`தேர்தல் செலவுக்கு ரூ.50 லட்சம் லோன் வேணும்; எம்.பி ஆனதும் கடனை அடைக்கிறேன்!'- வங்கியை அதிரவைத்த சுயேச்சை வேட்பாளர் | namakkal mp election candidate seeks loan from bank for election expense

வெளியிடப்பட்ட நேரம்: 16:54 (05/04/2019)

கடைசி தொடர்பு:08:56 (06/04/2019)

`தேர்தல் செலவுக்கு ரூ.50 லட்சம் லோன் வேணும்; எம்.பி ஆனதும் கடனை அடைக்கிறேன்!'- வங்கியை அதிரவைத்த சுயேச்சை வேட்பாளர்

``தேர்தல் செலவுக்காக 50 லட்ச ரூபாய் கடன் வேணும்'' என்று சுயேச்சை வேட்பாளர் ஒருவர், காந்தி வேடமிட்டு வங்கியில் லோன் கேட்டு விண்ணப்பித்துள்ளார். இது, நாமக்கல்லில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

தேர்தல் செலவுக்கு விண்ணப்பித்துள்ள நாமக்கல் சுயேச்சை வேட்பாளர் ரமேஷ்

நாமக்கல் மக்களவைத் தொகுதி சுயேச்சை வேட்பாளராக ரமேஷ் என்பவர் போட்டியிருகிறார். இவர், தேர்தல் செலவினங்களுக்கு ரூ.50 லட்சம் லோன் கேட்டு தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் விண்ணப்பித்துள்ளார். மகாத்மா காந்தி வேடத்தில் வந்து இவர் விண்ணப்பித்ததுதான் ஹைலைட். இதுகுறித்து அவரிடம் பேசியபோது, ``என் பெயர் ரமேஷ். நாமக்கல் மக்களவைத் தொகுதியில் 'அகிம்சா சோஷியலிஸ்ட் கட்சி' சார்பில்,  சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிடுகிறேன். காந்தியக் கொள்கை வழியில் நடப்பவன். யோகா ஆசிரியராகவும், விவசாயத்தையும்  முழு நேரத் தொழிலாகச் செய்கிறேன். மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர், ரூ.70 லட்சம் வரை செலவழிக்க இந்தியத் தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது. மக்களை சந்தித்தல்,விளம்பரங்கள் செய்தல், பிரசாரம் மேற்கொள்ளுதல் உள்ளிட்டவற்றை மேற்கொண்டால் மட்டுமே, தேர்தலில் வெற்றிபெறுவதற்கான வாய்ப்பு உண்டு. 

அதற்காக, 6 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கும் தேர்தலையொட்டி செலவழிக்க எனக்கு ரூ.50 லட்சம் தேவைப்படுகிறது. நாமக்கல் தொகுதியில் வெற்றிபெற்றவுடன், எனக்குக் கிடைக்கும் எம்.பி  ஊதியத்தைக் கொண்டு கடனைத் திரும்பச் செலுத்துவேன். இதற்காக, மத்திய அரசு அளித்துள்ள ஆதார் அட்டை, பாஸ்போர்ட் போன்ற ஆவணங்களை வங்கியில் ஒப்படைத்துள்ளேன். வங்கியின் அனுமதியில்லாமல் வெளிநாட்டுக்குப் பயணம் செய்ய மாட்டேன். 17-வது மக்களவைத் தேர்தலில், நாமக்கல் தொகுதியில் போட்டியிடும் எனக்குக் கடன் வழங்கி, வங்கி நிர்வாகம் உதவ வேண்டும் என்று கோரிக்கை விடுத்தேன். அதற்கு வங்கி அதிகாரிகள், எனது மனுவை பரிசீலித்து நடவடிக்கை எடுப்பதாகக் கூறியிருக்கிறார்கள்'' என்றார். 

தேர்தல் செலவுக்கு லோன் கேட்டு சுயேச்சை வேட்பாளர் ஒருவர் விண்ணப்பித்த சம்பவம், வங்கி ஊழியரை அதிரவைத்துள்ளது.


 

நீங்க எப்படி பீல் பண்றீங்க