`தம்பிதுரையின் செயலற்ற போக்குக்கு இதுவே உதாரணம்' - டி.டி.வி. தினகரன் குற்றச்சாட்டு! | ttv dinakaran slams thambidurai in karur

வெளியிடப்பட்ட நேரம்: 23:40 (04/04/2019)

கடைசி தொடர்பு:23:40 (04/04/2019)

`தம்பிதுரையின் செயலற்ற போக்குக்கு இதுவே உதாரணம்' - டி.டி.வி. தினகரன் குற்றச்சாட்டு!

"தேசிய கட்சிகளால் தனிப் பெரும்பான்மையாக ஆட்சி அமைக்க முடியாது. தமிழர்களின் நலனைக் காக்க தமிழகக் கட்சிகளால்தான் முடியும்" என்று அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் தெரிவித்தார்.

டி டி வி தினகரன் பிரசாரம்

தமிழகத்தில், வரும் 18-ம் தேதி மக்களவைத் தேர்தல் நடைபெற இருக்கிறது. அதற்காக, களத்தில் இருக்கும் அனைத்துக் கட்சி வேட்பாளர்களும் அனல்பறக்க தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுவருகிறார்கள். அந்த வகையில், கரூர் நாடாளுமன்றத் தொகுதி அ.ம.மு.க வேட்பாளர் பி.எஸ்.என்.தங்கவேலுக்கு வாக்குகள் சேகரிக்க, கரூர் வருகை தந்தார் டி.டி.வி. தினகரன். நேற்று இரவே தங்கவேலு-க்காகப் பேசிவிட்டு, அடுத்த மாவட்டம் செல்வதுதான் அவரது திட்டம். ஆனால், அவர் நேற்று இரவு கரூர் வர இரவு 10 மணியாகிவிட்டது. பிரசார நேரம் முடிவடைந்துவிட்டதால், தங்கியிருந்து, மறுநாள் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொள்ள முடிவெடுத்தார். அதன்படி, தனியார் விடுதி ஒன்றில் தங்கியவர், இன்று மாலை கரூர் தாலுகா அலுவலகம் எதிரில் நடைபெற்ற பிரசாரத்தில் கலந்துகொண்டார். 

தினகரன் பிரசாரம்..

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் கரூர் நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் தங்கவேலுவை ஆதரித்து டி.டி.வி. தினகரன், திறந்தவெளி வாகனத்தில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது, "ஆர்.கே.நகரில் டெபாசிட் இழந்த கட்சியான தி.மு.க, திருவாரூர் தொகுதியில் நடைபெற இருந்த இடைத்தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தை எதிர்த்துப் போட்டியிட பயந்த காலம் உண்டு. ஒன்றரை லட்சம் தமிழர்களை இலங்கையில் கொடுங்கோல் இலங்கை அரசு கொன்றுகுவித்தபோது, அதை வேடிக்கை பார்த்தவர்கள்தான் காங்கிரஸும், தி.மு.க-வும். கரூரில், கடந்த பத்தாண்டுகள் எம்.பி-யாக இருந்த தம்பிதுரை, தனது நாடாளுமன்ற உறுப்பினர் நிதியில் தத்தெடுத்த கடவூர் ஒன்றியம், பாலவிடுதி கிராமத்தில் எந்த அடிப்படை வசதிகளையும் அவர் செய்யவில்லை.

தினகரன் பிரசாரம்...

அங்கே அவர் கட்டிய நாடக மேடையில், தபால் அலுவலகம் செயல்பட்டுவருகிறது. குடிநீருக்காகத் தினந்தோறும் அங்கு மக்கள் தவிக்கிறார்கள். தம்பிதுரையின் செயலற்ற போக்குக்கு இதுவே உதாரணம். அதனால், மக்கள் யாரும் அவருக்கு ஓட்டுப்போட வேண்டாம். கரூரில் வளர்ச்சியும், திட்டங்களும் வரணும்ன்னா, பரிசுப்பெட்டிக்கு வாக்களியுங்கள். நாங்கள் வெற்றிபெற்றால், கரூரில் உள்ள சாயப்பட்டறை தொழில் முறைப்படுத்தப்பட்டு, ஜவுளித் தொழில் மீண்டும் புத்துணர்வுபெறும். அதே சமயம், கழிவு நீர் நிலத்தில் கலக்காமல் இருக்க தனித் திட்டம் உருவாக்கப்பட்டு, கரூரை மீண்டும் தொழில் வளர்ச்சி அடைந்த மாவட்டமாக உருவாக்குவோம்" என்றார்.