பொறியியல் கலந்தாய்வை இனி அண்ணா பல்கலைக்கழகம் நடத்தாது! - அதிருப்தியில் கல்வியாளர்கள் | Here after Anna University will not conduct the engineering Counselling

வெளியிடப்பட்ட நேரம்: 14:20 (04/04/2019)

கடைசி தொடர்பு:14:20 (04/04/2019)

பொறியியல் கலந்தாய்வை இனி அண்ணா பல்கலைக்கழகம் நடத்தாது! - அதிருப்தியில் கல்வியாளர்கள்

தமிழகத்தில் இந்தாண்டு முதல் பொறியியல் கலந்தாய்வைத் தொழில்நுட்ப கல்வி இயக்ககம் நடத்தும் என்று தகவல் வெளியாகியுள்ளது. 

பொறியியல் கலந்தாய்வு


தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந்தாய்வை அண்ணா பல்கலைக்கழகம் நடத்தி வருகிறது. இதற்காக ஒவ்வொரு வருடமும் ஒரு குழு அமைக்கப்படும். அதில் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் தலைவராகவும், பேராசிரியர்கள் உறுப்பினர்களாகவும், உயர்க்கல்வித்துறைச் செயலர் உள்ளிட்ட பிற அதிகாரிகள் உறுப்பினர்களாக இடம்பெறுவர். இந்த வருடம் சில மாற்றங்களை உயர்கல்வித்துறை ஏற்பாடு செய்தது. இதனால் அதிருப்தியடைந்த அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா. தன்னிடம் எந்தத் தகவலும் தெரிவிக்காமல்  உயர்கல்வித்துறைச் செயலர் சிலர் உறுப்பினர்களை நியமித்திருப்பதாகக் கூறினார். இதையடுத்து, அந்தக் குழுவில் இருந்தும் விலகினார். இதன் காரணமாக கலந்தாய்வை அண்ணா பல்கலைக்கழகம் நடத்துமா என்ற கேள்வி கல்வியாளர்கள் மத்தியில் எழுந்தது.

ப்ளஸ் டூ பொதுத்தேர்வுகள் முடிந்து பொறியியல் கலந்தாய்வுக்கு மாணவர்கள் தயாராகும் இந்தச் சூழலில் இந்த விவகாரம் கல்வியாளர்கள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. கலந்தாய்வு நடைபெறுமா என்ற கேள்வியும் இயல்பாக எழுந்தது. இந்த நிலையில்தான் இனி வரும் ஆண்டுகளில் பொறியியல் கலந்தாய்வைத் தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் நடத்தும் என உயர்கல்வித்துறை அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. ஆனால், இதுதொடர்பாக இன்னும் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.

அண்ணா பல்கலைக்கழகம்

பொதுவாக பொறியியல் கலந்தாய்வுக்கு விண்ணப்பித்தப் பிறகு அதற்கான அழைப்புக் கடிதம் வரும். பின்னர், அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மட்டுமே கலந்தாய்வு நடைபெறும். மாணவர்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்து, நேரில் சென்று தங்களது சான்றிதழ்களைச் சமர்ப்பித்து நேர்முகத் தேர்வில் கலந்துகொண்டு, அதன்பிறகே கல்லூரியில் இடம் வழங்கப்படும். ஆனால், கடந்த வருடம்  கலந்தாய்வு ஆன்லைன் மூலம் நடைபெற்றது. இணைய வசதி இல்லாத தமிழகத்தின் பல இடங்களில், இதற்கான உதவி மையங்களும் அமைக்கப்பட்டன. மாணவர்கள், வீட்டில் இருந்தபடியே கலந்தாய்வில் பங்கேற்றனர்.

அதிகாரிகள் கூறுவதுபோல் தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் கலந்தாய்வை நடத்தினால், பழையபடி கலந்தாய்வு நடைபெறுமா அல்லது கடந்தாண்டு நடத்தப்பட்டதுபோல் ஆன்லைனில் நடத்தப்படுமா என்ற கேள்வியும் எழுகிறது. பொறியியல் கலந்தாய்வை கடந்த 20 வருடங்களாக அண்ணா பல்கலைக்கழகம் நடத்தி வருகிறது. இந்த முறை தொழில்நுட்ப கல்வி இயக்ககம் எவ்வித குளறுபடிகளும் இல்லாமல் நடத்துமா என்று கல்வியாளர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.