`மக்களை சந்திக்கிற வாய்ப்பு கொடுக்க மாட்டேங்குறீங்க!’- முத்துசாமியிடம் ஆதங்கப்பட்ட ஸ்டாலின் | stalin's erode visit...

வெளியிடப்பட்ட நேரம்: 12:00 (05/04/2019)

கடைசி தொடர்பு:08:55 (06/04/2019)

`மக்களை சந்திக்கிற வாய்ப்பு கொடுக்க மாட்டேங்குறீங்க!’- முத்துசாமியிடம் ஆதங்கப்பட்ட ஸ்டாலின்

ஸ்டாலின்

தமிழகம் முழுவதும் உள்ள மக்களவைத் தொகுதிகள் மற்றும் இடைத்தேர்தல் நடக்கவுள்ள 18 சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து தி.மு.க தலைவர் ஸ்டாலின் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். அந்தவகையில், ஈரோடு மக்களவைத் தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளராகப் போட்டியிடும் ம.தி.மு.க பொருளாளரான கணேசமூர்த்தியை ஆதரித்து, ஈரோட்டில் நேற்று நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் ஸ்டாலின் கலந்துகொண்டார்.

ஈரோட்டை அடுத்த ஆணைக்கல்பாளையம் பகுதியில் நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்துக்கு வேன், டெம்போக்கள் மூலம் பொதுமக்களை அள்ளிவந்து தி.மு.க-வினர் அரங்கை நிரப்பினர். 5 மணிக்கு மேடைக்கு வருவதாகச் சொன்ன ஸ்டாலின், 7.30-க்கு மேடையேறக் கூட்டம் கொஞ்ச கிறுகிறுத்துத்தான் போயிருந்தது. ஆனால், ஸ்டாலினின் பேச்சு கொஞ்சம் கொஞ்சமாக தீப்பிடிக்க, கூட்டம் பரபரப்பானது.

ஸ்டாலின்

வழக்கமான பொதுக்கூட்ட மேடையுடன், கமல் பாணியில் மேடையிலிருந்து 200 மீட்டர் தூரத்துக்கு ஸ்டாலின் நடந்து சென்று பொதுமக்களைச் சந்திக்கும் வகையில் தனியாக ஒரு மேடையையும் அமைத்திருந்தனர். ‘நான் ஒரு கூட்டத்துக்கு வந்தா என்னைப் பத்திரமா கூட்டிட்டு வந்து, கூட்டம் முடிஞ்சதும் கார் ஏத்தி அனுப்பி வச்சிடுறீங்க. மக்கள்கிட்ட போய் சந்திக்கிற வாய்ப்பையே கொடுக்க மாட்டேங்குறீங்கன்னு’ ஸ்டாலின் கேட்டுக்கொண்டதால்தான்  மாவட்டச் செயலாளர் முத்துசாமி இப்படியான ஏற்பாட்டைச் செய்திருக்கிறார். ஸ்டாலின் பேசி முடித்ததும், அந்த 200 மீட்டர் மேடையில் நடந்து சென்று பொதுமக்களைச் சந்தித்து அவர்களுடன் உற்சாகமாக கை குலுக்கினார்.

ஸ்டாலின்

வழக்கமாகக் கையில் ஒரு கட்டு பேப்பரை வைத்துக்கொண்டு மூச்சு விடாமல் பேசும் ஸ்டாலின், நேற்று  ‘காங்கிரஸ் தேர்தல் அறிக்கையைப் போலி என்று ஒரு போலியே (மோடி) சொல்லுகிறது என்பதில் ஆரம்பித்து, எடப்பாடி ரொம்ப அறிவாளி, எந்த அளவுக்கென்றால், `கம்பராமாயணத்தை எழுதியது சேக்கிழார்'னு கிண்டலடித்தார். அதோடு இல்லாமல் மோடியின் 15 லட்சம் வாக்குறுதியை வறுத்தெடுக்கும் வகையில் ‘பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த மோடி பெருமானே’ என இசைக் கச்சேரியையும் நடத்திவிட்டார். இப்படி ஸ்டாலினுடைய உற்சாகமான பேச்சுகள் ஒருபுறம் இருந்தாலும், கருணாநிதியின் நினைவுகளைப் பற்றியும், தேர்தலில் வெற்றி பெற்று அதை கருணாநிதி காலடியில் சமர்ப்பிக்க வேண்டும் என சொன்னபோதும் ஸ்டாலினின் நா தன்னிச்சையாகத் தழுதழுத்தது.

கடந்த இரண்டு நாள்களாக, நீலகிரி, கோவை, பொள்ளாச்சி எனக் கொங்கு மண்டலத்தில் பிரசாரம் செய்த ஸ்டாலின், சென்ற இடங்களில் கிடைத்த உற்சாக வரவேற்பு மற்றும் நிலைமை தி.மு.க-வுக்கு சாதமாக இருக்கிறது என்பதைத் தெரிந்துகொண்டதால்தான் ஈரோட்டில் அந்த உற்சாகத்தை தன்னுடைய பேச்சில் வெளிப்படுத்தியிருக்கிறார்.