விண்ணைப் பிளந்த கோஷங்கள்.. வயநாட்டில் வேட்பு மனுத்தாக்கல் செய்தார் ராகுல்காந்தி | Rahul Gandhi files nomination in Wayanad constituency

வெளியிடப்பட்ட நேரம்: 14:39 (04/04/2019)

கடைசி தொடர்பு:14:39 (04/04/2019)

விண்ணைப் பிளந்த கோஷங்கள்.. வயநாட்டில் வேட்பு மனுத்தாக்கல் செய்தார் ராகுல்காந்தி

தொண்டர்களின் பலத்த ஆரவாரத்துடன், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி  வயநாடு தொகுதியில்  வேட்பு மனுத்தாக்கல் செய்தார்.

ராகுல் காந்தி

நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அமேதி மற்றும் வயநாடு ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறார். இதில், வயநாடு தொகுதியில் போட்டியிட ராகுல் காந்தி இன்று வேட்பு மனுத்தாக்கல் செய்வதாக அறிவிக்கப்பட்டது. இதற்காக, நேற்று இரவு ராகுல்காந்தி கோழிக்கோடு வந்தார். ராகுலுக்கு வரவேற்பு கொடுப்பதற்காக தமிழகம், கேரளா, கர்நாடகா போன்ற மாநிலங்களிலிருந்து ஏராளமான காங்கிரஸ் தொண்டர்கள் வயநாடு தலைநகர் கல்பேட்டா பகுதிக்கு வந்தனர். கிட்டத்தட்ட இரண்டு கி.மீ தூரத்துக்கு குவிந்திருந்த தொண்டர்கள், பலத்த கோஷங்கள் எழுப்பி ராகுல் காந்திக்கு பிரமாண்ட வரவேற்பு கொடுத்தனர்.

ராகுல் காந்தி

ராகுலின் வருகையை முன்னிட்டு, வயநாட்டில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கோழிக்கோட்டிலிருந்து தனி ஹெலிகாப்டரில் கிளம்பிய ராகுல் காந்தி, சரியாக காலை 11 மணி அளவில் கல்பேட்டா பகுதிக்கு வந்து சேர்ந்தார். அவரை கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி, தமிழக காங்கிரஸ் மூத்த தலைவர் தங்கபாலு உள்ளிட்டோர் வரவேற்றனர். பின்பு, அங்கிருந்து திறந்தவெளி வேனில் ராகுல்காந்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சென்று வேட்பு மனுத்தாக்கல் செய்தார். அவருடன் பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் இருந்தனர். இதையடுத்து, மீண்டும் திறந்தவெளி வேனில் இரண்டு கி.மீ தூரத்துக்கு வந்து பொதுமக்களைப் பார்த்து அவர் கையசைத்தார். ``ராகுல் காந்தி இரண்டு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்" என்று கேரள காங்கிரஸ் பிரமுகர்கள் தெரிவித்துள்ளனர்.

ராகுல் காந்தி

இதனிடையே, கேரளாவில் இன்றுடன் வேட்பு மனுத்தாக்கல் நிறைவடைகிறது. நாளை வேட்பு மனு மீதான பரிசீலனை நடைபெறுகிறது.