`அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணி இதுவரை வென்றதில்லை; தற்போது சரித்திரம் படைப்போம்!'- முதல்வர் முன் பொன்னார் பேச்சு | pon radhakrishnan campaign in kanniyakumari with chief minister

வெளியிடப்பட்ட நேரம்: 13:10 (04/04/2019)

கடைசி தொடர்பு:13:10 (04/04/2019)

`அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணி இதுவரை வென்றதில்லை; தற்போது சரித்திரம் படைப்போம்!'- முதல்வர் முன் பொன்னார் பேச்சு

``கன்னியாகுமரி மாவட்டத்தில் பா.ஜ.க.வும், அ.தி.மு.க.வும் சேர்ந்து கூட்டணி அமைத்து இதுவரை வெற்றிபெற்றதில்லை என்ற கருத்து பொதுவாக உள்ளது. ஆனால், இந்தத் தேர்தலில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரு சரித்திரத்தை நாம் படைக்க வேண்டும்'' என முதல்வர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் பொன்.ராதாகிருஷ்ணன் பேசினார்.

 முதல்வர் எடப்பாடி பழனிசாமி

கன்னியாகுமரியில் அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று காலை நடந்தது. இதில் கன்னியாகுமரி தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டார். இந்தக் கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், ``ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு நடைபெறுகின்ற முதல் பொதுத்தேர்தல் இது. இந்தத் தேர்தலில் கழக தொண்டர்கள் இரவு பகல் பாராமல் உழைப்பார்கள். எனக்குப் பின்னாலும் நூறு ஆண்டுகள் இந்த இயக்கம் இருக்கும் என்று சட்டசபையில் ஜெயலலிதா குறிப்பிட்டதன் அடிப்படையில், அவர் மறைந்தாலும் அவர் சொன்ன லட்சிய வார்த்தைகள் எங்கள் நெஞ்சிலே நிறுத்தியுள்ளோம். ஒவ்வொரு தொண்டரும், நிர்வாகியும் ஜெயலலிதாவின் கனவை நிறைவேற்றும் விதமாக கடினப்பட்டு உழைத்து பொன்.ராதாகிருஷ்ணனை வெற்றிபெறச் செய்வதே எங்கள் முதல் கடமை. இது உங்கள் வெற்றி மட்டும் அல்ல, எங்கள் ஜெயலலிதா சொன்ன கருத்தை இந்தத் தேர்தல் மூலமாக பிரதிபலிப்போம்.

கூட்டத்துக்கு வரும் முதல்வர்

குமரி மாவட்டம் அ.தி.மு.க கோட்டை என்பதை நிரூபிக்கும் விதமாகவும், ஜெயலலிதாவுக்கு நன்றி செலுத்தும் விதமாகவும் எங்கள் வலிமையை ஒலிக்கச்செய்வோம். பா.ஜ.க.வுக்கு என்று தனி வாக்குவங்கி இருக்கிறது. அ.தி.மு.க-வுக்கும் வாக்கு வங்கி இருக்கின்றது. இரண்டையும் சேர்த்து நூற்றுக்கு நூறு சதவிகிதம் வெற்றிபெறுவோம். நம் கழக நிர்வாகிகள் இயன்ற அளவுக்கு மக்களைச் சந்தித்து பொன்.ராதாகிருஷ்ணனுக்கு வாக்கு திரட்ட வேண்டும். மத்தியில் ஒரு நிலையான ஆட்சி அமைய வேண்டும். மத்தியிலும் மாநிலத்திலும் ஒருமித்த கருத்துள்ள கட்சிகள் ஆட்சி செய்தால்தான் தமிழகம் செழிக்கும், வளம் பெறும். மத்தியில் ஒருமித்த கருத்துள்ள மோடி மீண்டும் பிரதமராக நாம் உழைப்போம். ஏராளமான நன்மைகளை மீனவ மக்களுக்காக நமது அரசு செயல்படுத்தி வருகிறது. தமிழக அரசு மீனவர்ககுக்கு நன்மை செய்யும் அரசாக உள்ளது. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா காலத்திலிருந்து தொடர்ந்து இன்றுவரை மீனவர்களுக்கு ஏராளமான திட்டங்களை இந்த அரசு செயல்படுத்தி வருகிறது. எனவே, அனைத்து வாக்குகளையும் பொன்.ராதாகிருஷ்ணனுக்கு கிடைக்கச் செய்ய வேண்டும். சில இடங்களில் மத ரீதியாக பிரிக்கப் பார்ப்பார்கள். அவர்களிடத்தில் சொல்லுங்கள் இந்தியாவிலேயே அமைதிப் பூங்காவான மாநிலமாக முதல் இடத்தில் இருப்பது தமிழ்நாடு. சட்டம் - ஒழுங்கு காப்பதில், மதம், மொழி, இனம், சாதிக்கு அப்பாற்பட்டு ஜெயலலிதாவின் அரசு இன்று செயல்பட்டுக்கொண்டிருக்கிறது.

 முதல்வர் எடப்பாடி பழனிசாமி  பேச்சு

​​எம்.ஜி.ஆர். காலத்திலும் சரி, ஜெயலலிதா காலத்திலும் சரி சிறுபான்மை மக்களை இந்த அரசு அரண்போல காத்துவருகிறது. நம்முடைய இயக்கத்துக்கு மதம், மொழி, சாதி, இனம் எதுவுமே கிடையாது. மக்கள் என்ற ஒரே சாதிதான் இங்கு உண்டு. தமிழகம் செழிக்க வேண்டும், அனைத்து மக்களுக்கும் அடிப்படை வசதிகள் கிடைக்க வேண்டும். கட்சித் தொண்டர்களும் நிர்வாகிகளும் தேனீக்களைபோல் சுறுசுறுப்பாக பணியாற்ற வேண்டும்" என்றார்.

இந்தக் கூட்டத்தின் இறுதியில் நன்றி தெரிவிக்கும் விதமாக பொன்.ராதாகிருஷ்ணன் பேசுகையில், ``தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி குமரி மாவட்டத்தில் மூன்று கூட்டங்களில் கலந்துகொண்டு பேசினார்.

பொன்.ராதாகிருஷ்ணன்

மூன்று கூட்டங்களிலுமே தொண்டர்கள் மற்றும் மக்களின் உற்சாகத்தை எப்போதும், எந்தக் கட்சியிலும் எங்கும் கண்டதில்லை. முதல்வரும் உற்சாகமாக உரையாற்றியுள்ளார். அதற்காக நான் அவருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். இந்தத் தேர்தலில் ஒவ்வொரு நாடாளுமன்றத்தின் வெற்றியும் சரித்திரம் படைத்ததாக அமையும். நான் சொல்வதை யாரும் தப்பாக நினைக்கக்கூடாது. கன்னியாகுமரி மாவட்டத்தில் பா.ஜ.க.வும், அ.தி.மு.க.வும் சேர்ந்து கூட்டணி அமைத்து இதுவரை வெற்றிபெற்றதில்லை என்ற கருத்து பொதுவாக உள்ளது. ஆனால், இந்தத் தேர்தலில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரு சரித்திரத்தை நாம் படைக்க வேண்டும். அதற்கு தூண்டுகோலாக, உத்வேகமும் உற்சாகமும் அளிக்கும் விதமாக முதல்வரின் பேச்சு இருந்தது. அதற்கு நான் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்" என்றார்.