`துன்பம் நீங்கும், பிரச்னைகள் தீரும், உங்கள் வாழ்வைத் தீர்மானிங்கள்!'- விருதுநகரில் திருச்சி சிவா பிரசாரம் | Bjp will affect democracy - trichy siva warning

வெளியிடப்பட்ட நேரம்: 17:15 (04/04/2019)

கடைசி தொடர்பு:17:15 (04/04/2019)

`துன்பம் நீங்கும், பிரச்னைகள் தீரும், உங்கள் வாழ்வைத் தீர்மானிங்கள்!'- விருதுநகரில் திருச்சி சிவா பிரசாரம்

``பா.ஜ.க மீண்டும் ஆட்சிக்கு வந்தால், நாடாளுமன்ற ஜனநாயக முறை அதிபர் ஆட்சி வரலாம்'' என தி.மு.க கொள்கை பரப்புச் செயலர் திருச்சி சிவா தெரிவித்தார்.

விருதுநகர் மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூரை ஆதரித்து, தி.மு.க கொள்கை பரப்புச் செயலர் திருச்சி சிவா விருதுநகரில் பிரசாரம்செய்தார். அப்போது, ``வாக்குச்சாவடியில் நீங்கள் செலவிடும் ஒரு நிமிடம்தான் நாட்டின் 5 ஆண்டு கால வாழ்க்கை மட்டுமின்றி பிள்ளைகளின் எதிர்காலமும் அடங்கியுள்ளது. யாராக இருந்தாலும், தேர்தல் நேரத்தில் ஏழை மக்களின் வீட்டு வாசலுக்கு வந்தாக வேண்டும் என்பதுதான் ஜனநாயகம். எத்தனை பெரிய தலைவனாக இருந்தாலும் மக்களிடம் கைகூப்பி வாக்கு கேட்க வேண்டும் என்ற ஜனநாயகத்துக்கு மிகப்பெரும் சோதனை வந்துள்ளது. மீண்டும் பா.ஜ.க ஆட்சிக்கு வந்தால், நாடாளுமன்ற ஜனநாயக முறை மாறி, அதிபர் ஆட்சி வரலாம் என வடமாநில ஊடகவியலாளர்கள் கணித்துள்ளனர். ஒரு மதம், ஒரே கலாசாரம், ஒரே மொழி, ஒற்றை ஆட்சிமுறை என்ற நிலைக்குக் கொண்டுசெல்வது என்பது சர்வாதிகாரிகள் மனப்பான்மை. இது, இந்திய வரலாற்றுக்கு உகந்தது அல்ல.

சிவா

விவசாயக் கடனுக்கான வட்டியைத் தள்ளுபடி செய்யக்கோரி, டெல்லியில் போராட்டம் நடத்திய விவசாயிகளை மதிக்காத பிரதமர், இன்று ஆண்டுக்கு 6 ஆயிரம் தருவதாகக் கூறுவது ஏமாற்று வேலை. இன்னும் 25 ஆண்டுகளுக்குப் பின், நம் சந்ததியினருக்கு குடிக்க தண்ணீர் இருக்காது. சோறு கிடைப்பது சந்தேகம்தான். ஆட்சிக்கு வருபவர்களுக்கு தொலைநோக்குப் பார்வை வேண்டும். ஆனால், தற்போது தமிழ்நாட்டை ஆள்பவர்களுக்கு தொலைநோக்குப் பார்வை இல்லை.

சிவா

80 ஆண்டுகளுக்கு முன் உப்புத்தண்ணீரில் விவசாயம் செய்ய முடியாது என்றார்கள். இன்று கடல்நீர் குடிநீராக்கப்பட்டுள்ளது. 20 ஆண்டுகளுக்கு முன் செல்போன் வரும் என கற்பனைசெய்திருக்க மாட்டோம். ஆனால் இன்று, இங்கே இருந்து சிங்கப்பூருக்கு பேச முடியும். எங்களிடம் ஆட்சி அதிகாரம் இருந்தால், கடல்நீரை குடிநீராக மாற்றி அனைத்து ஊர்களுக்கு ஆழ்துளைக் குழாய் மூலம் அனைத்து ஊர்களுக்கும் தண்ணீர் வழங்குவோம். ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை தருவேன். வெளிநாட்டில் உள்ள கறுப்புப் பணம் முழுவதையும் கொண்டுவருவேன் எனக் கூறியதால்தான், கடந்த தேர்தலில் மோடி வெற்றிபெற்றார். ஆனால், எவ்வளவு கறுப்புப்பணம் மீட்கப்பட்டுள்ளது? இந்தியாவில் 6 கோடி பேருக்கு வேலை இல்லை. பா.ஜ.க ஆட்சியில் 180 பல்கலைக்கழகங்கள் அதிகரித்துள்ளன. அதில் 140 தனியார். இரண்டரை லட்சம் பேராசிரியர்கள் வேலை இழந்துள்ளனர். இதுதான் வளர்ச்சியா?

சிவா

கல்விக்கடன் செலுத்த முடியாத மாணவர்கள் அவமானப்படுத்தப்படுகின்றனர். ஆனால், பல்லாயிரம் கோடி பாக்கி வைத்துள்ள விஜய் மல்லையாவையோ, பல்லாயிரக்கணக்கான கோடி கடன் வாங்கிய நிரவ் மோடியையோ தொட முடியவில்லை. மாணிக்கம் தாகூர், ராகுல் காந்தி, ஸ்டாலின் வெற்றிபெற வேண்டும் என்பதற்காக அல்ல. இவர்கள் பொறுப்புக்கு வந்தால், துன்பம் நீங்கும். நல்லவர்கள் ஆட்சிக்கு வந்தால், உங்கள் பிரச்னைகள் தீரும். தவறானவர்கள் ஆட்சிக்கு வந்தால் பிரச்னைகள்தான் வரும். அதற்காக, வரும் 18-ம் தேதி நல்லவர்கள் கையில் நாட்டை ஒப்படைக்க வாக்களியுங்கள். வாக்குச்சீட்டுகள்தான் உங்கள் வாழ்வைத் தீர்மானிக்கும்'' என்று தெரிவித்தார்.