`ஓ.பி.எஸ்-ஸுக்கு ஆரத்தி எடுங்க; குடம், தட்டை வீட்டுக்கு கொண்டுபோங்க!'- சிக்கிய அ.தி.மு.க-வினர் | The jug and plate given free to people in OPS campaign

வெளியிடப்பட்ட நேரம்: 17:21 (04/04/2019)

கடைசி தொடர்பு:17:21 (04/04/2019)

`ஓ.பி.எஸ்-ஸுக்கு ஆரத்தி எடுங்க; குடம், தட்டை வீட்டுக்கு கொண்டுபோங்க!'- சிக்கிய அ.தி.மு.க-வினர்

கூடலூர் பிரசாரத்தில், துணை முதல்வரை வரவேற்க ஆரத்தித் தட்டுகள், குடங்களை மக்களுக்கு  வழங்கியதால், அ.தி.மு.க மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதிமுகவினருக்கு தட்டு

நீலகிரி தொகுதி அ.தி.மு.க வேட்பாளர் தியாகராஜனை ஆதரித்து, துணை முதல்வரும் அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் இன்று நீலகிரி மாவட்டம் கூடலூர் மற்றும் பந்தலூரில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார். கூடலூர் பேருந்து நிலையம் அருகே, பிரசாரத்துக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. துணை முதல்வர் என்பதால், சிறப்பான வரவேற்பு அளிக்க மாவட்ட நிர்வாகிகள் ஏற்பாடுசெய்திருந்தனர். அதேபோல, கூட்டம் சேர்க்க முடியாது என்பதால், பிரசார பொதுக்கூட்டம் நடத்த ஏற்பாடுகள் செய்யவில்லை. சாலையின் இருபுறமும் தொண்டர்களை நிற்கவைத்தனர். துணை முதல்வரை ஆரத்தி எடுத்தும் பூரண கும்ப மரியாதையுடனும் வரவேற்க முடிவுசெய்த கட்சி நிர்வாகிகள், டெம்போ வாகனத்தில் ஸ்டீல் தட்டுகள் மற்றும் குடங்களைக் கொண்டுவந்து, அருகில் உள்ள சாலையோரம் வாகனத்தை நிறுத்தி, கூட்டத்துக்கு வந்திருந்த பெண்களை அழைத்து ஸ்டீல் குடம் மற்றும் தட்டுகளை வழங்கினர். இவற்றை வைத்து ஆரத்தி எடுத்தப்பின், நீங்கள் உங்கள் வீட்டுக்கு எடுத்துச்செல்லலாம் என்றனர்.

இதைப் பார்த்த ஏராளமான பெண்கள் முண்டியடித்துக்கொண்டு இலவசமாக வழங்கிய தட்டு, குடம் உள்ளிட்ட  பொருள்களை வாங்கிச் சென்றனர். அ.தி.மு.க-வினர் பொருள்களை வழங்கி முடிக்கும் முன்னரே இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது. தி.மு.க-வினர் தேர்தல் அதிகாரிகளிடம் புகார் அளித்தனர். இதனைத் தொடர்ந்து, விரைந்துவந்த  மாவட்ட தேர்தல் பறக்கும்படையினர், ஆரத்திக்குப் பயன்படுத்திய 30 ஸ்டீல் தட்டுகள், 26 குடங்கள் என மொத்தம் 56 பொருள்கள் மற்றும் விநியோகிக்கப் பயன்படுத்திய வாகனத்தையும் பறிமுதல்செய்து, தேர்தல் விதிமுறையை மீறியதாக அ.தி.மு.க மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும், எவ்வளவு பொருள்கள் வழங்கப்பட்டுள்ளன என விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.