`கட்டைப்பையும், அவரது வேட்டிக்குப் பின்னால் ஒளிந்திருக்கிற கைத்தடியும்!'- இரண்டுபேரை விளாசிய செந்தில் பாலாஜி | Senthil Balaji slams thambidurai and mr vijayabaskar

வெளியிடப்பட்ட நேரம்: 17:40 (05/04/2019)

கடைசி தொடர்பு:08:56 (06/04/2019)

`கட்டைப்பையும், அவரது வேட்டிக்குப் பின்னால் ஒளிந்திருக்கிற கைத்தடியும்!'- இரண்டுபேரை விளாசிய செந்தில் பாலாஜி

"தம்பிதுரை, கரூர் நாடாளுமன்றத் தொகுதி மக்களுக்கு என்னென்ன திட்டங்களைக் கொண்டுவந்தார் என்று மாணவர்களிடம் காலாண்டுத் தேர்வில் கேள்வி கேட்டால், முழு ஆண்டுத் தேர்வு முடிந்தாலும், எந்த கோனார் நோட்ஸிலும் விடை கிடைக்காது!" என்று கரூர் பொதுக்கூட்டத்தில் காட்டமாகப் பேசினார் செந்தில் பாலாஜி.
 

கரூர் பிரசார பொதுக்கூட்டத்தில் செந்தில் பாலாஜி

கரூர் நாடாளுமன்றத் தொகுதியில், தி.மு.க கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணியை ஆதரித்து வாக்குகள் சேகரிக்க, தி.மு.க தலைவர் ஸ்டாலின் கரூர் வருகைதந்தார். கரூர் திருமாநிலையூரில் இருந்து ராயனூர் செல்லும் வழியில் உள்ள திடலில், மிகப்பிரமாண்டமாக அந்தப் பிரசாரக் கூட்டத்திற்கு எற்பாடுசெய்திருந்தார், தி.மு.க மாவட்டப் பொறுப்பாளர் செந்தில்பாலாஜி. பொதுக்கூட்ட மேடைக்கு வந்த ஸ்டாலினுக்கு, கரூர் மாவட்ட தி.மு.க  சார்பில் மூன்று இடங்களில் தடபுடலான  வரவேற்பும் கொடுக்கப்பட்டது. தலைக்கு 200 கொடுத்து, 40,000-க்கும் மேற்பட்ட மக்களை அவர் இந்தப் பிரசார பொதுக்கூட்டத்திற்கு செந்தில் பாலாஜி திரட்டிவந்ததாகச் சொல்லப்பட்டது.

ஸ்டாலின்

வெயில் காலையிலேயே கொளுத்தி எடுத்ததால், வந்திருந்த மக்களுக்கு தண்ண்ர் பாட்டில்கள் வழங்கப்பட்டன. ஆனால், பலரும் வெயில் கொடுமை தாங்கமுடியாமல் மயங்கிச் சரிந்தனர். இதனால், ஸ்டாலின் பேசத் தொடங்கிய சிறிது நேரத்திலேயே கூட்டம் கலையத் தொடங்கிவிட்டது. அவர் பேசி முடித்தபோது சொற்ப கூட்டமே மிச்சமிருந்தது. இந்த பொதுக்கூட்டத்தில் முதலில் பேசிய செந்தில் பாலாஜி, "ஸ்டாலின் செல்லும் இடங்களில் எல்லாம் அமோகமாக கூட்டம்வருகிறது. ஆர்ப்பரித்து இளைஞர்கள் வருகிறார்கள். இந்த நிலையைப் பார்க்கும்போது, பிரதமர் யார் என்பதை சுட்டி, அமரவைக்கும் இடத்தில் ஸ்டாலின் இருக்கிறார் என்பது புரிகிறது. அதேபோல், அடுத்த தமிழக முதல்வர் பதவியில் அவர்தான் அமரப்போகிறார் என்பதும் தெரிகிறது.

கரூர் பிரசார பொதுக்கூட்டத்தில் மக்கள்

அதற்காக, கரூர் மாவட்ட வாக்காளர்கள் காத்திருக்கிறார்கள். ஏற்கெனவே, நாம் ஸ்டாலினை அழைத்துவந்து நடத்திய பிரமாண்ட பொதுக்கூட்டத்தைப் பார்த்தே இங்குள்ள கட்டப்பையும் (தம்பிதுரை), அவரது வேட்டிக்குப் பின்னால் ஒளிந்திருக்கிற அவரது எடுபிடியையும் (போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்) பயந்துபோக வைத்திருக்கிறது. ஊமைக்குத்தாய் உள்ளுக்குள் அவர்களுக்கு வலிக்கவைத்திருக்கிறது. கரூர் நாடாளுமன்றத் தொகுதியிலோ அல்லது கரூர் மாவட்டத்தில் உள்ள ஏதேனும் சட்டமன்றத் தொகுதியிலோ இந்த கட்டப்பையும், அவரது வேட்டிக்குப் பின்னால் ஒளிந்திருக்கிற கைத்தடியும் செய்த நல்ல திட்டம் ஏதாவது இருக்கிறதா என்று மாணவச் செல்வங்களிடம் காலாண்டுத் தேர்வில் கேட்டால்கூட, முழு ஆண்டுத்தேர்வு முடியும் வரை எந்த கோனார் நோட்ஸிலும் தேடினாலும் விடை வராது. மக்களை சந்திக்கத் தைரியமற்ற அரசியல்வாதிகளின் நாற்காலிகளை நமது வாக்கினால் சிதற வைப்போம். தளபதியை ஆட்சியில் அமரவைப்போம்" என்று அதிரடியாகப் பேசி முடித்தார்.