`நீங்கள் ராகுல்தானே...' - ஆட்டோவில் கடத்திய மேலாளரை சினிமா பாணியில் விரட்டிப்பிடித்த போலீஸ்  | kidnap action stopped by police

வெளியிடப்பட்ட நேரம்: 12:55 (05/04/2019)

கடைசி தொடர்பு:12:55 (05/04/2019)

 `நீங்கள் ராகுல்தானே...' - ஆட்டோவில் கடத்திய மேலாளரை சினிமா பாணியில் விரட்டிப்பிடித்த போலீஸ் 

சென்னை அண்ணாசாலையில் கடத்தப்பட்ட செல்போன் கடையின் மேலாளரை சினிமா பாணியில் போலீஸ் வாகனத்தில் சென்று போலீஸார் மடக்கிப்பிடித்தனர்.

கடத்தல் கும்பலைப் பிடித்த போலீஸ்

சென்னை சவுகார் பேட்டை ஆதியப்பன் நாயக்கன் தெருவைச் சேர்ந்தவர்  ராகுல்சந்த் (26). இவர் கீழ்ப்பாக்கம் ஆர்ம்ஸ் ரோட்டில் உள்ள செல்போன் சர்வீஸ் மற்றும் விற்பனைக் கடையில் மேலாளராகப் பணியாற்றிவருகிறார். சம்பவத்தன்று மாலை 6 மணியளவில் நண்பர் திலீப்புடன் கடைக்கு எதிரே உள்ள ஜூஸ் கடைக்கு ராகுல்சந்த் சென்றார். அப்போது அங்கு வந்த ஒருவர், ராகுல் சந்த்திடம் ‘நீங்கள் ராகுல்தானே’ என கேட்டதோடு செல்போன் சார்ஜர் விலை குறித்து விசாரித்துள்ளார்.  

அவரிடம் ராகுல்சந்த் பேசிக்கொண்டிருந்தபோது அவ்வழியாக வந்த ஆட்டோ, ராகுல்சந்த் அருகில் நின்றது. அந்த ஆட்டோவுக்குள் ராகுல்சந்த்தை வலுக்கட்டாயமாக ஏற்றினார் அந்தநபர். ஆட்டோவுக்குள் இன்னும் சிலர் இருந்தனர். அவர்களின் பிடியில் ராகுல்சந்த் சிக்கியதும் அடுத்த நிமிடமே ஆட்டோ அங்கிருந்து மின்னல் வேகத்தில் பறந்தது. ராகுல்சந்த்தை ஆட்டோவில் கடத்திய சம்பவத்தைப் பார்த்த அவரின் நண்பர் திலீப் அதிர்ச்சியில் உறைந்தார். காப்பாற்றுங்கள் என்று ராகுல்சந்த் அலறினார். ஆனால், அவரைக் காப்பாற்ற முடியவில்லை. அதற்குள் ஆட்டோ அங்கிருந்து சென்றுவிட்டது.   

இதையடுத்து ராகுல்சந்த் நண்பர் திலீப், போனில் செல்போன் கடை ஊழியர் அசோக் என்பவருக்கு ராகுல்சந்த் ஆட்டோவில் கடத்தப்பட்ட தகவலைத் தெரிவித்தார். இந்நிலையில் ராகுல் செல்போனிலிருந்து செல்போன் கடை உரிமையாளர் குணாலுக்கு போன் அழைப்பு வந்தது. அதில் பேசிய ராகுல், தன்னை மர்ம நபர்கள் கடத்தியுள்ளதாகவும், 5 லட்சம் ரூபாய் பணம் கொடுக்காவிட்டால் கத்தியால் குத்திக் கொலை 
செய்து விடுவதாக மிரட்டுகின்றனர் என்றும் தெரிவித்தார். 

ராகுல்சந்த் கடத்தப்பட்ட தகவல் அவரின் சகோதரர் ரோகித் சந்துக்குக் கொடுக்கப்பட்டது. அவர் கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். கமிஷனர் விஸ்வநாதன் உத்தரவின் பேரில் இணைக்கமிஷனர் ஜெயகவுரி மேற்பார்வையில், கீழ்ப்பாக்கம் 
போலீஸ் உதவிக்கமிஷனர் ஜெகதீஸ்வரன், இன்ஸ்பெக்டர்கள் பொன்ராஜ், பிரவீன்குமார், இளங்கோ ஆகியோர் தலைமையிலான தனிப்படையினர் ராகுல்சந்த்தை தேடினர். 

அப்போது ராகுல்சந்த் ஆப்பிள் ஐபோன் செல்போனை பயன்படுத்தி வருவதாகவும், அதில் உள்ள ஜிபிஆர்எஸ் மூலம் செல்போன் எங்கே இருக்கிறது என்பதை, தௌிவாக கண்டுபிடிக்க முடியும் என்ற தகவல் போலீஸாருக்குத் தெரியவந்தது. இதைடுத்து, ராகுல் சந்த் கடையில் வேலை பார்க்கக்கூடிய ஊழியர்கள் மூலம் போலீஸார் ஐபோன் இருக்கும் இடத்தை ஆய்வு செய்தனர். செல்போன் டவர் மூலம் ராகுல் சந்த் இருக்கும் இடத்தை போலீஸார் கண்டறிந்தனர். சாந்தோம் பகுதியில் இருப்பதாக ஐபோன் சிக்னல் காட்டியது. உடனடியாக கீழ்ப்பாக்கம் போலீஸார் அங்கு விரைந்தனர். சாந்தோம் முதல் மெரினா பீச் வரை சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் நின்ற ஆட்டோக்களை போலீஸார் கண்காணித்தனர். இரவு 10 மணி அளவில் ஐபோனிலிருந்து கிடைத்த சிக்னல் துண்டிக்கப்பட்டது. இதனால் தேடுதல் பணியில் தொய்வு ஏற்பட்டது. இருப்பினும் போலீஸார் விடாமல் ராகுல்சந்த்தைத் தேடினர். இந்தச் சமயத்தில் ராகுல்சந்த்தின் செல்போன் சிக்னல் அண்ணா சாலையில் உள்ள பெரியார் சிலை அருகே காட்டியது. உடனடியாக சாந்தோம் பகுதியிலிருந்து போலீஸார் அண்ணாசாலைக்கு விரைந்தனர். உதவிக்கமிஷனர் ஜெகதீஸ்வரன் தலைமையிலான டீம் அங்கு தீவிரமாக வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது போலீஸாரைப் பார்த்து ஆட்டோ ஒன்று வாகன சோதனையில் சிக்காமல் வேறுவழியாக செல்ல முயன்றது. அதைப்பார்த்த போலீஸார் அந்த ஆட்டோவை விரட்டினர். சினிமா பாணியில் ஆட்டோ அங்கிருந்து வேகமாகச் சென்றது. ஆட்டோவின் மீது போலீஸ் வாகனம் மோதியது. இதனால் ஆட்டோவை நிறுத்திவிட்டு கடத்தல் கும்பல் தப்பி ஓடியது. அவர்களை விரட்டிச் சென்ற போலீஸார் 6 பேரை மடக்கிப் பிடித்தனர். இந்தச் சம்பவத்தால் அண்ணாசாலையில் பரபரப்பு ஏற்பட்டது. பிடிப்பட்டவர்களிடம் விசாரித்தபோது திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. 

இதுகுறித்து போலீஸார் கூறுகையில் ``கீழ்ப்பாக்கத்தில் செல்போன் கடையை நடத்திவருபவர் குணால். இவரின் கடையில் மேலாளராக ராகுல் சந்த் பணியாற்றிவருகிறார். இரவு 8 மணிக்கு எங்களுக்கு புகார் வந்ததும் உதவிக் கமிஷனர் ஜெகதீஸ்வரன் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் பொன்ராஜ், இளங்கோவன், பிரவீன்குமார் மற்றும் போலீஸார் கொண்ட தனிப்படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது பல்லவன் சாலையில் உள்ள காட்பாடி முனீஸ்வரர் கோயில் அருகே ஆட்டோவை நிறுத்திய கடத்தல் கும்பல் செல்போன் கடை உரிமையாளருக்கு போனில் பணம் கேட்டு மிரட்டியது தெரியவந்தது. அங்கு நாங்கள் செல்வதற்குள் சாந்தோம் பகுதிக்கு கடத்தல் கும்பல் சென்றுவிட்டது. அங்கேயும் நாங்கள் சென்றபோது அண்ணாசாலைக்கு கடத்தல் கும்பல் தப்பியது.

கடத்தல் கும்பலை கைது செய்த போலீஸ்

அண்ணாசாலையில் காத்திருந்த உதவிக் கமிஷனர் ஜெகதீஸ்வரனும் அவரின் டிரைவர் பிரதீஸ் ஆகியோர் சேர்ந்து கடத்தல் கும்பல் தப்பிச் சென்ற ஆட்டோவை அண்ணாசாலையில் விரட்டினர். அப்போது ஆட்டோவை முந்திச் சென்ற டிரைவர் பிரதீஸ், அதன்மீது போலீஸ் வாகனத்தைக் கொண்டு மோதி ஆட்டோவை சாதுர்யமாக நிறுத்த வைத்தார். அப்போது துப்பாக்கி முனையில் 6 பேரை பிடித்தோம். 
அவர்களிடம் விசாரித்தபோது  சென்னை, கொண்டித்தோப்பு பகுதியைச் சேர்ந்த சரத்குமார் (27), ஏழுகிணறு பகுதியைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் மகேஷ் (21) மற்றும் அவர்களின் கூட்டாளிகள்  ஏழுகிணறு பகுதியைச் சேர்ந்த தமிழரசன் (32), ராஜன் (24), யானைக்கவுனி பகுதியைச் சேர்ந்த சூர்யா (21), விமல் என தெரியவந்தது. இதில் விமல், சூர்யா இருவரும் சட்டக்கல்லுாரி மாணவர்கள். ராகுல் சந்த்தை கடத்துவதற்கு மூளையாக சரத் செயல்பட்டுள்ளார். பணத்தைப் பறிக்கவே ராகுல்சந்தைக் கடத்தியதாக கைதானவர்கள் எங்களிடம் தெரிவித்தனர். புகார் கொடுத்த 2 மணி நேரத்தில் கடத்தல் கும்பலைப் பிடித்து கைது செய்து சிறையில் அடைத்துள்ளோம். கைதான 6 பேர் மீதும் ஏழுகிணறு, யானைக்கவுனி உள்ளிட்ட காவல் நிலையங்களில் அடிதடி, கடத்தல் வழக்குகள் உள்ளன" என்றனர். 

இதுகுறித்து போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறுகையில் ``ராகுல் சந்த், செல்போன் கடையில் மேலாளராகப் பணியாற்றிய நிலையில், பங்குச்சந்தை மூலம் அவருக்கு அதிகளவில் வருமானம் கிடைத்துள்ளது. அவரிடம் பணம் அதிகமாக இருப்பதையறிந்து ராகுல் சந்த்தை திட்டமிட்டுக் கடத்தியுள்ளனர். வீட்டிலிருந்து ராகுல் சந்த் கடைக்கு வந்த நேரத்திலிருந்து அவரை கண்காணித்து வந்துள்ளது கடத்தல் கும்பல். அதன்பிறகு புத்திசாலித்தனமாகவே கடத்தல் கும்பல் செயல்பட்டது. ஆனால், ஐபோன் மற்றும் போலீஸாரின் துரிதமான செயல்பாடுகளால் கடத்தல் கும்பல் எங்களிடம் சிக்கிக்கொண்டது. அண்ணாசாலையில் கடத்தல் கும்பலின் ஆட்டோவைப் பார்த்ததும் அதை நிறுத்தச் சொன்னோம். ஆனால், ஆட்டோவில் கடத்தல் கும்பல் தப்பியது. இதனால்தான் போலீஸ் வாகன டிரைவர் பிரதீஸ், பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் அதே நேரத்தில் துரிதமாக செயல்பட்டு ஆட்டோவை மடக்கினார்" என்றார். 

கடத்தல்காரர்களைக் கைது செய்த உதவிக்கமிஷனர் ஜெகதீஸ்வரன் தலைமையிலான தனிப்படையினரை கமிஷனர் விஸ்வநாதன் வெகுவாகப் பாராட்டினார்.