திருச்சியில் கி.வீரமணி கூட்டத்தில் செருப்பு வீச்சு, தாக்குதல் - இந்து முன்னணி நிர்வாகிகள் கைது! | Hindu munnani movement leaders attacked on dmk election campaign meeting at trichy

வெளியிடப்பட்ட நேரம்: 10:45 (05/04/2019)

கடைசி தொடர்பு:08:52 (06/04/2019)

திருச்சியில் கி.வீரமணி கூட்டத்தில் செருப்பு வீச்சு, தாக்குதல் - இந்து முன்னணி நிர்வாகிகள் கைது!

தி.க.தலைவர் வீரமணி கலந்துகொண்ட திருச்சி தி.மு.க தேர்தல் பிரசாரப் பொதுக்கூட்டத்தில் இந்து முன்னணி நிர்வாகிகள் செருப்பு மற்றும் கற்களை வீசித் தாக்குதல் நடத்தியதுடன், வீரமணியின் கார் மீது தாக்குதல் நடத்திய சம்பவத்தால் திருச்சியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

திருச்சி தி.க பொதுக்கூட்டம் - வீரமணி

நாடாளுமன்றத் தேர்தலையொட்டி தமிழகத்தில் தேர்தல் பிரசாரம் தீவிரமடைந்து வருகிறது. அந்த வகையில் திருச்சி மக்களவைத் தொகுதியில் தி.மு.க கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளராகப் போட்டியிடும் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசரை ஆதரித்து கூட்டணிக் கட்சிகள் சார்பில் பிரசாரப் பொதுக்கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில், திருச்சி காந்தி மார்க்கெட்டையடுத்த தாராநல்லூர் கீரைக்கொல்லை பஜார் பகுதியில் நேற்று இரவு 8 மணியளவில் நடைபெற்ற பிரசாரப் பொதுக் கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் வீரமணி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு காங்கிரஸ் வேட்பாளர் திருநாவுக்கரசரை ஆதரித்துப் பேசினார். இந்நிகழ்ச்சிக்காக காங்கிரஸ், தி.மு.க உள்ளிட்ட கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் நிகழ்ச்சி நடக்கும் இடத்தில் அமர்ந்திருக்க, இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சியின் இரண்டாம் கட்டத் தலைவர்கள் பிரசார மேடையில் பேசிக்கொண்டிருந்தனர்.

தாக்குதல்அப்போது கூட்டத்தில் ஊடுருவிய இந்து முன்னணியைச் சேர்ந்த சிலர், வீரமணி மற்றும் அவரது கட்சிக்காரர்கள் இந்துக்களையும், இந்துக் கடவுள்களையும் அவமானப்படுத்தி பேசியதாகக் கூறி திடீரென மேடையை நோக்கிச் செருப்பு மற்றும் கற்களை வீசித் தாக்குதல் நடத்தினர். அதை எதிர்பார்க்காத தி.க நிர்வாகிகள் நாற்காலிகளை வீசினர். கூட்டத்தில் மர்மநபர்கள் டியூப் லைட்டுகளை உடைத்தனர். மேலும், தக்குதலில் தி.க. கட்சிக்காரர்களை இந்து முன்னணி நிர்வாகிகள், வளைத்துத் தாக்குதல் நடத்தினர்.  இந்தச் சம்பவத்தில் தி.க கட்சிக்காரர்கள் இருவரின் மண்டை உடைந்தது. ரத்தம் சொட்டிய நிலையில் அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்திய போலீஸார், தாக்குதல் நடத்திய இந்து முன்னணி மாநகர நிர்வாகி மணிகண்டன், போத்தராஜ் உள்ளிட்ட 12 பேரை கைது செய்து, திருச்சி கோட்டை காவல்நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.

பொதுக்கூட்ட மேடைக்கு வந்த கி.வீரமணி பொதுக்கூட்டத்தில் பேசிவிட்டு, முன்னாள் மேயர் அன்பழகன் சகிதமாக தனித்தனி கார்களில் கிளம்பியபோது மேலும் சில இந்து முன்னணி அமைப்பு நிர்வாகிகள் வீரமணியின் கார் மீது தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது. இந்தத் தாக்குதல் சம்பவத்தில் தி.கவைச் சேர்ந்த குணசேகரன் உள்ளிட்ட இருவருக்குக் காயம் ஏற்பட்டது. அதையடுத்து திராவிடர் கழகத்தினர் இதுகுறித்து காந்தி மார்க்கெட் காவல்நிலையத்தில் புகார் செய்ததுடன், கி.வீரமணியைப் பாதுகாப்பாகப் பெரியார் மாளிகைக்கு அழைத்துச் சென்றனர்.

அதையடுத்து இந்தத் தாக்குதலுக்குக் காரணமானவர்களைக் கைது செய்த காந்தி மார்க்கெட் போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர். தி.மு.க தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் இந்து முன்னணியினர் தாக்குதல் நடத்திய சம்பவம் பரவவே அங்கு தி.மு.க மற்றும் கூட்டணிக் கட்சியினர் திரண்டு வந்தனர். மேலும், தாக்குதல் நடத்திய இந்து முன்னணி நிர்வாகிகளுக்கு ஆதரவாக பி.ஜே.பி முக்கிய நிர்வாகிகளான இல.கண்ணன், ஆக்ஸ்போர்டு சுப்பிரமணியன் உள்ளிட்டோர் தலைமையில் பி.ஜே.பி நிர்வாகிகள், கூட்டத்தில் தாக்குதல் நடத்திய இந்து முன்னணி நிர்வாகிகளைக் கைது செய்ததைப் போன்று, பதில் தாக்குதல் நடத்திய திராவிடர் கழகத்தைச் சேர்ந்தவர்கள் மீதும் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டு திருச்சி கோட்டைக் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர்.

இரவில் காவல் நிலையத்தை அரசியல் கட்சியினர் முற்றுகையிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. அதையடுத்து தகவலறிந்த திருச்சி மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ், துணை ஆணையர் நிஷா உள்ளிட்டோர் தலைமையில் போலீஸார் விரைந்து வந்து பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டனர். இறுதியாகக் காவல்துறையினர், இந்து முன்னணியினரை சட்டப்படி நீதிமன்றத்தில் பிணை எடுத்துக்கொள்ளும்படிக் கூறவே, திராவிடர் கழகத்தினர் மீது வழக்கு பதிவு செய்யவில்லை எனில் நாளை காலை குடும்பத்தோடு காவல்நிலையத்தை முற்றுகையிடுவோம் என போலீஸாரை எச்சரித்துவிட்டு பி.ஜே.பி நிர்வாகிகள் கிளம்பினர்.

இந்தச் சம்பவங்களால் திருச்சியில் பரபரப்பு நிலவுகிறது.