`நான் ஏன் பொய் சொன்னேன் தெரியுமா?!'- தேர்தல் ஆணையத்துக்கு `ஷாக்' கொடுத்த சுயேச்சை வேட்பாளர்  | Independent candidate gave shock to election commission

வெளியிடப்பட்ட நேரம்: 13:49 (04/04/2019)

கடைசி தொடர்பு:13:49 (04/04/2019)

`நான் ஏன் பொய் சொன்னேன் தெரியுமா?!'- தேர்தல் ஆணையத்துக்கு `ஷாக்' கொடுத்த சுயேச்சை வேட்பாளர் 

சுயேட்சை வேட்பாளர் ஜெபமணி

``நான் தாக்கல் செய்த வேட்புமனுவில் ஒரு லட்சத்து 76,000 கோடி ரூபாய் கையில் இருப்பதாகவும் 4 லட்சம் கோடி
ரூபாய் கடன் இருப்பதாகவும் குறிப்பிட்டது ஏன் தெரியுமா என்று சுயேச்சை வேட்பாளர் மோகன்ராஜ் நம்மிடம் விளக்கமாக கூறினார். 
 
பெரம்பூர் சட்டமன்ற இடைத்தேர்தலில் ஜெபமணி ஜனதா கட்சி சார்பில் மோகன்ராஜ் ஜெபமணி பச்சை மிளகாய் சின்னத்தில் போட்டியிடுகிறார். இவர் தாக்கல் செய்த வேட்பு மனுவில் கையிருப்பாக ஒரு லட்சத்து 76,000 கோடி ரூபாய் இருப்பதாகவும் உலக வங்கியில் 4 லட்சம் கோடி ரூபாய் கடன் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். இது ஆச்சர்யத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. 

 சுயேச்சை வேட்பாளர் மோகன்ராஜ் ஜனநாயக திருவிழாவான தேர்தல் என்றாலே பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. தேர்தலில் போட்டியிடுபவர்கள் தங்களின் முழுவிவரங்களை வேட்பு மனுக்களில் குறிப்பிடப்படுவதுண்டு. அதன்மூலம் அவர்கள் குறித்த தகவல்களைத் தெரிந்துகொள்ளலாம். யார், யாருக்கு எவ்வளவு சொத்துகள் இருப்பதை அறியலாம். 

இந்த நிலையில், தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தலோடு காலியாக உள்ள 18 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது. இதில் பெரம்பூர் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலுக்கு ஜெபமணி ஜனதா கட்சி சார்பில் மோகன்ராஜ் ஜெபமணி சுயேச்சையாகப் போட்டியிடுகிறார். இவருக்கு பச்சை மிளகாய் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. 

இவர் தாக்கல் செய்த வேட்புமனுவில் கையிருப்பாக ஒரு லட்சத்து 76,000 கோடி ரூபாய் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். அதுபோல கடனாக 4 லட்சம் கோடி ரூபாய் உலக வங்கியில் இருப்பதாகவும் கூறியுள்ளார். இதுதான் அதிர்ச்சியையும் ஆச்சர்யத்தையும் ஏற்படுத்துகிறது. வேட்பாளர் மோகன்ராஜ் ஜெபமணி கொடுத்த தகவல் அடிப்படையில் பார்த்தால் அவர்தான் இந்தியாவிலேயே கோடீஸ்வர வேட்பாளரும் அதிக கடனாளி வேட்பாளராகவும் கருதப்படுகிறார். 

 சுயேட்சை வேட்பாளர் ஜெபமணி

இதுகுறித்து மோகன்ராஜ் ஜெபமணியிடம் பேசினோம். `வந்தே மாதரம்' என்றபடி பேசத் தொடங்கினார். ``எனக்கு 67 வயதாகிறது. நான், மயிலாப்பூர் கிழக்கு அபிராமபுரத்தில் குடியிருந்துவருகிறேன். என்னுடைய தந்தை தியாகி ஜெபமணி, சுதந்திரப் போராட்ட வீரர். மிசாவில் சிறைக்குச் சென்றவர். அவரின் பெயரில்தான் கட்சி இந்தியத் தேர்தல் ஆணையத்திடம் பதிவு செய்யப்பட்டது. அந்தக் கட்சி சார்பில்தான் நான் இந்தத் தேர்தலில் போட்டியிடுகிறேன்'' என்றவரிடம்  வேட்பு மனுவில் ஒரு லட்சம் ரூபாய் கையில் இருப்பதாகவும் 4 லட்சம் கோடி ரூபாய் கடன் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளீர்களே அது உண்மையா என்ற கேள்விக்கு, அவ்வளவு பணம் என்னிடம் இல்லை. பென்சனை சேர்த்து வங்கியில் 24,000 ரூபாய் உள்ளது. வேட்புமனுவில் வேண்டுமென்றேதான் தவறான தகவல்களைத் தெரிவித்தேன்" என்றார். 

எதற்காக தவறான தகவல்களைக் குறிப்பிட்டீர்கள்?

 ``தேர்தல் ஆணையம் எப்படிச் செயல்படுகிறது என்பதை தெரிவிக்கத்தான் தவறான தகவல்களைக் குறிப்பிட்டேன். ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி என்பது 2 ஜி வழக்கில் உள்ள தொகை. அதுதான் என் கையில் இருப்பதாகக் குறிப்பிட்டேன். உலக வங்கி எனக்கு 4 லட்சம் கோடி ரூபாய் கடனாக கொடுத்தது தமிழக அரசின் கடன்.`` 

உங்களைப்பற்றி சொல்லுங்கள்? 

``நான் காவல்துறையில் இன்ஸ்பெக்டராகப் பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றவன். என் அப்பா தியாகி ஜெபமணி, சுதந்திரப் போராட்ட வீரர். சாத்தான்குளம் தொகுதியில் (இப்போது இல்லை) எம்.எல்.ஏ.வாக இருந்தவர். நான், ராஜீவ்காந்தி கொலை வழக்கு விசாரணைக் குழுவில் இருந்தேன். சமூகத்தில் நடக்கும் அநீதிகளைத் தட்டிக் கேட்க அரசியலுக்கு வந்தேன். சாத்தான்குளம் இடைத்தேர்தலில் போட்டியிட்டேன். ஆனால், சொற்ப எண்ணிக்கையில்தான் ஓட்டுகள் கிடைத்தன. வைகோ மீதான கோபத்தில் அவரை எதிர்த்து விருதுநகரில் போட்டியிட்டேன். கொளத்தூர் தொகுதியில் ஸ்டாலினை எதிர்த்தும் மயிலாப்பூரிலும் போட்டியிட்டேன். கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்டபோதும் தவறான தகவல்களைத்தான் கூறியிருந்தேன். ஆனால், அதை யாரும் கண்டுகொள்ளவில்லை.`` 

 சுயேட்சை வேட்பாளர் ஜெபமணி

உங்களுக்கு கோடநாட்டில் 600 ஏக்கர் இடம், போயஸ்கார்டனில் சொகுசுப் பங்களா, கோபாலபுரத்தில் வீடுகள் இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளதே?

 ``அதுவும் பொய்தான். எனக்கு 3 கிரவுண்டில் இடம், 10 ஏக்கரில் ஓர் இடம் உள்ளது. பிளாட் ஒன்று இருந்தது. அதுவும் வங்கிக் கடனில் உள்ளது". 

தேர்தல் ஆணையத்தின் மீது ஏன் இவ்வளவு கோபம்?

 ``தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகளை மக்கள் அனைவரும் அறிந்துகொள்ள வேண்டும். சாத்தான்குளம் இடைத்தேர்தலில் எனக்குக் கிடைத்த வாக்குகள் 69. அதற்கான காரணம் தெரியவில்லை. இதனால்தான் இந்தமுறை பெரம்பூர் தொகுதியில் பச்சை மிளகாய் சின்னத்தில் போட்டியிடும் நான் எனக்கு வாக்களித்தவர்கள் என்னுடைய செல்போன் நம்பருக்கு மிஸ்டு கால், எஸ்.எம்.எஸ் அனுப்பும்படி பிரசாரத்தில் வலியுறுத்திவருகிறேன். எனக்குக் கிடைக்கும் ஓட்டுக்கும் எஸ்.எம்.எஸ். மிஸ்டு கால் விவரத்துக்கும் இடையே வேறுபாடு இருந்தால் நீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளேன்.``

 எல்லோருடைய கவனத்தையும் உங்களை நோக்கி திசைதிருப்பிவிட்டீர்களே? 

 ``ஏற்கெனவே நான் தவறான தகவல்களைக் கொடுத்துள்ளேன். ஆனால், அதையாரும் கண்டுகொள்ளவில்லை. இந்தமுறை செய்தி வெளியானதும் அனைவரின் கவனமும் என் பக்கம் திரும்பியுள்ளது. அவ்வளவுதான். நல்லது நடந்தால் சரி." 

பெரம்பூர் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரைத் தொடர்புகொண்டபோது அவர் பதிலளிக்க மறுத்துவிட்டார்.