செல்போனுக்காக உயிரைவிட்ட சமையல் மாஸ்டர் - சென்னையில் வழிப்பறி கும்பல் அட்டகாசம்  | Murder while snatching mobile from cook

வெளியிடப்பட்ட நேரம்: 14:55 (05/04/2019)

கடைசி தொடர்பு:14:55 (05/04/2019)

செல்போனுக்காக உயிரைவிட்ட சமையல் மாஸ்டர் - சென்னையில் வழிப்பறி கும்பல் அட்டகாசம் 

சென்னையில் செல்போன் பறிக்கும் கும்பலிடமிருந்து செல்போனை பாதுகாக்க சமையல் மாஸ்டர் கடுமையாகப் போராடினார். ஆனால், வழிப்பறி கும்பல், மாஸ்டரை கத்தியால் குத்திக் கொலை செய்தது. 

 கொலை செய்யப்பட்ட மாஸ்டர்

சென்னையில் செல்போன் பறிப்பு சம்பவங்கள் தொடர்கதையாகிவருகின்றன. செல்போன்களைப் பறிக்கொடுத்தவர்கள் காவல் நிலையங்களில் புகார் கொடுத்தாலும் கண்டுபிடித்து கொடுக்கப்படுவதில்லை. செல்போன்களைத் திருடும் கும்பல், குறைந்தவிலைக்கு அதை விற்றுவிடுகின்றன. அத்தகைய செல்போன்கள் மாநிலம் விட்டு மாநிலங்களுக்குச் சென்றுவிடுவதால் செல்போன்களை கண்டறிவதில் சிக்கல் உள்ளது. இந்த நிலையில், முதல் முறையாக தி.நகர் மற்றும் திருவல்லிக்கேணி காவல் சரகத்தில் திருடப்பட்ட செல்போன்களை மீட்டு சம்பந்தப்பட்டவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. செல்போன் திருட்டைத் தடுக்க சென்னை போலீஸ் கமிஷனர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறார். அதில் ஒரு புதிய முயற்சியாக திருடப்படும் செல்போன்களின் வழக்குகளின் நிலையை அறிந்துகொள்ள ஆப்ஸ் ஒன்றும் அறிமுகப்படுத்தப்பட்டது. அதில் திருடப்பட்ட செல்போன்களின் ஐஎம்இஐ நம்பர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதனால் திருட்டு செல்போன்கள் விற்கப்படுவது தவிர்க்கப்படும் என்று போலீஸார் கருதுகின்றனர். 

 போலீஸாருக்கு சவால்விடும் வகையில் புதுப்புது டெக்னிக்கை செல்போன் பறிப்புக் கும்பல் பின்பற்றிவருகின்றனர். செல்போன்களை கண்டறிய உதவும் ஐஎம்இஐ நம்பர்களை மாற்றி அதை விற்றுவிடுகின்றனர். செல்போன் பறிப்பு போல செயின் பறிப்புச் சம்பவங்களும் பொதுமக்களை பீதியடைய வைக்கிறது. இதனால் பாதிக்கப்படுவோர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. சென்னை பொழிச்சலூரில் செல்போனை பறித்தபோது நடந்த தகராறில் சமையல் மாஸ்டர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார். 

அதுகுறித்து விவரம் இதோ 

சென்னை, பொழிச்சலூர் மகேஷ் நகர் ஜோதிமணி தெருவில் குடியிருந்தவர் ராஜகண்ணன் (29). இவரின் சொந்த ஊர் மயிலாடுதுறை. சென்னை பொழிச்சலூரில் உள்ள ஹோட்டலில் சமையல் மாஸ்டராக ராஜகண்ணன் பணியாற்றிவந்தார். கடந்த 30-ம் தேதி அதே பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு ராஜகண்ணன் சென்றார். அப்போது  அவரை, நான்கு பேர் கொண்ட மர்மக் கும்பல், கத்தியைக் காட்டி மிரட்டி செல்போனை பறிக்க முயன்றது. அவர்களிடம்  ராஜகண்ணன் போராடினார். இதனால் ஆத்திரமடைந்த அந்தக் கும்பல், ராஜகண்ணனை  கத்தியால் குத்தியது. அதில் வயிறு, கழுத்துப் பகுதிகளில் வெட்டுக்காயங்கள் ஏற்பட்டன. இந்தச் சம்பவத்தைப் பார்த்த பிரசாந்த் என்பவர் ராஜகண்ணனுக்கு உதவினார். இதனால் அவரையும் அந்தக் கும்பல் கத்தியால் குத்தியது. 

கத்திக்குத்து

ரத்த வெள்ளத்தில் ராஜகண்ணன் சம்பவ இடத்திலேயே மயங்கினார். பிறகு அவரின் கையிலிருந்த செல்போனை பறித்துவிட்டு அந்தக் கும்பல் தப்பியது. இதுகுறித்து சங்கர்நகர் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸார், ராஜகண்ணனையும் பிரசாந்தையும் மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு ராஜகண்ணனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சை பலனளிக்காமல் இன்று அவர் இறந்தார். பிரசாந்த் சிகிச்சை பெற்றுவருகிறார். .
 ராஜகண்ணன் வழக்கை முதலில் கொலை முயற்சி வழக்காக போலீஸார் பதிவு செய்தனர். தற்போது அதைக் கொலை வழக்காக  மாற்றியுள்ளனர். ராஜகண்ணனைக் கொலை செய்த கும்பலை போலீஸார் தேடிவருகின்றனர். 

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``சம்பவத்தன்று ராஜகண்ணனிடம் தகராறு செய்தவர்கள் யாரென்று விசாரித்துவருகிறோம். அவர்களை அடையாளம் காண அந்தப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்துவருகிறோம். ராஜகண்ணனிடமிருந்து செல்போனைப் பறிக்க கத்தியைக் காட்டி மிரட்டும் காட்சிகளும் அவர்களிடம் ராஜகண்ணன் போராடும் காட்சிகளும் பிரசாந்த்துக்கு கத்திக் குத்து விழும் காட்சிகளும் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளன. இந்தச் சம்பவத்தை அதிர்ச்சியுடன் மற்றவர்கள் பார்க்கின்றனர். செல்போனைப் பறித்த கும்பல் அங்கிருந்து தப்பிச் செல்கின்றனர். இதனால் அவர்களை விரைவில் பிடித்துவிடுவோம்" என்றனர். 

 செல்போனுக்காக நடந்த கொலை சம்பவம் பொழிச்சலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.