``கூபன் முதலை மரணத்துக்கு என்ன காரணம்?"- வருந்தும் ரோமுலஸ் விடேகர் | Resort's noise pollution kills rare Cuban Crocodile

வெளியிடப்பட்ட நேரம்: 12:20 (05/04/2019)

கடைசி தொடர்பு:12:40 (05/04/2019)

``கூபன் முதலை மரணத்துக்கு என்ன காரணம்?"- வருந்தும் ரோமுலஸ் விடேகர்

சென்னை முதலைப் பண்ணை, சென்னையின் அடையாளங்களில் ஒன்று. முதலைகளைக் காப்பிடத்தில் வைத்து இனப்பெருக்கம் செய்து அழிவின் விளிம்பிலிருக்கும் முதலை இனங்களைக் காப்பாற்ற ஊர்வனவியலாளர் ரோமுலஸ் விடேகர் கடும் முயற்சியில் உருவாக்கிய இடம். அங்கு கடந்த 30-ம் தேதி இரவு ஒரு கூபன் முதலை இறந்துவிட்டது. அதிகாரபூர்வமாக இந்த அறிவிப்பு நேற்று (4.4.2019) வெளியானது.

கூபன் முதலை

முதலைப் பண்ணைக்கு அருகிலேயே ஷெராடன் கிராண்டு சென்னை ரிசார்ட் & ஸ்பா அமைந்துள்ளது. ஏற்கெனவே அங்கிருந்து வரும் அதிகளவிலான ஒலி முதலைப் பண்ணையில் வாழும் உயிரினங்களுக்குச் சிக்கலை விளைவிப்பதாகப் புகார்கள் அளிக்கப்பட்டிருந்தன. அவர்கள் ஒலி மாசுபாட்டு விதிகளில் குறிப்பிட்ட எல்லைகளைவிட அளவுக்கு அதிகமான ஒலிகளை வெளியிட்டுள்ளனர். அதேபோன்றதொரு சம்பவம் நடந்துகொண்டிருந்த மார்ச் 30-ம் தேதிதான் முதலைப் பண்ணையிலிருந்த கூபன் முதலையும் இறந்துள்ளது. 

சர்வதேச அளவில் அழியும் நிலையிலிருக்கும் ஓர் இனம்தான் இந்தக் கூபன் முதலை. முதலைப் பண்ணையில் இந்த இனத்தைச் சேர்ந்த நான்கு பெண் முதலைகளும் ஓர் ஆண் முதலையும் இருந்தது. அதில் தற்போது ஒரு பெண் முதலை இறந்துவிட்டது. ஷெராடன் ரிசார்ட்டின் சுவரிலிருந்து ஐம்பது அடி தூரத்தில்தான் கூபன் முதலைகளின் காப்பிடம் இருந்துள்ளது. 

முதலை

சென்னை முதலைப் பண்ணையைத் தோற்றுவித்தவர்களில் ஒருவரான ஊர்வனவியலாளர் ரோமுலஸ் விடேகர் இதுதொடர்பாகப் பேசியபோது, ``முன்னமே பலமுறை கோரிக்கை வைத்தும் அதிகமான ஒலி ஏற்படுத்தும் கருவிகளை வைத்து அருகிலிருக்கும் ரிசார்ட்டில் கேளிக்கைக் கொண்டாட்டங்கள் நடத்தப்படுகின்றன. இது மிகவும் அரிய வகை முதலை. இங்கிருக்கும் ஐந்தே முதலைகளில் ஒன்று தற்போது இறந்துவிட்டது. இறந்துபோன முதலை இதுவரை எந்தவிதமான உடல்ரீதியான பிரச்னைகளும் இல்லாமல் ஆரோக்கியமாகவே இருந்தது. அது முழுக்க முழுக்க ஒலி மாசுபாட்டால் ஏற்பட்ட அழுத்தத்தால்தான் இறந்திருக்க வேண்டும். அதிர்ஷ்டவசமாக ஆண் முதலை தப்பித்துவிட்டதால், அதன் இனப்பெருக்கம் பாதிக்கப்படாது. இனி இவற்றை வேறிடத்துக்கு மாற்றுவதைப் பற்றி நாங்கள் சிந்திக்க வேண்டும். அதுவும் அதிகமான பொருள்செலவில்" என்று கூறினார்.

இதுபோன்ற செயல்கள் நடக்காமல் தடுப்பதற்கு இனியாவது முயற்சிகள் மேற்கொள்வோம். எந்த இடத்தில் எது வரவேண்டும் என்ற அடிப்படைகூட இல்லாமல் ஒரு காட்டுயிர் காப்பிடத்துக்கு அருகில் கேளிக்கை விடுதிக்கு அனுமதி கொடுத்த அதிகாரிகள்தான் இந்த அசம்பாவிதத்துக்குப் பதில் சொல்ல வேண்டும்.