தூத்துக்குடியில், இறந்த நிலையில் கரை ஒதுங்கிய 6 மீட்டர் நீள திமிங்கில சுறா! | the 6 meter long died whale shark, located in thoothukudi sea

வெளியிடப்பட்ட நேரம்: 21:30 (04/04/2019)

கடைசி தொடர்பு:21:30 (04/04/2019)

தூத்துக்குடியில், இறந்த நிலையில் கரை ஒதுங்கிய 6 மீட்டர் நீள திமிங்கில சுறா!

தூத்துக்குடியில், 5.47 மீட்டர் நீளமும் 1.5 டன் எடையும் உடைய திமிங்கில சுறா ஒன்று, இறந்த நிலையில் கரை ஒதுங்கியது.

ராமேஸ்வரம் - கன்னியாகுமரிக்கு இடையிலான நீர், நிலப்பரப்பு மற்றும் பவளப் பாறைகளை உள்ளடக்கிய 10 ஆயிரத்து 500 சதுர.கி.மீ., பரப்பளவைக் கொண்டுள்ளது மன்னார்வளைகுடா உயிர்க்கோள காப்பகப் பகுதி.  இப்பகுதியில் 21  தீவுகள் உள்ளன. கடற்பகுதில் 3,500-க்கும் மேற்பட்ட கடல்வாழ் உயிரினங்கள் காணப்படுகின்றன. இவற்றில், பல வகையான திமிங்கிலங்களும் உயிர் வாழ்கின்றன. இந்நிலையில், தூத்துக்குடி இனிகோ நகர் கடற்பகுதியில், இறந்த நிலையில் பெரிய திமிங்கிலச் சுறா ஒன்று கரை ஒதுங்கியது. 

திமிங்கில சுறா

இதுகுறித்து அப்பகுதி மீனவர்கள், மன்னார் வளைகுடா உயிர்க்கோள வனச்சரக போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர். அதன் அடிப்படையில், போலீஸார்  கடற்கரைக்கு வந்து பார்த்ததில், சுமார் 6 மீட்டர் நீளமுள்ள திமிங்கிலச் சுறா, உடல் முழுவதும் காயங்களுடன் இறந்த நிலையில் கரை ஒதுங்கியது தெரியவந்தது. இதுகுறித்து கால்நடை மருத்துவர்கள் கூறுகையில், “இறந்த நிலையில் கரை ஒதுங்கிய திமிங்கிலச் சுறா, மீன் இன வகைகளில் மிகப் பெரியது. மீனவர்கள் இதை, 'அம்மனி உளுவை' எனச் சொல்கிறார்கள். பொதுவாக, இவ்வகை மீன்கள் மன்னார் வளைகுடாவின் ஆழ் கடலில் வசிக்கக்கூடியவை.

திமிங்கில சுறா

இவை, அதிகபட்சம் 30 மீட்டர் நீளமும், 30 டன் எடை வரையிலும் வளரக்கூடியது. 80 முதல் 90 ஆண்டுகள் வரை வாழக்கூடியவை. இறந்த நிலையில் கரை ஒதுங்கியுள்ளது பெண் திமிங்கிலச் சுறாவாகும். இது, 5.47 மீட்டர் நீளமும் (17.5 அடி), 1.5 டன் எடையும் கொண்டது. கரை ஒதுங்கிய இம்மீனுக்கு 5 வயது இருக்கலாம். மருத்துவக் குழுவினரின் மருத்துவப் பரிசோதனைத் தகவலின்படி, ஆழ்கடல் மீன்பிடித் தொழிலுக்குச் செல்லும் விசைப்படகு அல்லது கப்பல்களில் காயம் பட்டு உயிரிழந்திருக்கலாம்” என்றனர். உடற்கூராய்விற்குப் பிறகு, கடற்கரையிலேயே புதைக்கப்பட்டது.

திமிங்கில சுறா

மீன்வளக் கல்லூரியில் பயிலும் ஆராய்ச்சி மாணவர்கள், மீனவர்கள் மற்றும் அப்பகுதியினர், இறந்து கரை ஒதுங்கிய திமிங்கிலச் சுறாவைப் பார்த்துச்சென்றனர். சமீப காலமாக, சிறிய வகைத் திமிங்கிலங்கள்தான் இறந்து கரை ஒதுங்கிவந்தன. தற்போது, பெரிய அளவிலான திமிங்கிலம் வகை மீன் அடிபட்டுக் கரை ஒதுங்கியிருப்பது  மீனவர்கள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களிடையே  வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க