`டெல்லிக்கு இப்போதே டிக்கெட் ரிசர்வ் செய்திருங்க!'- வேட்பாளரை குஷிப்படுத்திய பிரேமலதா | Election 2019: premalatha vijayakanth campaign

வெளியிடப்பட்ட நேரம்: 12:20 (04/04/2019)

கடைசி தொடர்பு:12:20 (04/04/2019)

`டெல்லிக்கு இப்போதே டிக்கெட் ரிசர்வ் செய்திருங்க!'- வேட்பாளரை குஷிப்படுத்திய பிரேமலதா

துரைமுருகன் தே.மு.தி.கவை அசிங்கப்படுத்த நினைத்தார். ஆனால், இன்று அவரே அசிங்கப்பட்டு நிற்கிறார். இந்த நேரத்தில் அரசன் அன்று கொள்வான்; தெய்வம் நின்று கொல்லும் என கேப்டன் அடிக்கடி கூறுவார். அதைதான் நான் நினைத்துப் பார்க்கிறேன்'' என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.

பிரேமலதா

தஞ்சாவூர்  நாடாளுமன்றத் தொகுதி த.மா.கா. வேட்பாளர் நடராஜன் மற்றும் சட்டமன்றத் தொகுதி அ.தி.மு.க வேட்பாளர் காந்தி இருவருக்கும் வாக்குகேட்டு தே.மு.தி.க.வின் துணை பொதுச் செயலாளர் பிரமலதா தஞ்சாவூர் கீழவாசல் பகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசத் தொடங்கியதுமே தொண்டர்கள் கேப்டன் எப்படி இருக்கார் எனக் கேட்டு கோரஸாக கத்தினர். `கேப்டன் நலமுடன், சூப்பரா இருக்கார். உங்களைப் பார்க்க நிச்சயம் வருவார்' எனக் கூறிவிட்டுப் பேச ஆரம்பித்தார். ``இந்தக் கூட்டணி இமாலய, வெற்றிக் கூட்டணி. தமிழக மக்கள் வரவேற்கும் கூட்டணி. அதே நேரத்தில் தி.மு.க. ஊழல் கூட்டணி. 2 ஜி ஊழல், நிலக்கரி ஊழல், காமன்வெல்த் ஊழல், இதைவிட, ஈழப் பிரச்னைக்கு காரணமான தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி. ஆனால் நமது கூட்டணி உண்மை, உழைப்பவர்களுக்கான கூட்டணியாக உள்ளது.

பிரேமலதா பிரசாரம்

இந்தக் கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் மோடிதான். அவர்தான் இந்த முறையும் பிரதமராக வருவார். 40 தொகுதியிலும் வெற்றி பெற்று, தமிழகத்துக்குத் தேவையான அனைத்துத் திட்டங்களையும் மத்திய அரசிடமிருந்து பெற்றுக்கொண்டு வரும். வரலாற்று, விவசாயிகள் நிறைந்த பூமி. அ.தி.மு.க கூட்டணி வெற்றி பெற்று டெல்லி சென்றதும் முதன் முதலில் தேசிய நதிகளை இணைக்க வலியுறுத்துவோம். விவசாயிகள் நன்றாக இருந்தால்தான் தமிழ்நாடு நன்றாக இருக்கும் என்பதால், முதன் முதலில் தேசிய நதி இணைப்பு வலியுறுத்தப்படும் என்கிறோம். அதேபோன்று விவசாயிகள் கடன் தள்ளுபடி, விலைவாசி உயர்வு கட்டுப்பாடு, வியாபாரிகளுக்கு ஜி.எஸ்.டி.யால் பாதிக்காத வகையில் கேட்டுப் பெறுவோம். தேர்தல் அறிக்கை இன்னும் இரண்டு, மூன்று நாளில் வெளியாக உள்ளது. அந்த அறிக்கை விவசாயிகளை காக்கக் கூடிய அறிக்கையாக இருக்கும்.

ராகுல் காந்தி பல்வேறு திட்டங்களைத் தேர்தல் அறிக்கையில் சொல்லியுள்ளார். முதலில் ராகுல் காந்தி வெற்றி பெற வேண்டும். அவர் வெற்றி பெறுகிறாரா என பார்ப்போம். அப்படியே வெற்றி பெற்றாலும் ஆட்சிக்கு வர வேண்டும். அதன் பிறகு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவார்களா என்பது கேள்விக்குறிதான். ஆனால், நமது கூட்டணி அப்படி இல்லை. நமது பிரதமர் மோடி நாட்டை பாதுகாக்ககூடியவர் என்பதைச் சொல்லி வாக்கு கேட்டு வருகிறோம். மத்திய, மாநில அரசுகள் ஒன்று சேர்ந்து, உறுதியாக நமக்கு அளித்த வாக்குறுதிகளை மக்களுக்கும், தொகுதிகளுக்கும் செய்ய முடியும். இமாலய சாதனை செய்யக் கூடிய கூட்டணியாக அமையும். நிச்சயம் 40 தொகுதியும் நாமே என்பதாக அமைய வேண்டும். இந்தக் கூட்டணி அமையக் கூடாது என தி.மு.க. பல்வேறு சூழ்ச்சிகளைச் செய்தது. ஆனால், எல்லா சூழ்ச்சிகளையும் முறியடித்து, நமது கூட்டணி அமைந்துள்ளது.

தஞ்சாவூர்  நாடாளுமன்ற தொகுதி த.மா.கா. வேட்பாளர் நடராஜனை ஆதரித்து பிரசாரம்

வருங்காலத்திலும் இந்தக் கூட்டணி தொடரும். இந்தக் கூட்டணி  மாபெரும் வெற்றியைப் பெறும். தேர்தலில் வெற்றியைத் தருவீர்களா, அமோக வெற்றியைத் தருவீர்களா, சாதனை வெற்றியைத் தருவீர்களா என மக்களைப் பார்த்து ஜெ, பாணியில் கேட்டதோடு நாளை நமதே நாற்பதும் நமதே என்றார். மேலும், த.மா.கா. வேட்பாளர் நடராஜன் இப்போ டெல்லிக்கு டிக்கெட் ரிசர்வ் செய்துக்கலாம். அ.தி.மு.க,வேட்பாளர் காந்தியும் சென்னையில் உள்ள சட்டமன்றத்துக்கு வந்து விடலாம். இருவரின் வெற்றியும் உறுதியாகி விட்டது. கேப்டன் நல்லா இருக்கார். கேப்டன் டிவியில் பிரசார நிகழ்ச்சிகளைப் பார்த்துக்கிட்டே இருக்கார். அரை மணி நேரத்துக்கு முன்புகூட போனில் பேசினார். உங்களைக் கேட்டதாகச் சொல்லச் சொன்னார். அவர் பிரசாரத்துக்கும் வருவார். அதை தலைமைதான் முடிவு செய்யும்'' என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க