`கூடவே இருந்து எட்டப்பர்கள் குழிபறிக்கிறார்கள்!’- துரைமுருகன் மகன் வேதனை | Duraimurugan's son is facing trouble

வெளியிடப்பட்ட நேரம்: 13:20 (04/04/2019)

கடைசி தொடர்பு:13:20 (04/04/2019)

`கூடவே இருந்து எட்டப்பர்கள் குழிபறிக்கிறார்கள்!’- துரைமுருகன் மகன் வேதனை

``நாம் எவ்வளவு பெரிய சக்தியாக இருந்தாலும் கூடவே இருந்து குழிபறிக்கும் எட்டப்பர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்’’ என்று துரைமுருகன் மகன் கதிர்ஆனந்த் பேசியிருக்கிறார்.

துரைமுருகன் மகன் கதிர்ஆனந்த்

வேலூர் நாடாளுமன்றத் தொகுதி தி.மு.க வேட்பாளரான துரைமுருகன் மகன் கதிர்ஆனந்த், குடியாத்தத்தில் தேர்தல் அலுவலகத்தைத் திறந்துவைத்தார். அப்போது பேசிய அவர், ``நாம் எல்லாம் ஒரே அணியாக நிற்க வேண்டும். நாம் எவ்வளவு பெரிய சக்தியாக இருந்தாலும் நம் கூடவே நம்பிக்கைத் துரோகிகளும் இருக்கிறார்கள். கூடவே இருந்து குழிபறிக்கும் கலையில் சிறந்த வல்லுநர்களும் உள்ளனர். இது, நம் ஒற்றுமைக்கு விடப்பட்ட சவால். இந்தச் சக்திகளை முறியடிக்கத் தேர்தலில் நாம் ஒற்றுமையாக இருந்து வெற்றிபெற வேண்டும். எத்தனை இன்னல்கள் வந்தாலும் கவலைப்பட வேண்டாம். 

புண்பட்ட நெஞ்சை சாந்தப்படுத்தும் விதமாகத்தான் தேர்தல் வாக்குறுதிகள் உள்ளன. திடமான, தீர்க்கமான இயக்கம், நமது இயக்கம். நம்முடன் எட்டப்பர்கள் இருந்தாலும் சரி, நமது ஒற்றுமையால் அவர்கள் காணாமல் போவார்கள். சுற்றமும், நட்புமாகச் சென்று மக்களிடம் ஓட்டுக் கேளுங்கள். கண்டிப்பாக மக்கள் நம்மைக் கைவிடமாட்டார்கள். நமக்குத் தெரிந்ததெல்லாம் உழைப்பு மட்டுமே. வெற்றி என்ற இலக்கை நோக்கிப் பயணிப்போம்’’ என்றார் வேதனையோடு. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அணைக்கட்டு தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ நந்தகுமார், கதிர்ஆனந்தின் பேச்சைக்கேட்டு முகம் இறுகிய நிலையிலேயே அமர்ந்திருந்தார்.

இரண்டு நாள்களுக்கு முன்பு தி.மு.க பொருளாளர் துரைமுருகன் வீடு மற்றும் அவரின் மகன் கதிர்ஆனந்த் நிர்வகிக்கும் பள்ளி, கல்லூரியில் ரெய்டு நடத்திய வருமானவரித் துறையினர், துரைமுருகனுக்கு நெருக்கமானவர்களிடமிருந்து மூட்டை, மூட்டையாகப் பணத்தை கைப்பற்றினர். பணம் பதுக்கப்பட்டிருப்பதை தி.மு.க-வினர் சிலரே போட்டுக்கொடுத்திருக்கலாம் என்று பேச்சு அடிப்பட்ட நிலையில், மாவட்டத்தில் முக்கிய பொறுப்பில் உள்ள தி.மு.க நிர்வாகிகள்  சிலர் மீது சந்தேகப்பட்டு ‘எட்டப்பர்கள் என்று கதிர்ஆனந்த் விமர்சித்தார்'' எனக் கூறுகிறார்கள் உடன்பிறப்புகள்.