`நிரூபியுங்கள், உங்களுக்குக் கட்டுப்படுறேன்; அப்படியில்லையென்றால்..!'-ஸ்டாலினுக்கு அன்புமணி சவால் | Anbumani attacked stalin and DMK candidates

வெளியிடப்பட்ட நேரம்: 15:20 (04/04/2019)

கடைசி தொடர்பு:15:20 (04/04/2019)

`நிரூபியுங்கள், உங்களுக்குக் கட்டுப்படுறேன்; அப்படியில்லையென்றால்..!'-ஸ்டாலினுக்கு அன்புமணி சவால்

``இலங்கையில், தமிழர்களைக் கொன்றுகுவித்த சிங்களர்களை வாழவைக்க ஜெகத்ரட்சகன் ரூ.26,000 கோடிக்கு முதலீடு செய்திருக்கிறார்'' என பா.ம.க இளைஞரணித் தலைவர் அன்புமணி கடுமையாகச் சாடியிருக்கிறார்.

ஏ.கே.மூர்த்தியை ஆதரித்து, காட்பாடியில் பிரசாரம் செய்த அன்புமணி

அரக்கோணம் நாடாளுமன்றத் தொகுதி பா.ம.க வேட்பாளர் ஏ.கே.மூர்த்தியை ஆதரித்து, காட்பாடியில் அக்கட்சியின் இளைஞரணித் தலைவர் அன்புமணி பிரசாரம் செய்தார். அப்போது பேசிய அவர், ``எதிரணியில் உள்ள தி.மு.க வேட்பாளர் ஜெகத்ரட்சகன், ஏற்கெனவே இந்தத் தொகுதியில் 10 ஆண்டுகளாக நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர். ஆனால், தொகுதிப் பக்கம் 2 முறைதான் வந்திருக்கிறார். அதுவும் ஓட்டு கேட்க மட்டுமே. வெற்றியைத் தந்த மக்களுக்கு நன்றிகூட தெரிவிக்காதவர். தமிழகத்தில் உள்ள பெரும் பணக்காரர்கள் பட்டியலில் ஒருவர். உலகத்தில் உள்ள அனைத்து நாடுகளிலும் முதலீடு செய்து தொழில் செய்கிறார். ஆனால், எங்கள் வேட்பாளர் ஏ.கே.மூர்த்தி சாதாரண மக்கள் தொண்டர். விவசாயக் குடும்பத்திலிருந்து வந்தவர். அடித்தளத்திலிருந்து படிப்படியாக உயர்ந்தவர். ஆனால், எதிரணியினர் பணத்தை வைத்து வெற்றி பெற்றுவிடலாம் என்று நினைக்கிறார்கள். மக்கள் ஏமாளிகள் கிடையாது. விழித்துக்கொண்டுள்ளார்கள்.

தி.மு.க தலைவர் ஸ்டாலின் வாய் திறந்தாலே பொய் மட்டுமே பேசி வருகிறார். தோல்வி பயத்தில் தனிநபர்களைப் பற்றி தரக்குறைவாகப் பேசுகிறார். அவரின் மகன் கொடுக்கு (உதயநிதி ஸ்டாலின்) என்ன பேசுவதென்றே தெரியாமல் உளறுகிறார். நாங்கள், வன்னியர் சொத்துகளை அபகரித்ததாக ஸ்டாலின் சொல்கிறார். என் மீதோ, என் தந்தை அல்லது தாய் மீதோ ஒரு சென்ட் நிலத்தை அபகரித்தோம் என்று நிரூபித்தால், நான் உங்கள் சொல்லுக்குக் கட்டுப்படுகிறேன். அப்படி நிரூபிக்கத் தவறினால் தி.மு.க தலைவர் பொறுப்பிலிருந்து ஸ்டாலின் விலகத் தயாரா. குடும்ப அரசியல் செய்யும் இவர்களைப் பார்த்து தி.மு.க தொண்டர்கள் விரக்தியில் இருக்கிறார்கள். உழைத்தவர்களுக்கு அந்தக் கட்சியில் மரியாதை இல்லை. தி.மு.க-வுக்குப் பணம் மட்டும்தான் தெரியும். எங்களுக்கு உழைக்கத் தெரியும். எனவே, மக்களே சிந்தித்துச் செயல்படுங்கள்'' என்று பேசினார்.

இதனிடையே, ராணிப்பேட்டையில் பேசிய அன்புமணி, ‘‘இலங்கையில், தமிழர்களைக் கொன்றுகுவித்த சிங்களர்களை வாழவைக்க ரூ.26,000 கோடிக்கு முதலீடு செய்திருக்கிறார் ஜெகத்ரட்சகன். தமிழகத்தில் முதலீடு செய்யக்கூடாதா? தி.மு.க கூட்டணி சாராய வியாபாரிகள் கூட்டணி. நாங்கள் விவசாயிகள் கூட்டணி. தி.மு.க-வில் அடுத்த தலைவர் உதயநிதி ஸ்டாலின் என்று முடிவாகிவிட்டது. தி.மு.க என்றால் ஸ்டாலின், உதயநிதி, தயாநிதி, கனிமொழி, அழகிரி, சபரீசன்தானா?’’ என்றார் காட்டமாக.