்கரசரை ஆதரித்து, திருச்சி பீமநகர் செடல் மாரியம்மன் கோயில் திடலில், மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நேற்று இரவு நடைபெற்றது.

திருச்சி காங்கிரஸ் மாநகர் மாவட்டச் செயலாளர் ஜவஹர் தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ் முக்கிய நிர்வாகிகளான திருச்சி வேலுச்சாமி, சு.ப.சோமு, தெற்கு மாவட்டத் தலைவர் கோவிந்தராஜன், வடக்கு மாவட்டத் தலைவர் கலை மற்றும் சிறப்பு அழைப்பாளராகத் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

மேடையில் பேசிய கே.எஸ்.அழகிரி, ``மக்கள் பிரதிநிதியாக தேர்ந்தெடுக்கப்படுபவர் நன்கு பேசக் கூடியவராகவும், சட்டமன்றத்துக்கும் நாடாளுமன்றத்துக்கும் சென்று மக்களின் பிரச்னைகளைப் பற்றி விவாதிக்கக் கூடியவராக இருக்க வேண்டும். உங்கள் தொகுதியில் போட்டியிடும் திருநாவுக்கரசர் அந்தத் தகுதி உடையவர். ஆனால், அவரை எதிர்த்து அ.தி.மு.க தலைமையிலான கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளருக்கு அந்தத் தகுதி இருக்கிறதா என்று எண்ணிப் பார்க்க வேண்டும்.

திருச்சி காங்கிரஸ் பொதுக்கூட்டம்

இன்று ஜனநாயகம் பலவீனமாகவும், பணநாயகம் பலமாக இருக்கிறது. தேர்தல் ஆணையம் என்பது ஒரு சுதந்திரமான அமைப்பு. கடந்த ஆண்டுகளில் தேர்தல் ஆணையம் பல தோல்விகளைச் சந்தித்துள்ளது. தேர்தலுக்கு சில வாரங்களுக்கு முன்பு வாகன சோதனை நடத்தி வியாபாரியிடம் பணம் பறிமுதல் செய்வது, வங்கிகளுக்குக் கொண்டு செல்லும் பணத்தைப் பறிமுதல் செய்வது, பெண்கள் கொண்டு செல்லும் நகைகளைப் பறிமுதல் செய்வது எல்லாம் சரி. ஆனால், தேர்தலுக்கு முந்தைய கடைசி இரண்டு நாள்கள் கண்டுகொள்ளாமல்  விட்டுவிடுவார்கள்.

துரைமுருகன் பல ஆண்டுகளாக அமைச்சராக இருந்தவர். தி.மு.க-வின் முக்கிய முன்னணி தலைவர்களில் ஒருவர். இந்த நிலையில், அவரின் மகன் தேர்தலில் போட்டியிடுகிறார். அவருடைய வெற்றி வாய்ப்பைத் தடுக்க, அவரது வீட்டில் ஒரு நாள் முழுவதும் சோதனை நடத்தினார்கள். ஏன் தமிழகத்தில் துரைமுருகன் வீட்டில் மட்டும் ஏன் சோதனை நடத்துகிறார்கள். அவர் வீட்டில் சோதனை நடத்தியது போன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்ட அ.தி.மு.க அமைச்சர்கள் வீடுகளிலும் சோதனை நடத்தவில்லை. அங்கெல்லாம் சோதனை நடத்தாமல் துரைமுருகன் வீட்டுக்கு மட்டும் சோதனை நடத்தி, கதிர் ஆனந்தை தேர்தலில் தோல்வியடையச் செய்ய அனைத்து சதிவேலைகளும் செய்யப்படுகிறது.

 காங்கிரஸ் பொதுக்கூட்டம்

தேர்தல் ஆணையம் ஆளுங்கட்சிக்கு ஒரு அளவுகோல், எதிர்க்கட்சிக்கு ஒரு அளவுகோல் எனப் பாரபட்சமாக செயல்படக்கூடாது. தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகளை காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைமை எச்சரிக்கிறது. தேர்தல் ஆணையம் இதுபோன்று ஒரு சார்பான நிலைமை எடுத்தால், வருங்காலத்தில் அதற்கான பலனை அனுபவிப்பார்கள். அதிகாரம் ஓர் இடத்தில் மட்டும் இருக்காது. அது எல்லோருக்கும் எல்லோருடைய கைகளுக்கும் வரும். அதனால் அதிகாரிகள் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். காங்கிரஸ் கட்சித் தேர்தல் அறிக்கையை வெளியிட்டிருக்கிறது. மாநில அரசுகள் விரும்பினால் நீட் தேர்வை வைத்துக்கொள்ளலாம் என காங்கிரஸ் தலைமை அறிவித்துள்ளது. இது கோடான கோடி தமிழக மாணவர்களுக்குக் கிடைத்துள்ள அற்புத வாய்ப்பு. எனவே, காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் திருநாவுக்கரசருக்கு கைச் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும்” என்று கூறிவிட்டுக் கிளம்பினார்.


தேர்தல் பிரசாரத்தை முடித்த கே.எஸ்.அழகிரி மற்றும் திருநாவுக்கரசர் ஆகியோர் மேடையிலிருந்து கீழே இறங்கியபோது, ஏராளமான தொண்டர்கள் அவர்களைச் சூழ்ந்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அதில் தி.மு.கவைச் ஒருவருக்கும் காங்கிரஸ் கட்சிக்காரருக்கும் திடீர் வாக்குவாதம் ஏற்பட்டு, அது தள்ளுமுள்ளு வரை போனது. அதையடுத்து அங்கிருந்த போலீஸாரும், பொதுமக்களும் பிரச்னையை சரி செய்தனர். இது இப்படியிருக்க, காங்கிரஸ் மாநிலத் தலைவர் கலந்துகொள்ளும் கூட்டத்தில் மருந்துக்குக் கூட தி.மு.க நிர்வாகிகள்  கலந்துகொள்ளவில்லை. தி.மு.க மாவட்டப் பொறுப்பாளரும் முன்னாள் அமைச்சருமான கே.என்.நேரு, உடல்நலக்குறைவால் கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை. இன்னொரு முக்கியமான வேலை இருந்ததால் அவரால் கலந்துகொள்ள முடியவில்லை என திருநாவுக்கரசர் மேடையில் அறிவித்தார். நேரு கூட்டத்துக்கு வரவில்லை என தகவலறிந்த முக்கிய நிர்வாகிகள் பலரும் அங்கிருந்து எஸ்கேப் ஆனார்கள்.

காங்கிரஸ் மாநிலத் தலைவர் கலந்துகொண்ட கூட்டத்தை கூட்டணிக் கட்சியினரே கண்டுகொள்ளாமல் போனதும், கூட்டம் முடிவில் வாக்குவாதம் ஆனதும் சிறிதுநேர பரபரப்பை உண்டாக்கியது.