`மோடிக்கு வாக்களிக்கலன்னா பாகிஸ்தான் குண்டுபோட்டுக் கொன்னுடும்!'-ஏ.சி.சண்முகத்தின் அணுகுண்டுப் பிரசாரம் | A.C.Shanmugam election campaign in vellore

வெளியிடப்பட்ட நேரம்: 15:59 (05/04/2019)

கடைசி தொடர்பு:08:56 (06/04/2019)

`மோடிக்கு வாக்களிக்கலன்னா பாகிஸ்தான் குண்டுபோட்டுக் கொன்னுடும்!'-ஏ.சி.சண்முகத்தின் அணுகுண்டுப் பிரசாரம்

‘‘மோடி மீண்டும் பிரதமராகாமல் போனால், பாகிஸ்தான்காரன் குண்டுபோட்டு நம்மையெல்லாம் கொன்றுவிடுவான்’’ என்று வாக்காளர்களைப் பயமுறுத்தி, ஏ.சி.சண்முகம் பிரசாரம் செய்துவருகிறார்.

ஏ.சி.சண்முகம் பிரசாரம்

வேலூர் நாடாளுமன்றத் தொகுதி அ.தி.மு.க கூட்டணிக் கட்சி வேட்பாளர் ஏ.சி.சண்முகம், தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார். கே.வி.குப்பத்தில் பேசிய அவர், ‘‘என்னை வெற்றிபெறச் செய்தால், இந்த நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட 6 சட்டமன்றத் தொகுதிகளிலும், ஏ.சி.எஸ் பெயரில் இலவச திருமண மண்டபங்களைக் கட்டித்தருவேன். ஆரணி, சென்னை, பெங்களூருவில் எனக்கு நிறையக் கல்லூரிகள் உள்ளன. நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த 600 மாணவ, மாணவிகளுக்கு இலவசமாக சீட் கொடுத்து படிக்கவைப்பேன். எதிரணி வேட்பாளரான துரைமுருகனின் மகன் கதிர்ஆனந்தும் கல்வி நிறுவனம் நடத்துகிறார். அதில், வெறும் 50 பேருக்குக்கூட இலவசமாக சீட் கொடுக்க மாட்டார் துரைமுருகன். தர்மம் தலை காக்கும் என்று எம்.ஜி.ஆர் சொல்லியிருக்கிறார். தலைவரின் வழியில் நான் பயணிக்கிறேன். 

எம்.எல்.ஏ மற்றும் எம்.பி-யாக இருந்திருக்கிறேன். என் வாழ்நாளில் லஞ்சமே வாங்கியதில்லை. முதியோர் இல்லங்களை நடத்துகிறேன். ஆதரவற்ற குழந்தைகளைத் தத்தெடுத்து படிக்கவைக்கிறேன். ஒன்றை மட்டும் தெளிவாகப் புரிந்துகொள்ளுங்கள். மோடி மீண்டும் பிரதமராக வந்தால்தான் இந்தியா வல்லரசு நாடாகும். பாதுகாப்பாகவும் இருக்கலாம். மோடி வரவில்லையென்றால், பாகிஸ்தான்காரன் குண்டுபோட்டு நம்மையெல்லாம் கொன்றுவிடுவான். இதுபோன்ற பிரச்னைகளை மோடி மட்டும்தான் வலுவாகத் தடுக்கக்கூடியவர். அவரின் கேபினட்டில் அன்புமணி அமைச்சராக அமரவேண்டும். மோடி மீண்டும் ஆட்சிக்கும் வரவேண்டும் என்றால், வேலூரில் ஏ.சி.சண்முகம் ஜெயிக்க வேண்டும்’’ என்றார்.