" 'ஸ்டாலின் இன்னொரு ஜெயலலிதா' என்று நான் சொன்னதில் தவறில்லை!" - என்ன சொல்கிறார் திருமாவளவன்? | Thirumavalavan Explains his statement 'why stalin is another Jayalalithaa?'

வெளியிடப்பட்ட நேரம்: 17:30 (05/04/2019)

கடைசி தொடர்பு:17:32 (05/04/2019)

" 'ஸ்டாலின் இன்னொரு ஜெயலலிதா' என்று நான் சொன்னதில் தவறில்லை!" - என்ன சொல்கிறார் திருமாவளவன்?

``ஒருமுறை விகடன் பேட்டியில் ஸ்டாலின் இன்னொரு ஜெயலலிதா என்று சொன்னவர் நீங்கள். இப்போது அந்தக் கருத்தைப் பரிசீலனை செய்ய விரும்புகிறீர்களா?"

`தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் இன்னொரு ஜெயலலிதா' எனச் சொன்னதற்குக் காரணம் என்ன என்பது குறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் விளக்கமளித்துள்ளார்.

சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் திருமாவளவன், தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் தேர்தல் பிரசாரத்தில் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறார். ஆனந்த விகடன் இதழுக்கு அவர் ஏற்கெனவே அளித்த பேட்டியில் தெரிவித்திருந்த பதில்களையும், தற்போது அந்தப் பேட்டியின் முரண்களையும் அடிப்படையாக வைத்து சுவாரஸ்யமான சில கேள்விகளை முன்வைத்தோம். 

``ஒருமுறை விகடன் பேட்டியில் `ஸ்டாலின் இன்னொரு ஜெயலலிதா' என்று சொன்னவர் நீங்கள். இப்போது அந்தக் கருத்தை மறுபரிசீலனை செய்ய விரும்புகிறீர்களா?"

``அந்தக் கருத்து ஒன்றும் தவறானதாகத் தெரியவில்லை. ஜெயலலிதா அம்மையார் கட்சி நிர்வாகத்திலும், ஆட்சி நிர்வாகத்திலும் துணிச்சலாக முடிவெடுக்கக் கூடியவர். அப்படி எடுத்த முடிவைத் துணிச்சலாக நடைமுறைப்படுத்துவார். தன்னுடைய கட்சியைச் சேர்ந்த முன்னணித் தலைவர்களுடன் அவர் கலந்து பேசுகிறாரோ இல்லையோ, தான் எடுக்கும் முடிவைக் கட்சியினர் மத்தியில் நடைமுறைப்படுத்துவதில் ஆற்றல் மிக்கவர் அவர். அதன் அடிப்படையில்தான், ஸ்டாலின் குறித்தும் நான், என்னுடைய பேட்டியில் சொன்னேன். தி.மு.க. தலைவர் ஸ்டாலினும் அதுபோன்ற அணுகுமுறையைக் கையாளத் தொடங்கியிருக்கிறார் என்று இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நான் கூறியிருந்தேன். இப்போதும் அதேபோன்ற அணுகுமுறையைத்தான் ஸ்டாலின் கையாள்கிறார் என்பதில் எனக்கு மாற்றுக் கருத்து இல்லை. ஸ்டாலினைக் குறைத்து மதிப்பிடும் நோக்கில் நான் அந்தக் கருத்தைச் சொல்லவில்லை. நிர்வாகம் செய்வதில் ஜெயலலிதாவைப் போன்று செயல்படுகிறார் என்கிற பொருளில்தான் சுட்டிக்காட்டியிருந்தேன் அவ்வளவுதான்". 

`` `ஜெயலலிதாவை வீழ்த்தும் அளவு வலிமையை தி.மு.க. பெறவில்லை அல்லது ஸ்டாலினுடைய தலைமை பெறவில்லை என்பதுதானே உண்மை’ என நீங்கள் முன்பு ஆனந்த விகடன் பேட்டியில் குறிப்பிட்டீர்கள். இப்போது ஸ்டாலின் அந்த வலிமையைப் பெற்று விட்டாரா?"

``ஜெயலலிதா உயிரோடு இருந்தபோது, `ஜெயலலிதாவா, கலைஞரா?' என்று இரு துருவங்களாக விளங்கினார்கள். அந்த நேரத்தில் ஜெயலலிதாவுடன் ஒப்பிட்டு ஸ்டாலினை நாம் மதிப்பீடு செய்ய முடியாது. அந்த ஒப்பீடு தவறானது. ஆனால், தற்போது எடப்பாடி தலைமையிலான அ.தி.மு.க, ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. என இரு கட்சிகளையும் இரண்டையும் ஒப்பிடுகையில், திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் என்ற முறையில் அ.தி.மு.க-வை வீழ்த்தும் வலிமையை ஸ்டாலின் பெற்றிருக்கிறார் என்பதுதான் என்னுடைய நம்பிக்கை".

`` `கருணாநிதி, ஜெயலலிதா போன்றவர்களின் இடத்தை நிரப்பக்கூடிய அளவுக்கு வசீகரத் தலைமை தமிழகத்தில் இல்லை. ரஜினி அந்த இடத்தை நிரப்பக்கூடும்' என்று சொன்னீர்கள். இப்போது உங்கள் கருத்து என்ன?"

ஸ்டாலின் பற்றி திருமாவளவன்

``சினிமா கவர்ச்சி என்பதும் இங்கே முக்கியமானதாக உள்ளது. தமிழகத்தைப் பொறுத்தவரை, கடந்த ஐம்பதாண்டு காலத்திற்கும் மேலாகத் திரைப்படக் கவர்ச்சி மையப்பொருளாக இருந்து வந்துள்ளது. அந்த அடிப்படையில் பார்க்கும்போது, அன்றைக்கு எழுப்பிய கேள்விக்கு ரஜினிகாந்துக்குத் திரைப்பட கவர்ச்சி இருக்கிறது. ஒருவேளை அவர் அப்படியொரு முதன்மை இடத்தை அல்லது இரண்டாவது இடத்தைப் பெறுகிற வாய்ப்பு அமைந்தாலும் அமையலாம் என்று சொன்னேன். கமல்ஹாசன் அரசியலுக்கு வராத நேரம் அது. அவருக்கும் திரைப்படக் கவர்ச்சி கைகூடும் என்கிற நம்பிக்கையில் களத்தில் இறங்கியிருக்கிறார். ஆக, திரைப்படக் கவர்ச்சியிலிருந்து, தமிழகம் முழுமையாக மீண்டுவிட்டது என்று சொல்லிவிட முடியாது".

``சின்னச் சின்ன தலித் கட்சிகளையும் மற்றும் தலித் இயக்கங்களையும் விடுதலைச் சிறுத்தைகள் ஒருங்கிணைத்தால் அது ஒரு முக்கிய நகர்வாகப் பார்க்கப்படும்தானே?"

``தேவையையொட்டி பிரச்னைகளின் அடிப்படையில் அந்தந்த காலச் சூழலுக்கு ஏற்ப இணைந்து செயல்பட்டிருக்கிறோம். வருங்காலத்திலும் செயல்படுவோம்".

``ஒருவேளை தி.மு.க-வுடன் கூட்டணி அமைக்காமல் இருந்திருந்தால், வி.சி.க. யாருடன் கூட்டணி சேர்ந்து இந்த நாடாளுமன்றத் தேர்தலைச் சந்தித்திருக்கும்?"

``இது நடந்து முடிந்தபிறகு கேட்கப்படுகிற ஒரு யூகத்தின் அடிப்படையிலான கேள்வி. இதற்குப் பதிலளிக்க இயலாது".

``கட்சிகள் தேர்தலைச் சந்திப்பதற்கு பெரும் அளவிலான பணம் தவிர்க்க முடியாததாகி விட்டது, சமீபத்தில்கூட உங்கள் கட்சித் தொண்டர்களிடம் பணம் கேட்டு கடிதம் எழுதியிருந்தீர்கள். பணமே பிரதானம் என்றாகிவிட்ட பிறகு வி.சி.க. மாதிரியான கட்சி, தனியாகத் தேர்தலைச் சந்திக்கும் காலம் அமையுமா?"

``நாங்கள் தனித்துப் போட்டியிட விரும்பினாலும் ஏதாவது ஒரு அணியில் இடம்பெற வேண்டும் என்கிற அளவிற்கான சூழல் அமைந்து விடுகிறது என்பதுதான் யதார்த்தம். 1999-ல் இருந்து 2019 வரையிலான எல்லாத் தேர்தல்களிலும் நாங்கள் ஒரு அணியில் இடம்பெறுவதற்கான வாய்ப்பைப் பெற்றிருக்கிறோம். அந்த அளவுக்கு ஒரு வலிமையைப் பெற்ற கட்சி அல்லது தகுதியைப் பெற்ற கட்சி. இனி நடக்கப்போவதைக் காலம்தான் தீர்மானிக்கும் என்று நினைக்கிறேன்".

``மீனாட்சிபுரம் மக்களின் மதமாற்றம் குறித்து முனைவர் பட்டத்திற்கான ஆராய்ச்சி செய்ததுபோல வேறு ஏதேனும் பிரச்னை குறித்து ஆராய்ச்சி செய்ய இருக்கிறீர்களா?"

``ஆம். ஒரு குறிப்பிட்ட மதம் தொடர்பான ஆராய்ச்சி பற்றிய வேட்கையோடு இருக்கிறேன். இந்தத் தேர்தல் முடிந்தவுடன் அதுபற்றி யோசிக்க வேண்டும்".


டிரெண்டிங் @ விகடன்