`பேச ஆரம்பித்தார், வேட்டியை மிதிச்சிட்டாங்க!'- நிர்வாகிகளால் அப்செட்டான ஓ.பி.எஸ் | O.P.S. upset while campaign

வெளியிடப்பட்ட நேரம்: 15:25 (05/04/2019)

கடைசி தொடர்பு:08:56 (06/04/2019)

`பேச ஆரம்பித்தார், வேட்டியை மிதிச்சிட்டாங்க!'- நிர்வாகிகளால் அப்செட்டான ஓ.பி.எஸ்

நீலகிரி தொகுதி அ.தி.மு.க வேட்பாளர் தியாகராஜனை ஆதரித்து பிரசாரம் செய்ய, நேற்று முன்தினம்  இரவே ஊட்டி வந்து தனியார் ஓட்டலில் தங்கினார் துணை முதல்வரும் அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளருமான பன்னீர்செல்வம்.

நீலகிரியில்  ஓபிஎஸ் பிரசாரம்

வரும் 10-ம் தேத, ஊட்டியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரசாரத்தில் ஈடுபட உள்ளதால், ஓ.பி.எஸ் கூடலூர் பந்தலூரில் பிரசாரம் செய்ய முடிவுசெய்தார். காலை 8 மணிக்கெல்லாம்  களத்துக்கு கிளம்பத் தயாரானார். தற்போதைய அ.தி.மு.க நீலகிரி மாவட்ட செயலாளர் புத்திசந்திரன் மீது அதிருப்தியில் இருந்த குந்தா ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள், ஓ.பி.எஸ் தங்கியிருந்த ஓட்டலின் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஒரு வழியாகப் பேசி சமாதானப்படுத்தி அனுப்பிவைத்தார். பின்பு, ஊட்டியில் தனது பேத்தி படிக்கும் தனியார் பள்ளிக்குச் சென்று இரண்டு மணி நேரம் தாமதமாக கூடலூர் பிரசாரத்திற்குக் கிளம்பினார். செல்லும் வழியில் நடுவட்டம் அருகே, அவரது பிரசார வாகனம் நடுரோட்டில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. நல்ல வேலையாக அவர் பிரசார வாகனத்தில் இல்லை.

கவிழ்ந்து கிடக்கும்  ஓபிஎஸ் பிரசார வேன்

அவர் வேறு காரில் சென்றுகொண்டிருந்தார். பின்னர், அவசரகதியில் பிரசாரத்திற்கு வேறு வாகனம் தயார் செய்யப்பட்டது. 3 மணி நேரம் காத்திருந்த தொண்டர்கள், வெயிலில்  கடுப்பாகி கிளம்பத் தொடங்கினர். அவசர அவசரமாக கூடலூரில் பரப்புரையைத் தொடங்கினார். ஓ.பி.எஸ் பேச ஆரம்பித்தபோது, அருகில் இருந்தவர்கள் அவரின் வேட்டியை மிதித்ததில் அவிழ்ந்தது. உடனே சுதாரித்து, பேச்சை நிறுத்தி வேட்டியைச் சரிசெய்து இருக்கமாகப் பிடித்துக்கொண்டார். கூடலூரில் பேசிவிட்டு பந்தலூருக்குக் கிளம்பினார். ஓ.பி.எஸ் கிளம்பிய சற்று நேரத்தில் தேர்தல் விதிமுறையை மீறி வாக்காளர்களுக்கு ஸ்டீல்  தட்டு, குடம் போன்ற பொருள்களை வழங்கியதாக வழக்குப் பதிவு செய்து, பொருள்களை பறிமுதல்செய்தனர் தேர்தல் பறக்கும்படையினர். இவ்வளவு களேபரத்தால், நீலகிரித் தொகுதி பிரச்னைகளை மக்களிடம் அதிகம் பேசாமல் அப்செட்டில் சென்றார்.