`நம்ம தலைவர் அவர் பெயரைச் சொல்லித்தான் வாக்கு கேட்கிறார்!'- ரங்கசாமி பிரசாரத்தில் தொண்டர்கள் கமென்ட் | Puducherry MP election scenario

வெளியிடப்பட்ட நேரம்: 14:10 (05/04/2019)

கடைசி தொடர்பு:08:55 (06/04/2019)

`நம்ம தலைவர் அவர் பெயரைச் சொல்லித்தான் வாக்கு கேட்கிறார்!'- ரங்கசாமி பிரசாரத்தில் தொண்டர்கள் கமென்ட்

புதுச்சேரியில் மக்களவைத் தேர்தலுக்கான பிரசாரம் வேகமெடுத்துள்ளது. தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளராக முன்னாள் முதல்வர் வைத்திலிங்கமும், அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணியில் என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளராக ஸ்ரீமணக்குள விநாயகர் கல்லூரி குழுமங்களின் உரிமையாளர் கே.நாராயணசாமியும் போட்டியிடுகின்றனர்.

புதுச்சேரி  தேர்தல் களம்

காங்கிரஸ் கட்சிக்கும், மாநிலக் கட்சியான என்.ஆர்.காங்கிரஸுக்கும் நேரடி போட்டி என்பதால், முதல்வர் நாராயணசாமியும், எதிர்க்கட்சித் தலைவர் ரங்கசாமியும் வார்த்தைப் போர் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

நாராயனசாமி

பிரசாரக் கூட்டத்தில் பேசிய முதல்வர் நாராயணசாமி, ``என்.ஆர்.காங்கிரஸ் தரப்பில் அனுபவம் இல்லாதவரை வேட்பாளராக நிறுத்தியிருக்கிறார்கள். ஆனால், நமது வேட்பாளர் வைத்திலிங்கம் அனுபவமுள்ளவர். 8 முறை எம்.எல்.ஏ, அமைச்சர், முதலமைச்சர், சபாநாயகர் உள்ளிட்ட பொறுப்புகளை வகித்தவர். அவர் டெல்லி சென்றால்தான் நிதியைப் பெற்றுத்தர முடியும்” என்றார்.

அதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாகப் பேசிய ரங்கசாமி, ``படித்த இளைஞரை வேட்பாளராக நிறுத்தியிருக்கிறோம். ஆனால், அவருக்கு அனுபவம் போதாது என காங்கிரஸ் கட்சியினர் குறை சொல்கின்றனர். அப்படியானால் 18 ஆண்டுகள் ராஜ்யசபா எம்.பியாகவும், 5 ஆண்டுகள் மத்திய அமைச்சராகவும் இருந்த நாராயணசாமி போட்டியிடாமல், சபாநாயகராக இருந்த வைத்திலிங்கத்தை நிறுத்தியிருப்பது ஏன். நாராயணசாமி மத்திய அமைச்சராக இருந்தபோது புதுச்சேரிக்கு என்ன திட்டத்தைக் கொண்டுவந்தார். ஏதாவது ஒரு திட்டத்தை நான் கொண்டுவந்தேன் என அவரால் சொல்ல முடியுமா. மத்தியில் ஆட்சியில் உள்ளவர்களோடு சுமுகமாக இருந்தால்தான் நமது மாநிலத் தேவைகளை பூர்த்தி செய்துகொள்வதோடு, மாநில வளர்ச்சிக்கான நிதியையும் பெற முடியும். ஆனால், தற்போதைய முதல்வர் நாராயணசாமி எதற்கெடுத்தாலும் யார் மீதாவது பழியை, குறையை சுமத்துவதை வாடிக்கையாக வைத்துள்ளார்.

நான் முதல்வராக இருந்தபோது மத்தியில் பா.ஜனதா ஆட்சி இருந்தது. அப்போது பல திட்டங்களை நான் கேட்டுப் பெற்றுள்ளேன். பா.ஜனதா ஆட்சி மீண்டும் மத்தியில் அமையும் என கருத்துக் கணிப்புகள் கூறுகிறது. இதனால்தான் அவர்களோடு கூட்டணி அமைத்து நாம் போட்டியிடுகிறோம். அதனால், நமது வேட்பாளர் நாராயணசாமிக்கு வாக்கு அளியுங்கள்” என்கிறார். ``நாராயணசாமியைக் கடுமையாக விமர்சிக்கும் நம் தலைவர் அவர் பெயரைச் சொல்லிதான் வாக்கு கேட்கிறார். இதுதான் விட்ட குறை தொட்ட குறை” என்று கமென்ட் அடித்துக்கொள்கின்றனர் என்.ஆர்.காங்கிரஸ் தொண்டர்கள்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க