``அவள் விளையாட்டாக பேசுகிறாள்!” - பேத்தியின் வீடியோ குற்றசாட்டுக்கு கிரண் பேடி விளக்கம் | Kiran bedi reply for her grand daughter's video

வெளியிடப்பட்ட நேரம்: 10:23 (05/04/2019)

கடைசி தொடர்பு:11:19 (05/04/2019)

``அவள் விளையாட்டாக பேசுகிறாள்!” - பேத்தியின் வீடியோ குற்றசாட்டுக்கு கிரண் பேடி விளக்கம்

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண் பேடியின் பேத்தி யூடியூபில் வெளியிட்டிருக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மொபைல் போனில் அவரே பேசி பதிவு செய்த அந்த வீடியோவில், ``நான் கிரண் பேடியின் ஒரே பேத்தி. கிரண் நானி... அப்பாவுக்கும், அம்மாவுக்கும் இடையில் எவ்வளவோ பிரச்னைகள் வந்திருக்கின்றன. அப்போதெல்லாம், ‘நான் உங்கள் பிரச்னைகளுக்கு நடுவில் வரமாட்டேன்' என்று சொன்னீர்களே... இப்போது மட்டும் ஏன் வருகிறீர்கள் ? நானி... நீங்கள் ஏன் என் அப்பாவையும், அவருடைய நண்பர்களையும் போலீஸை வைத்து கஷ்டப்படுத்துகிறீர்கள்? என்னை யாரும் கடத்தவுமில்லை, கொடுமைப்படுத்தவும் இல்லை. என் அப்பாவுடன்தான் நான் இருக்கிறேன். அவருடன் நான் சந்தோஷமாக இருப்பதை நீங்களே பாருங்கள்” என்று அந்த வீடியோவில் கட்டிலில் அமர்ந்திருக்கும் தன் அப்பாவைக் காட்டுகிறார். தொடர்ந்து, ``அம்மா... உங்களை நினைத்தும், நானியை நினைத்தும் நான் வெட்கப்படுகிறேன். என் அப்பாவுக்கு சப்போர்ட் செய்ய நினைப்பவர்கள் இந்த வீடியோ பதிவின் கீழே கமென்ட் செய்யலாம்” என்றும் கூறியிருக்கிறார்.

கிரண் பேடி

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் இந்த வீடியோ குறித்து விளக்கம் கேட்க துணைநிலை ஆளுநர் கிரண் பேடியைத் தொடர்பு கொண்டோம். ``இது எப்போதோ முடிந்து போன விவகாரம். நீதிமன்றம் அளித்த நோட்டீஸை வழக்கறிஞர் மூலம் யூடியூபில் தெரிவித்துவிட்டேன். அந்தக் குழந்தை இப்போது விளையாட்டுத்தனமாக பேசிக் கொண்டிருக்கிறது. நீதிமன்றத்தின் அந்த உத்தரவை நான் பார்க்கவில்லை. ஆனால், வழக்கறிஞர் மூலம் அதை தெரிவித்துவிட்டேன். குழந்தையின் தலையீட்டால் இது மிகவும் உணர்ச்சிகரமாக மாறியிருப்பதால் இதுகுறித்து கருத்துகள் கூறவோ, எழுதுவதோ பொருத்தமாக இருக்காது” என்று கூறியதோடு, அந்த வீடியோவின் கீழ் தான் பதிவிட்ட கருத்தையும் நமக்கு அனுப்பினார்.

ஆளுநர் கிரண் பேடியின் அந்தப் பதிவு: ``என் பேத்தி கூறியவற்றை எல்லாம் பெரிதாக எடுத்துக்கொண்டு இதற்குப் பதிலளிக்க நான் விரும்பவில்லை. அவள் எப்போதும் என் பேத்திதான். கணவனின் தந்திரமான செயல்களிலிருந்து தன்னைப் பாதுகாத்துக்கொள்ளும் முழு உரிமை என் மகளுக்கு இருக்கிறது. என் மகளை நான் எப்படி ஆதரிக்கிறேனோ அதே ஆதரவு அவளது மகளுக்கும் தேவை. இது தொடர்பான வழக்கு குடும்பநல நீதிமன்றத்தில் இருப்பதால் தீர்ப்புக்காக நம்பிக்கையோடு காத்துக்கொண்டிருக்கிறேன். நீதிமன்றத்தின் உத்தரவுப்படி காவல்துறையினர் இதுகுறித்து விசாரிப்பதோடு, ஆய்வும் செய்யலாம். வீடியோ பதிவைப் பற்றி ஒன்றும் தெரியாததைப் போல அவளது முன் உட்கார்ந்துகொண்டு இருக்கும் மந்திர செயல்களை அவளின் தந்தை நிறுத்த வேண்டும். (இதற்கான ஆவணங்கள் நிறைய இருக்கின்றன. அதனால் இதுகுறித்துக் கூற வேண்டிய முழு பொறுப்பில் இருக்கிறேன்) இந்த நடவடிக்கை எங்கள் குடும்பத்தை பாதுகாப்பதோடு, நாங்கள் இழந்த சந்தோஷங்களையும் மீண்டும் மீட்டுத் தரும். இன்று அந்த வீடியோ பதிவை நீக்கும்படி நீதிமன்றம் அவளிடம் கேட்டுக்கொண்டிருப்பதோடு வழக்கறிஞர் மூலம் இது தொடர்பான நோட்டீஸையும் யூடியூபில் வெளியிடும்படி கூறியிருக்கிறது. இது இப்போதைய நிலவரம்... காவலில் வைத்திருந்த விவகாரம், அடுத்த மாதம் நீதிமன்றத்துக்கு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.”

நீங்க எப்படி பீல் பண்றீங்க