கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோயிலில் பங்குனித் திருவிழா - கொடியேற்றத்துடன் கோலாகல தொடக்கம்! | festival started with flag host in kovilpatti shenpagavalli amman temple

வெளியிடப்பட்ட நேரம்: 11:15 (05/04/2019)

கடைசி தொடர்பு:11:15 (05/04/2019)

கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோயிலில் பங்குனித் திருவிழா - கொடியேற்றத்துடன் கோலாகல தொடக்கம்!

கோவில்பட்டியில் பிரசித்திபெற்ற செண்பகவல்லி அம்பாள் உடனுறை பூவனநாத சுவாமி திருக்கோயிலில் பங்குனிப் பெருந்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

பங்குனித் திருவிழா கொடியேற்றம்

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் பழைமையும் பெருமையும் வாய்ந்த செண்பகவல்லி அம்பாள் உடனுறை பூவனநாதசுவாமி திருக்கோயில் உள்ளது. மதுரையில் மீனாட்சி அம்பாள் அரசாட்சி செய்வது போலவே, இங்கும் அம்பாளின் அரசாட்சிதான் நடைபெற்று வருகிறது. இக்கோயிலில் வருடந்தோறும் நடைபெறும் முக்கியத் திருவிழாக்களில் பங்குனித் திருவிழாவும் ஒன்று. இந்தாண்டு, இத்திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொடியேற்றத்தை முன்னிட்டு, இன்று அதிகாலை 4 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு, அதைத் தொடர்ந்து திருவனந்தல் பூஜை, திருப்பள்ளி எழுச்சி நடைபெற்றது.

தொகியேற்றம்

பின்னர் சுவாமி, அம்பாள் மற்றும் பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனைகள் நடைபெற்றன. தொடர்ந்து, கொடி மரத்தில் கொடியேற்றம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து, சுவாமி, அம்பாள், கொடி மரம், நந்தி பலிபீடம் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகங்கள், அலங்கார தீபாராதனை நடைபெற்றது. இத்திருவிழா, இன்று தொடங்கி வரும் 15-ம் தேதி வரை தொடர்ந்து 11 நாள்கள் நடக்கிறது. இவ்விழா நாள்களில் தினமும் காலையிலும், மாலையிலும் சுவாமி, அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி , திருவீதியுலா  வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

9-ம் திருவிழாவான வரும் 13-ம் தேதி காலை 8 மணிக்கு திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் நடக்கிறது. 10-ம் திருநாளான வரும் 14-ம் தேதி மாலை, தீர்த்தவாரி நிகழ்ச்சியும் அதைத் தொடர்ந்து, தீபாராதனையும் நடக்கிறது. 11-ம் திருநாளான வரும் 15-ம் தேதி இரவு தெப்ப உற்சவவிழா நடைபெறவுள்ளது. திருவிழாவுக்கான ஏற்பாடுகளை அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் கோயில் விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க