"கம்யூனிஸ்ட்டுக்கு எதிராக ஒரு வார்த்தைகூட பேச மாட்டேன்!"- வயநாட்டில் ராகுல் காந்தி பேட்டி | I will not speak against Communist in my Campaign, Says Rahul Gandhi

வெளியிடப்பட்ட நேரம்: 16:20 (04/04/2019)

கடைசி தொடர்பு:16:20 (04/04/2019)

"கம்யூனிஸ்ட்டுக்கு எதிராக ஒரு வார்த்தைகூட பேச மாட்டேன்!"- வயநாட்டில் ராகுல் காந்தி பேட்டி

``எனது பிரசாரத்தில், கம்யூனிஸ்ட் தோழர்களுக்கு எதிராக ஒரு வார்த்தைகூட பேச மாட்டேன்'' என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.

பிரியங்கா காந்தியுடன் ராகுல் காந்தி

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, கேரள மாநிலம் வயநாடு நாடாளுமன்றத் தொகுதியில் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். ராகுல் காந்தி, ஏற்கெனவே அமேதி தொகுதியில் போட்டியிடுவதாக அறிவித்திருந்த நிலையில், அவர் வயநாடு தொகுதியில் போட்டியிடுகிறார். குறிப்பாக, ராகுல் காந்தி வயநாட்டில் போட்டியிடுவது பா.ஜ.க-வுக்கு எதிராகப் போட்டி போட்டுக்கொண்டிருக்கும் எங்களின் வெற்றி வாய்ப்பைக் குறைத்துவிடும் என்று இடதுசாரிகள் கூறிவருகின்றனர்.

இந்நிலையில், வயநாடு மாவட்ட ஆட்சியர் அஜய்குமாரிடம் இன்று வேட்புமனு தாக்கல் செய்த ராகுல் காந்தி, ஓப்பன் வேனில் இரண்டு கி.மீ தூரம் பயணம் செய்து, மக்களைச் சந்தித்தார். இதையடுத்து, வயநாட்டில் இருந்து புறப்படுவதற்கு முன், ராகுல் காந்தி செய்தியாளர்களைச் சந்தித்தார்.

காங்கிரஸ் தொண்டர்கள்

அப்போது அவர், “நான் வயநாட்டில் போட்டியிடுவது விமர்சனத்துக்குள்ளாகியுள்ளது. மத்திய மோடி அரசும், ஆர்.எஸ்.எஸ் இயக்கமும் தென் இந்தியாவின் கலாசாரத்தின்மீது தாக்குதல் நடத்திவருகின்றது. வடக்கு, தெற்கு, கிழக்கு எல்லாமே ஒன்றுதான் என்ற அழுத்தமான செய்தியை அவர்களுக்குச் சொல்வதற்காகத்தான் நான் இங்குப் போட்டியிடுகிறேன். நான், இங்கு போட்டியிடுவதால் கம்யூனிஸ்ட் தோழர்கள் என்னைக் கடுமையாக விமர்சனம் செய்வார்கள் என்பதை நான் நன்கு அறிவேன். ஆனால், என்னுடைய பிரசாரத்தில் கம்யூனிஸ்ட் தோழர்களுக்கு எதிராக நான் ஒரு வார்த்தைகூட பேசமாட்டேன். அவர்களின் விமர்சனங்களை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டு, ஒற்றுமையை வலியுறுத்துவேன்” என்றார்.